வியாழன், 19 ஜூலை, 2018

ஒரு நம்பிக்கையில்லா தீர்மானம்

ஒரு நம்பிக்கையில்லா தீர்மானம்
=================================================ருத்ரா

அவ்வப்போது
இந்த பாராளுமன்றம்
விழித்திருக்கிறதா?
இல்லையா?
என்று
சோதித்துப்பாருக்கும்
சோழி விளையாட்டு தான் இது.
எண்ணிக்கைகள்
உருட்டும் தேரோட்டம் தான்
நம் ஜனநாயகம்.
இது வெற்றி பெரும்போதெல்லாம்
இதன் அர்த்தம் புரிந்து கொள்ளப்படுகிறது
மக்கள் தோற்றுவிட்டார்கள் என்று.
இரண்டு கால் மனிதர்கள்
நான்கு கால் நாற்காலிகளால்
தோற்கடிக்கப்படுவதே
நமக்குப் பழகிப்போன மரபு.

இப்போது அந்த பரமார்த்த சீடர்களைப்போல‌
இந்த ஆறு
விழித்துக்கொண்டிருக்கிறதா? இல்லையா?
என்று
பார்க்கப்போகிறார்கள்.
அந்த பரமார்த்த குரு கதையில்
சீடர்கள் கையில் எரியும் கொள்ளியை
நீருக்குள் வைத்து
ஆற்றை சோதித்துப்பார்ப்பார்கள்.
அது "சுர்ர்ரென்று" இரைச்சல் இடும்.
"அய்யய்யோ விழித்துக்கொண்டிருக்கிறது"
என்று ஓடுவார்கள்.
அந்த அணைந்த கொள்ளியை
மறுபடியும் இட்டுப்பார்த்தால்
அவர்கள் புரிந்து கொண்டிருக்கலாம்
இந்த ஆறு தூங்குகிறது என்று!
ஆர்ப்பாட்டத்தில் பெற்ற எண்ணிக்கையின் வெற்றி
இப்போது
மக்களிடம் "அணைந்து" போயிருக்கலாம்!
மக்களின் எழுச்சியும் உணர்வும்
உண்டாக்கும் அலைகளை
எப்படி அளப்பது?
இது இறுதி ஆண்டு.
முதல் ஆண்டில் கணிப்பொறியைத்
தட்டிய அதே "விளையாட்டுத்தனம்"
இப்போது வடிந்து போயிருக்கலாம்.
அல்லது வேறு விளையாட்டுகள் விளையாட‌
அவர்கள் விரும்பலாம்.
ஆறுகள் நீரோடும் மணலோடும்
திருடப்பட்டுவிடும்
இந்த பொருளாதார சூதாட்டங்களில்
வளர்ச்சி என்பதே இங்கு
கானல்நீர் ஆற்றில் நடக்கும்
கும்பமேளாக்கள் தானே!
பகடைகள் கீதையை போதிக்கின்றன.
அதன் சக்கரங்களோ
மக்களின் ரத்தங்கள் வடிகட்டித்தந்த‌
வியர்வையிலும் கண்ணீரிலும்
குருட்சேத்திரங்கள் நடத்திக்கொண்டிருக்கிறன.
நம் அரசியல் சாசனம் ஒன்றும் இதிஹாசங்கள் அல்ல‌
கொத்துக்கொத்தாய் கதைகள் சொல்வதற்கு.

===========================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக