செவ்வாய், 10 ஜூலை, 2018

எனக்கு ஒரு கடவுள் வேண்டும்.

எனக்கு ஒரு கடவுள் வேண்டும்.
===============================================ருத்ரா இ பரமசிவன்.

இந்த நாட்டில் தான் ஆயிரக்கணக்காய்
சிலைகளாக கிடக்கிறதே
என்று
ஒன்றை நான் எடுத்து
என் பாக்கெட்டில் வைத்துக்கொண்டேன்
இல்லை இல்லை
என் இதயத்துள் செருகிக்கொண்டேன்.
அது பார்த்துக்கொள்ளட்டும்
என்று என் வழிகளின் சந்து பொந்துகளைப்பற்றி
கவலைப்படாமல்
பயணம் செய்தேன்.
தினம் தினம் ஆயிரம் செய்திகள்.
மக்கள் வாழ்க்கையின் குறுக்குவெட்டுத்தொற்றம்
டிவிகளில் காட்சி ஆகிக்கொண்டிருக்கிறது.
சம்பவாமி யுகே யுகே என்று
சமஸ்கிருதம் வாந்தியெடுத்தோடு சரி.
அந்தக் காட்சிகளில்
மனித நீதியும் தர்மங்களும்
கசாப்பு செய்யப்பட்டு
தோலுரித்து தொங்கவிடப்பட்டிருந்தன.
மக்களின் வாழ்வாதாரங்களை காக்கவேண்டும்
என்று
உண்மைக்காக
அமைதியாக ஊர்வலம் வந்தவர்கள்
ஆட்சி எந்திரத்தின் துளைகள் வழியே
தின்னப்பட்டுவிட்டார்கள்.
இதில் யார் கடவுள்?
இதில் யார் சைத்தான்?
கடவுளின் முதுகுப்புறம் தான் சைத்தானா?
இந்தக்கேள்வி
பிசிறு பிசிறாக‌
சிதறடித்துக்கொண்டிருக்கிறது.
ஒட்டுமொத்தமாய் உள்ள‌
ஒரு மக்கள் சமுதாயத்தின்
மனசாட்சி எனும்
அந்த சவ்வுப்படலம் கிழிந்து கந்தலானது.
என் இதயத்தைத்தொட்டுப்பார்த்து
என் கடவுள் என் கையில் நெருடுகிறாரா
என்று தடவிக்கொண்டு
உற்றுக்கேட்டேன்.
அதில் "லப் டப்"கள்
கனத்த ஒலியாய்
ஆயிரம் ஹைட்ரஜன் குண்டுகளின் வெடிப்பாய்
ஒலிக்க‌
இந்த மண் பிய்ந்தது.
இந்த விண் பிளந்தது.
இந்த விசுவரூபத்தில்
கிருஷ்ணர்களும் ராமர்களும்
அந்த உபன்யாசங்களும் பஜனைகளும்
தூசிப்படலமாய் ஆகாயத்தையே
ஆபாசம் ஆக்கியிருந்தது.
நாய்க்குடை காளான் போல்
கரும்புகை மண்டலம் கவிந்து இருந்தது.
வழிகள் மறைந்து போனது.
பயணங்கள் கலைந்து போனது.
கடவுள்கள் காணாமல் போயினர்.

===================================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக