தீபாவளி வாழ்த்துக்கள்
___________________________________ருத்ரா
மனிதனே அரக்கன்.
அவன் கடவுளைப்பற்றி
கேள்வியெல்லாம் கேட்கிறான்.
கடவுளின்
தகப்பன் யார்? தாய் யார்?
என்றெல்லாம் கேட்கிறான்.
இது அடுக்குமா?
பிராமணன் கேட்கிறான்.
அடுக்காது சாமி?
அடேய்.இவன்
எங்களை ஆள
நாளை நீ யார் என்று
கேட்பான்?
ஆமாம் சாமி!
என்றான் க்ஷத்திரியன்.
ஐஸ்வரியம் வச்சிருக்கிறவாளைப்
பார்த்து
நாளை உங்கள் செல்வத்தையெல்லாம்
கொள்ளையடிப்பான்
என்றான்
ஆமாம் ஸ்வாமி என்றான்
அந்த "வைஸ்யன்"
காயத்ரி மந்திரம் சொல்லிக்கொண்டே..
பூணூலை உருவி விட்டுக்கொண்டே..
இப்போது
என்ன செய்யலாம்?
என்றார்கள்.
கூட்டணி உருவாயிற்று.
மூன்று பேரும் நூல் போட்டுக்கொண்டார்கள்.
முதல் நூல் போட்டுக்கொண்டவன்
நானே அந்த ஆண்டவன்.
நீங்கள் என்னை பாதுகாப்பதன் மூலம்
உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
என்றான்.
துப்பாக்கி தயார் ஆயிற்று.
குண்டுகளாய் இருந்தவன் பிராமணன்.
மற்றவர்கள் ஆயுதங்கள்.
நான்காவது வர்க்கம் அடித்து
நொறுக்கப்பட்டது.
மனிதனே இலக்கு ஆகினான்.
அவன் சூத்திரன் ஆனான்.
அவன் அரக்கன் ஆனான்.
மனிதன் கடவுளால் பிறப்பிக்கப்பட்டவன்
என்று சொல்லிக்கொண்டிருந்தவன்
அந்த கடவுள் புத்திரர்களைக்கூட
கசாப்பு செய்ய தயங்கவில்லை.
ஆதிக்க வெறியே
அவர்கள் நாடி நரம்பெல்லாம்
முறுக்கேறியது.
"நரன்" எனப்பட்டவன்
நார் நாராய் கிழிக்கப்பட வேண்டியவன்
என்றார்கள்.
உழைக்கும் மனிதனின்
சிந்தனையும் அறிவோடு
கிளர்ந்தெழ ஆரம்பித்தது.
நரன் கொடும் அரக்கன் என்று
புராணங்களின் புற்றீசல்
புறப்பட்டது.
அவை இந்த மண்ணை மொய்த்தன.
விண்ணை மறைத்தன.
சூரியன் கூட
குருடன் ஆனான்.
எங்கும் கும்மிருட்டு.
மூன்று நூல் கூட்டணி மட்டும்
எல்லாம் தன் உடைமை ஆக்கிக்கொண்டன.
ஆயிரம் ஆயிரம் வருடங்கள்
இந்த கொள்ளை இருட்டில்
மின்மினிப்பூச்சிகளாய்
அறிவின் கசிவு வெளிச்சம்
கொஞ்சம் வழி காட்டியது.
ஆனாலும்
"நரகாசுரன்" எனும்
அந்த பலூன் பொம்மை மட்டும்
ஊதிக்கொண்டே போகிறது.
அது வெடிக்கிறது.
அது மீண்டும் ஊதப்படுகிறது.
அவர்கள் சொல்வது போல்
நீங்கள் வெடிக்கிறீர்கள்.
மீண்டும் ஊதப்படுகிறீர்கள்.
இந்த பொய்மையின் "பிக்பேங்க்" தான்
வேத விஞ்ஞானம் என்று
சாசனம் எழுதப்படுகிறது.
உங்களை நீங்களே நசுக்கிக்கொல்ல
அந்த பட்டனைத்தட்டிக்கொண்டே
இருக்கிறீர்கள்.
அந்த "பொட்டு வெடிகளில்"
நீங்கள் புகைந்து கரைந்து போக
துடிக்கிறீர்கள்!
வெடிக்கிறீர்கள்!
வெடித்துச்சிதறியதில்
வாசல்கள் தோறும்
காகித சவங்கள்.
சரி!
ரொம்ப ரொம்ப சந்தோஷம்.
எல்லோரும்
தீபாவளி கொண்டாடுங்கள்.
தீபாவளி வாழ்த்துக்கள்!
_______________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக