வியாழன், 12 நவம்பர், 2020

அறிவு ஜீவி அவர்களுக்கு ஒரு கேள்வி

 அறிவு ஜீவி அவர்களுக்கு ஒரு கேள்வி

_____________________________________________ருத்ரா


கமல் எனும் அறிவு ஜீவி

அவர்களே!

அறிவு எனும் பரிமாணம் 

நீங்கள் உருவாக்கியதா?

சமுதாயத்தில் மானிடம் எனும்

ஆற்றல் முதலில்

அறிவு வடிவம் பெற்ற பின் தான்

சமுதாயமே இங்கு கண் விழிக்கிறது.

இந்த சமுதாய அமைப்பை

நீங்கள் உற்றுப்பார்க்க வில்லையா?

அடிமை வர்க்கம் என்பது தான்

சூத்திர வர்க்கம் 

என்று சொல்லும் வேதவரிகளுக்கு

அழகாய் சட்டம் போட்டு

இந்த சமுதாயத்தின் மீது 

படம் மாட்டப்பட்டிருப்பதே

"கொட்டை எழுத்துக்களில் போதிக்கும்"

புத்தகமாய்

"ஒரு மனு ஸ்ம்ருதியாய்"

தெரிவது உங்களுக்கு தெரியாமல் போனது ஏன்?

இதை அறிந்த‌ 

அறிவு ஜீவியாய் இருக்கமுடியாமல்

உங்கள் மீது "கிரகணம்"பிடித்திருக்கும்

அந்த இருட்டை எப்போது விலக்கப்போகிறீர்கள்?

மனுஸ்ம்ருதி என்ற‌

புத்தகம் புழக்கத்தில் இல்லை

அதனால் அதைப்பற்றி 

பேசவேண்டியதில்லை

என்று ஒரு

"நழுவல் வாதம்" வைத்திருக்கிறீர்களே!

இப்படி ஒரு பாத்திரம் ஏற்று 

நடிக்கும் ஒரு மெகா பட்ஜெட் படம் தான்

உங்கள் "மக்கள் நீதி மய்யமா?"

உங்களது "மய்யம்" என்பதே

ஒரு கானல் மையம் தான்.

நன்மைக்கும் தீமைக்கும்

இடையே

மெய்மைக்கும் பொய்மைக்கும்

இடையே

தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் 

இடையே

நான் ஒரு மையப்புள்ளி

என்று பறை சாற்றுகிறீர்களா?

சமுதாயப்பார்வை என்ற‌

மையப்புள்ளியை கழற்றி வைத்து விட்டு

எந்த தராசை வைத்துக்கொண்டு 

இங்கே நியாயம் சொல்ல வந்திருக்கிறீர்கள்?

"நான்கு வர்ணத்தின்" நிழல் படியாத‌

தூசு துரும்பு இல்லை இந்த தேசத்தில்.

பெரும்பான்மை மக்களின் மேல் உட்கார்ந்து

நசுக்கும்

சிறுபான்மைக்கூட்டம்

கூச்சல் இடும் தத்துவமே 

இங்கு "சனாதனம்" "மனு தர்மம்"

இத்யாதி.இத்யாதி...என்பதெல்லாம்.

இதற்கு என்று

இங்கே

எந்த விகடனும் குமுதமும்

புத்தகம் போடவில்லை என்று

சும்மாவாச்சுக்கும்

அரிதாரம் தீட்டிக்கொண்டு

கட்சி நடத்தினால் போதும்

என்பது தான் 

உங்கள் அறிவி ஜீவித்தனமா?

தோளில் சுமந்திருப்பவனுக்கு

தோளில் அமர்ந்திருப்பவனே

பிரம்மா.

மேலே உட்கார்ந்து இருப்பவனுக்கு 

எல்லாம் பிரம்மானந்தம்.

சுமப்பவனை

சுமையாய் இருப்பவன்

"தொடாதே தீட்டு" என்கிறான்.

பெண்களும் இங்கு

பாவ மூட்டைகள்.

மனிதக்குஞ்சுகளை பொரித்து 

அடை காக்கும் இந்த‌

தாய்ப்பறவைகள் கூட

"பெண்மையின்" தீட்டு நீக்கப்பட‌

"தீக்குளியல்" செய்யவேண்டும் என்பதே

ஸ்லோகங்களுக்குள் 

பொதியப்பட்டிருக்கின்றன.

ஸ்த்ரீ என்பவள் "நரகத்துவாரம்"

என்றே மூர்க்கமாய் சொல்கிறது

சன்யாசம்.

நம்மைச்சுற்றி இத்தனை நச்சுப் பாம்புகளும்

தேள் மற்றும் நட்டுவாக்கிளிகளும்

இருந்த போதும்

இந்த கொசுக்கடிகளை பெரிது படுத்தலாமா

என்று

இலக்கியமாய்க்கேட்கிற‌

அறிவு ஜீவி அவர்களே!

அதர்மத்தைக் கேள்வி கேட்கிற‌

அறிவை அடகு வைத்தா

உங்கள் அரசியல் வியாபாரத்தை 

தொடங்கப்போகிறீர்கள்?


________________________________________










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக