புதன், 25 ஜூலை, 2018

ஓலைத்துடிப்புகள் -26

ஓலைத்துடிப்புகள் -26
====================================================ருத்ரா



உடலோடு உடலுதல் முறுக்கும் செந்தீ
=========================================================ருத்ரா


தமிழ் மொழியின் நுண்சொற்பாடு ஒரு ஒப்பற்ற மொழியியல் வெளிச்சம் காட்டும் தன்மையது ஆகும்.உடல் என்றால் உடம்பு என்று தான் நாம் அறிவோம்.அந்த சொல் ஒரு ஆழமான தத்துவம்
அல்லது மெய்யுணர்வு தரும் சொல்லாக அல்லவா இருக்கிறது.உடலின் இயல்பே உள்ளே இருக்கும் உள்ளம் என்பதனோடு எப்போதும் பொருது கொண்டே இருக்கும் இயல்பினது ஆகும்.இதுவே எல்லா மனித மற்றும் சமுதாய நோய்களுக்கு காரணம்.சங்கத்தமிழ் வரலாற்றில் இப்படியொரு ஆழமான ஆராய்ச்சிக்கு வித்திடும் சொல் ("உடல்") என்பதை நான் மேலே கண்ட (ஐங்குறு நூறு..பாடல் 66)செய்யுள் புகுந்த போது தான் திக்குமுக்காடிப்போனேன். (உள்ளே இருப்பதால் தான் அது உள்ளம் எனப்படுகிறது என்பது மற்றொரு "வியப்பு தரும் சொல்" அது)
அதனால் தான் திருமூலர் போன்ற சான்றோர்கள் "உடம்பையே" கோவில் ஆக்கினார்கள் போலும்.இந்த "உடலை" வைத்து என் சங்கநடைப்பாடலை இங்கு நான் எழுதியுள்ளேன்.ஓரம்போகியார் எனும் அந்த சங்கப்புலவர் உண்மையிலேயே இலக்கியம் எனும் இமயம் ஏறி நின்று ஒளி காட்டியவர் என்றே நாம் கொள்ள வேண்டும்.கீழ்வரும் செய்யுள் ஒரு சான்று.

"உடலினென் அல்லேன்; பொய்யாது உரைமோ;
யார் அவள், மகிழ்ந!தானே...தேரொடு,நின்
தளர்நடைப்புதல்வனை யுள்ளி,நின்
வளைமனை வருதலும் வௌவி யோளே?"

(ஐங்குறு நூறு பாடல் 66)

"கோபம் கொள்ள மாட்டேன்.சண்டையிடமாட்டேன்.(உடலுதல் எனும் சொல் தெறிக்கும் அந்த "முரணும் உணர்வு" தலைவியின் வாயிலிருந்து எப்படி வெளிப்படுகிறது பாருங்கள்) பொய்யாது உரையுங்கள்.யார் அவள்? தேரை இன்னும் அதன் உரிய இடத்தில் கூட நிறுத்தவில்லை.அதற்குள் நம் மகனை கொஞ்சுவதற்கு இறங்கி விட்டீர்கள்.அந்தப்பயலின் "குறு குறு" நடை உங்களை குழைய வைத்திருக்கிறது.அதெல்லாம் சரி.கூடவே வந்த நம் புதல்வனை அள்ளியெடுத்துச்செல்கிறாளே! யார் அவள்?" தலைவியின் நெஞ்சம் உலைக்களம் ஆகிறது.அப்படியும் அவனை"மகிழ்ந" என்று அழைப்பதில் ஒரு குத்தல் நிறைந்த உணர்வு இருப்பினும் அவனைக்கண்டதும் அவள் மகிழ்கிறாளே அந்த மின்னல் வெளிச்சத்தை வைத்துக்கொண்டு தானே "ஆண்" பெண் மீது இத்தகைய கொடும் ஆதிக்கத்தை செலுத்துகிறான் என்பதனையும் காட்ட மேலே வரிகளில் "சூடு" போடுகிறார் புலவர். நம் முதுகு மட்டும் புண்ணாகவில்லை.நம் உள்ளுணர்வே (ஆத்மா)அந்த சூடு தாங்காமல் பற்றி எரிகிறது.என் பாடலின் பொழிப்புரையை அடுத்த இதழில் எழுதுகிறேன்.



உடலோடு உடலுதல் முறுக்கும் செந்தீ
===================================================


பைஞ்சாய்ப் பாவைக்கு பொய்ப்பாலூட்ட‌
நீள்தல் ஆற்றா குடுமியவாய் திகழ்தரு
பைஞ்சுரைச் சிறுகாய் அன்ன முலையின்
அண்மை காட்டி அரும்பவிழ் நகையொடு
தன்மை படர்த்தி நின்னை அழைக்கும்
மடவள் என்னிவள் வந்திசின் ஓம்புமன்!
முடமுது நாரை இறை தேடி அலம்ப‌
ஞாழல் கொடுஞ்சினை காலுடன் அலம்ப‌
பதைப்பத்ததைந்த நெய்தல் அங்கழி
பனி இமிர் பைந்திரை படர் கரை சேர்ப்ப!
உடலோடு உடலுதல் முறுக்கும் செந்தீ
உறைநோய் உற்று நின்னை நோக்கும்
நரம்பார்த்த தீங்கிளவியள் குழறல் ஒல்லுமோ.
ஒள்மணல் படுத்தன்ன கருங்கோட்டெருமை
ஒத்த திண்ணிய அம்பி ஆங்கு அடைகரை
சிறைபெய் குருகு கணங்கொள் துறைவ‌
மடப்பம் தீண்டிய சில்மகள்ப் பெருநோய்
துடைப்புன ஆற்றுதி விழி தூஉய் கண்டிசின்.
வெண்முளை வித்திய வினைசெறி யன்ன‌
கண்முளை எல்கதிர் உள்சிறை ஒடுங்க‌
இருள் தின்ற ஒளியாய் அளியள் ஆனாள்.
உண்துறை ஆங்கு மண்மறை முன்னே
உய்யக்கொள்வாய் பெரும்பணைத் தோளாய்!

=======================================================ருத்ரா
16.06.2015.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக