ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

வைரஸ்

 வைரஸ்

________________________________ருத்ரா


இது

வாழ்க்கையா?

உயிரா?

உயிராய்ப்பார்க்கும்போது

இரத்த அழுத்தம் சொல்லும்

பாதரச பூனைக்கண்கள்

எண்களாய்

ரப்பர் குமிழ்களை

பிசுக்கு பிசுக்கு என்று

பிசுக்குகிறது.

வாழ்க்கையைப்பார்க்கும் போது

கையில் பிடிக்கமுடியாத வானமாய்

ஆசை..பேராசை எல்லாமே

"ஆயிரங்கண்"வலை கொண்டு

போர்த்துகிறது.

கூட்டிப்பெருக்கிய‌

குப்பையாய் 

கனவுகள் தெருமுனையில்

எறியப்படுகின்றன.

தூசிகளின் விஞ்ஞானம் தான்

கருந்துளையும் விண்வெளியும் என்று

கணித சூத்திரம் சொல்லும்

விஞ்ஞானியே!

என்னை அப்படி ஒரு தூசியாய்

பல கோடி ஒளியாண்டு தூரத்துக்கு

ஒரு குவாண்டம் டெலிபோர்டேஷன் செய்து

அனுப்பி விடு.

அப்போதும்

நான் மனிதனின் கண்களில் தான்

மேய்ந்து கொண்டிருக்கவேண்டும்.

அந்த காட்சிகளுக்குள்

நான் பொதிந்துகிடக்கவேண்டும்.

உயிர் கழன்றபின்னும் 

வாழ்க்கை எனும்

எனும் ஒரு நுண்வைரஸ்

அதோ அந்த மேகங்களில்

அல்லது 

ஓடும் வாய்க்காலின் பளிங்கு சிலேட்டில்

தன் கூரிய அலகால்

சிவப்பு நீல வண்ணத்தில்

முங்கியெழும் மீன்கொத்தியின்

சிறகுத்துடிப்பாய்

அல்லது

எவனாவது எவளாவது

தன் இளம்பருவ மூச்சுக்குமிழிகளில்

செதுக்கும் ஏக்கச்சிற்பத்தின்

வரி வடிவாய்

உலவிக்கொண்டிருக்கவேண்டும்

என் கூரிய பார்வைகளுடன்.


______________________________________________



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக