அவள் வருவாள்?
________________________________ருத்ரா
சட்டையில்
பொத்தானை அடிக்கடி
திருகி விடுகிறேன்.
இன்றைக்குத்தான் ஷேவ் செய்த
மீசை அருகே உள்ள மழ மழப்பை
தடவிப் பார்த்துக்கொள்கிறேன்.
பைக்குள் கைவிட்டு
அந்த கைக்குட்டைக்குள்
முகம் புதைக்கிறேன்.
அதில் ஏதோ தென்காசி அருகே உள்ள
இலஞ்சியின் அந்த பளிங்குச்சுனையில்
என் முகத்தோடு அகத்தையும் சேர்த்து
தோய்த்தாற்போல்
ஒரு உணர்வு.
முகமூடிப்பெண்கள் எத்தனையோ பேர்
இரு சக்கர வாகனத்தில்
கடந்து போய் விட்டார்கள்.
"இதுவும் கடந்து போகும்..."
எவன் எழுதினானோ
அது தான் தலைக்குள்
கிர் கிர் என ஒலியெழுப்பும்
அந்த சிறுவயது பொம்மையாய்
எனக்குள் விம்மிச்சுற்றுகிறது.
செல்லை "க்ளிக்கி"
டைம் பார்த்தால்.
இன்னும் அது
ஏழு இருபத்தொன்பதிலேயே நிற்கிறது.
அது எப்போது
எட்டு பத்து ஆவது?
எப்போது
தூரத்தில் வரும் அவளது அந்த
"வழுக்கு உந்தை"
எட்டிப்பார்ப்பது?
வாழ்க்கைப் புத்தகத்தின்
கனத்த புத்தகங்களில்
அவ்வளவும் இப்படி
காலியான வெள்ளைப்பக்கங்கள் தானா?
மில்லியன் கணக்காய் அதில்
கனவுகளை மொய்க்க விட்டபோதும்
அந்த மூளிவானத்தில்
வானவில் தோன்றப்போகும்
சுவடுகள் மட்டுமே அந்த வானத்தை
உழுது போட்டது போல்
ஆக்கி இருக்கின்றன.
வெறுமையே அழகு என்று
பொறுமையே
அடிக்கடி கம்பியூட்டரில் தடவும்
பாஸ் வர்டு என்று
நின்று கொண்டிருக்கிறேன்.
இனியும் டைம் பார்த்தால்
அது 7 29.999999
என்று காட்டிக்கொண்டிருக்கும்.
காதலே வா வா என்று
ஏக்கத்தோடு
அழைத்துக்கொண்டிருக்கிறேன்.
எப்போது அவள் வருவாள்?
இது
ஒரு "நேனோ யுக"க் கல்வெட்டு
ஆகிப்போனது.
__________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக