ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

கழுமரத்தின் மீது ஒரு கவிஞன்

 கழுமரத்தின் மீது ஒரு கவிஞன்

____________________________________


எழுதிக்கொண்டிருக்கும் போதே

கவிதையை முடிக்கும் முன்

அந்தப் பேனா

முறிந்து விழுந்தது.

திட்ட ஆரம்பித்து விட்டது.


"ஏண்டா?

உனக்கு கொஞ்சமாவது

ரோஷம் இருக்கா?

எனக்கு 

வாய் இல்லேங்கிறத்துக்காக‌

நீ 

இப்படிக்கிறுக்கிக் குவிச்சா

என்ன அர்த்தம்?

ஏதாவது ஒரு "தொகுப்பு"

போட்டிருக்கிறாயா?

உனக்கு ஏதாவது அங்கீகாரம் 

உண்டா?

என் குறுக்கை இப்படி

உடைக்கிறாயே

தினம் தினம்!

நீ மழுங்கிக்கிடக்கிறதும் 

இல்லாம‌

இந்த நிப்பு முனைக்கு

நேர்த்திக்கடன் இருக்கிற மாதிரி

தினம் தினம் 

மொட்டையடிச்சு

வழிச்சு வழிச்சு சந்தனம் பூசுறியே!

எல! அடுக்குமால இது.

அந்த திருச்செந்தூரு முருகன் 

கேப்பாம்ல.

இந்தாக்ல ஒரு பரிகாரம் பண்ணா

நீ பொள‌ச்சுக்குவல!

எல! நீ உக்காந்துருக்கிற இடத்துல‌

மொதல்ல‌

ஒன்ன விட ஒயரமா

ஒரு குப்பக்கூடய வச்சுகிட்டு

அதுல‌

எளுதி எளுதிப் போடுல!"

அந்தக்கவிஞனாகிய‌

நான் 

வேறு ஒன்றும் செய்யவில்லை.

ஒரு கழுமரத்தில் ஏறிக்கிடந்து

கழுகுகளுக்காக‌

காத்திருக்கிறேன்.


________________________________________

ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக