செவ்வாய், 10 ஜூலை, 2018

பாலச்சந்தரின் "தண்ணீர் தண்ணீர்"

பாலச்சந்தரின் "தண்ணீர் தண்ணீர்"
================================================ருத்ரா

எங்கள் இதயத்துக்குரிய இயக்குனர்
பாலச்சந்தர் அவர்களே!
இந்தப் படத்தின் பெயரை உச்சரிக்கும்போது
கண்ணீர் கண்ணீர் என்று தான் கேட்கிறது.
தண்ணீர்த்துளிகளில்
உலகம் சிதறுண்டு
கோடி கோடி பிம்பம் காட்டும்
நுட்பத்தை
அன்றே
அந்த அத்திபட்டி கிராமத்தையும்
அகன்ற ஆனால் ஆழம் மிக்க‌
கரிய விழிகளை உடைய‌
சரிதா அவர்களையும் வைத்துக்கொண்டு
ஒரு உயர்ந்த சரித்திரம்
படைத்துவிட்டீர்கள்.
கதை திரு கோமல் சுவாமி நாதன் அவர்களின்
நாடகத்திலிருந்து உருவாகிய போதும்
கார்ட்டுன் சித்திரங்களாய்
ஆனால் கனல்கின்ற உள்ளடக்கம் உள்ள‌
உயிர்ச்சித்திரங்களாய் அல்லவா
படம் முழுக்க விரவிக்கிடந்தீர்கள்.
நாட்டில் நக்சல்பாரி என்பது
இன்னும் இங்கு கெட்டவார்த்தை தான்.
அதன் ஒரு சிறு பிசிறு கூட‌
உங்களிடம்
அந்த படத்தில் ஒரு சிற்பம் ஆக நின்றது.
உங்கள் "டச்"
அந்த தண்ணீர் தாகத்தை
ஆயிரம் காளிதாசன்கள் கூட
நடத்திக்காட்ட முடியாத‌
ஒரு உயிரியல் நாடகமாய் அல்லவா காட்டியது!
அந்த வாத்தியார் ராமனின் பிரம்படிகள்
இன்னும் சுளீர் சுளீர் என்கிறது.
இந்த மக்கள் இன்னும்
இந்த சக்கைப் புல்லுக்கட்டை தான்
மேய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இளைய தலைமுறைக்காரர்கள்
குத்திக்காட்டுவதில்
ஊசி மழை பெய்கிறார்கள் தான்.
ஆனாலும்
தண்டவாளம் நழுவிய ரயிலாகத்தான்
எங்கோ
வழிகள் இழந்து பயணிக்கிறார்கள்.
அவர்கள்
இந்த தண்ணீர் தண்ணீர் படத்தை
லென்சுக்குள் இதயமாக்கி
இயக்கிப்பழக வேண்டும்!
தமிழ் நாட்டின் பெருமைகள்
எண்ணில் அடங்கா!
உங்களை இந்த கனவு உலகத்தின்
சிற்பியாக நிறுத்தி
படைப்பு உலகத்தையே மிரள வைத்தது
தனிப்பெருமை!

=======================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக