வெள்ளி, 27 ஜூலை, 2018

கலைஞர்


கலைஞர்
============================================ருத்ரா

அந்த கரகரப்பான குரல்....
"என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே"
என்னும் போது
இந்த மக்கள் கடல் அலையெழுப்பி
ஆரவாரம் செய்யும்.
என்?
உலக மானிட வளர்ச்சியின்
முதல் குரலும்
அதன் வரி வடிவும்
தமிழே
என்ற
அறிஞர்களின் ஆராய்ச்சியையே
நமக்கு ஒரு "ஆற்றுப்படை "ஆக்கியவர்
கலைஞரே!
தமிழ் மொழி
சாதி ஆதிக்கத்தின்
மண்ணுக்கு அடியில் கிடந்தது.
கோவில் படிக்கட்டுகளில்
சமஸ்கிருத சத்தங்களின்  கூளங்களால்
மிதிபட்டுக் கிடந்தது.
கலைஞர் எனும் தமிழ் உரிமையெனும்
அந்த உணர்ச்சி
இங்கு திரண்டு எழுந்தபோது தான்.
வள்ளுவன் குறளின் தேர்
ஒரு கோட்டம் ஆனது.
அய்யன் வள்ளுவனை அந்த‌
குமரி முனையில்
உலகத்தினர் நிமிர்ந்து பார்த்தனர்.
சங்கத்தமிழ்
கலைஞர் பேனாவில்
ஒரு உயிர்ப்பை சிலிர்த்துக்காட்டியது.
தமிழின் தொன்மை ஒளி
எங்கும் கதிர் பரப்பியது.
இலக்கணம் என்றால்
விளங்காதவர்கள் விளக்கெண்ணை என்றார்கள்.
விளக்கம் எனும் வெளிச்சத்தால்
தொல்காப்பிய பூங்காவாக‌
தண்ணிய நிழல் பரப்பியவர் அல்லவா கலைஞர்.
நாற்காலி அரசியல் செய்த சில
நரித்தனங்கள்
அவரை தோற்கடித்து விட்ட
அந்த இருண்ட கண்டத்தில் தான்
நம் தமிழ் அவமானப்படுத்தப்பட்டது.
தமிழ்ப்பாடநூல் அட்டையில்
உயர்ந்து நின்ற நம் வள்ளுவனை
இருட்டடிப்பு செய்ய அவன் மீது
கருப்பு அட்டை ஒட்டப்பட்டது.
தமிழின் எதிரிகள் கெக்கலிப்புகள்
என்ன செய்ய முடியும்
நம் தமிழை?
இந்த வறட்டு மேகங்களுக்கு இடையேயும்
முரசொலியில் தினம் தினம்
தமிழின் மழை தானே!
கலைஞரின் பேச்சும் மூச்சும்.
அது
அச்சேறி  அச்சேறி
பவள விழா ஆகி காட்டியது
அவர் துவளவில்லை  என்று.
அந்த நாற்காலியின் சக்கரங்கள்
கீதைத்தேர்ச் சக்கரங்களையும் விட
உயர்ந்தவை.
ஏனெனில் கீதையோ
மனு நீதி கொண்டு
மனிதனை அமிழ்த்தியது.
அவர் எழுத்துக்களோ
மனிதனின் சமூக நீதியை
மீட்டுக்கொடுத்தது.
அந்தக் காவேரியைப்பற்றி
நாம் மகிழ்ந்து கொண்டிருக்கும்
வேளையில்
இதோ ஒரு "காவேரி "
நம் தமிழ்த்துடிப்புகளின்
"சக்கரவர்த்தியை"
புன்னகைச்சுடர்
பூக்க வைத்துக்கொண்டிருக்கிறது.
கலைஞர் வாழ்க!
தமிழ் வாழ்க!

=====================================================
நேரம் மாலை 06.50.... 27.07.2018





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக