சுட்டபழம் வேண்டுமா?
_____________________________________ருத்ரா
முருகன் அன்றே கேட்டானே
சுட்டபழம் வேண்டுமா?
சுடாத பழம் வேண்டுமா?
என்று.
பக்குவப்படாத அறிவு தானே
சுடாத பழம்.
பக்குவம் அடைந்தால்
கடவுள் யார் என்ற
கேள்வி எனும் சுட்டபழமே
உனக்குள் சுடர் காட்டும்!
பிரணவம் என்பது
பிரள்ணவம் எனும்
தமிழ்ச்சொல் தான்.
மூச்சு பிரண்டால்
முக்தி தான்.
ஆம்.
தமிழ்க்கடவுள் அன்றே எச்சரித்தான்.
தமிழா!
உன் தமிழ் மூச்சு பிரண்டால்
அப்புறம் நீ மிலேச்சன் ஆகி விடுவாய்!
நானும் "சுப்ரஹ்மண்யன்"ஆகி
உனக்கு அந்நியன் ஆகிவிடுவேன்.
நக்கீரன் கரடு முரடாய்
ஒரு தமிழ் அருவி பொழியவிட்டானே
திருமுருகாற்றுப்படை என்று
அதுவே
உன் படைபலம்.
வடபுலம் உன்னை வத்தலாய்ச்சுருக்கும் முன்
தமிழ்க்கடலாய் பொங்கி எழு.
இந்த சூர சம்ஹாரம் எனும்
பொம்மை விளையாட்டை
அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்.
தமிழா!
உன்னை அசுரனாக்கி
உன் நெஞ்சுக்கூட்டின் மஞ்சாச்சோற்றை
குதறத்துடிக்கும்
அந்த வடபுராணக்குப்பைக்கூளங்களை
சொக்கப்பனை கொளுத்து!
உன் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்
சொல்லாத ஒலி அழகுகளா?
இந்த மந்திரக்கூச்சல்.
இவர்களின்
சோளத்தட்டை வேலா
உன் வீரத்தை எதிர்கொள்வது?
வெற்றி வேல்!வீர வேல்!
உலகத்தமிழாய் உலகையே
சிலிர்க்கச்செய்யும்
உன் செந்தமிழ்ப்பாட்டின் முன்
இந்த யாத்திரைகள் என்ன செய்யும்?
வெறுமே ஆத்திரமூட்டும்.
அவர்கள் கத்திகளை தீட்டிக்கொள்ளட்டும்.
தமிழா! நீ புத்தியை தீட்டு.
புது வானம் தேடு.
புது விடியல் கூடு.
வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!
_______________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக