தமிழ்நாடு தினம்
______________________________ருத்ரா
புல்லரிக்கிறது.
கிளர்ந்தெழுகிறது நெஞ்சம்.
தமிழ்ப்பற்றாளர்களின்
போராட்டங்களை
நாம் நினைவு கூர வேண்டும்.
ஆனால்
இது வெறும்
ஒரு நாள் கூத்து அல்ல?
நம் உணர்வில்
நம் தெளிவில்
நம் வரலாற்றில்
நம் தமிழில்
சலங்கை கட்டி
ஆடிக்கொண்டே இருக்கவேண்டும்.
அதன் பரல்களின் எல்லாம்
தமிழின் இதயத்துடிப்புகளின்
நம் உயிரொலி கேட்டுக்கொண்டே
இருக்கவேண்டும்.
உலகில் தமிழின் தொன்மை வெளிச்சத்தின்
சுடரேந்தியாய் உள்ள
திரு.ஒரிஸ்ஸா பாலு அவர்கள்
சொன்ன ஒரு குறிப்பு
நம்மை இன்னும் நிமிர வைக்கிறது.
தமிழ் நாட்டு ஊரின் பெயர்கள்
பேச்சு வடிவங்கள் எல்லாம்
உலகின் பெரும்பான்மை நாடுகளில்
தூவிக்கிடக்கின்றன என்கிறார்.
எல்லாக்கடலின்
திரைகளையும் தன் நாடித்துடிப்பாக்கி
திரை மீள்வன் ஆகினான் தமிழன்.
அதாவது திரைமீளன் என்பது
வடமொழியில் "த்ரமிளம்"ஆகி
தமிழம் ஆகி தமிழகம் ஆகியதும்
ஒரு வரலாறு தான் என்கிறார்.
அலைகள் தவளும் கடலோரம்
தமிழனின் இருப்பிடங்கள் ஆகி
புகழ் வளர்த்து "திரையிடத்தான்"ஆன பின்
திராவிடன் ஆகியிருப்பானோ?
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
என்று
பஞ்ச் டைலாக்குக்காக
கணியன் பூங்குன்றன்
சொல் உதிர்க்க வில்லை.
பல்மொழி அழகினையும் பருகியவன்
தமிழன்.
சோமக்கள் பருகி உலக ஒலிப்புகளையும்
"காக்டெயிலாக" அவன் கலக்கி அடித்ததே
சமஸ்கிருதம் ஆகி யிருக்கலாம்.
எப்படியிருப்பினும்
என் இனிய
"தமிழ் நாடே"
இந்த அகன்ற "வளை நரல் பௌவமே"
உன் உடுக்கையாய்
உயிர் விரிப்பாய் பாய் விரித்து
அதில் நீ பயணித்து
உலகம் ஆண்டாய்.
ஆதிக்க வெறியாளர்கள்
ஒன்றரை லட்சம் தமிழர்களின்
உயிர் குடித்தனரே!
அந்த ஈழம் என்னும் சொல் தான்
"அக்கினிம் ஈழேம் ப்ரோஹிதம்"
என்று ரிக் வேதத்தில்
முதன் முதலாய் ஆரம்பிக்கிறது.
அவர்கள் வேறு அர்த்தங்கள்
சொல்லிக்கொண்டிருந்தாலும்
தமிழ் ஒலிப்பின் வேர்கள்
நிறைய அதில் ஊடுருவியுள்ளன.
அதிலிருந்து தமிழ் கிளைத்தது என்றால்
ஒரு வாதத்துக்கு வைத்துக்கொண்டாலும்
அதுவும் கி.மு 1500 லிருந்து தானே
ஒலித்துக்கொண்டிருக்கும்.
அப்புறம் எப்படி
தமிழ் தோன்றியது
கி.பி ரெண்டு மூன்று
நூற்றாண்டுகள் என்று
"நூல்" விடவேண்டும்?
கல் எனும் சொல்லில்
தீயைக்காட்டியவனும்
கல் எனும் சொல்லில்
அறிவை கொளுத்தியவனும்
தமிழனே !
அதையே இவர்கள்
"யாகம்"
வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் நாடு என்பதில்
இந்த உலகமே பொதிந்து கிடக்கிறது
என்ற தொன்மை இன்னும்
கூராகி
குருட்டு வரலாற்றின் இருள் கிழிக்கிறது.
பனியுகம் பல ஊழிகள்
முன் தோன்றியது.
அது உருகி
பூமி மீண்டும்
தன் உடையை உடுத்துக்கொண்ட போது
முதலில் கல் எனும் மலை தோன்றும்
பின்னர் மண் பரப்பு தோன்றும்.
அப்படி
கல் தோன்றி மண் தோன்றாக்காலத்தேயும்
முன் தோன்றிய தமிழ்
என்பதை "கலாய்ப்பவர்கள்"
அந்த புராணங்களை மட்டும்
கன்னத்தில் போட்டுக்கொண்டு
பயபக்தியாய் வணங்குவதேன்?
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு
முந்திய வரலாறு கொண்ட
தமிழை
இந்த "அர்ச்சனைக்கூச்சல்" வாதிகளா
புறந்தள்ளுவது?
சீற்றம் கொள்கிறது
தமிழ் நெஞ்சம்!
பெருமிதம் பொங்க ஒலிக்கின்றோம்
தமிழ் நாடு என்று!
தமிழ் நாடு என்ற தமிழ் உலகே !
உனக்கு எங்கள்
மன்மாழ்ந்த வாழ்த்துக்கள்.
________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக