திங்கள், 30 ஜூலை, 2018

கலைஞர்- 4

கலைஞர்- 4
=========================================ருத்ரா

தேறி வருகிறார்.
நலம் அடைந்து வருகிறார்.
தொண்டர்களின்
அழுகைச்சீற்றத்துக்கு
அணை போடவா
இந்த அறிக்கைகள்?
வெளியே வருகிறவர்கள்
நலமாய் இருப்பது தெரிகிறது
என்கிறார்கள்.
"நன்னம்பிக்கை முனையை"
தொட்டு
அன்றைய கடற்பயண வீரர்
மெகல்லன்
பயணம் தொடர்ந்தது போல்
நாமும் கண்ணீர்க்கடலில்
வீழ்ந்து போகாமல்
கலைஞரின் புன்னகை எனும்
அந்த புதுச்சுடரொளியை
காண்போமாக!


ஆனாலும்
சில "ட்வீட்டர்கள்"
சள சளக்கின்றனவே!

அவை
வகுப்பில் விவரமறியா
சிறுவர்கள் எறியும்
காகித அம்புகளா?
இணைய தளத்திலிருந்து அந்த‌
இதய தளத்துக்கா
ஈட்டி எறிந்து விளையாடுவது?
ஒரு தமிழன்
கவலைக்கிடமாய் இருக்கையில்
அவனுக்கு
ஒரு "பீஷ்மர் அம்புப்படுக்கையை"
அமைப்பதற்கா
இந்த அம்பு விளையாட்டுகள்?
நாம் "தமிழர்களா"?
என்று
நம் நெஞ்சை
தொட்டு தொட்டுப் பார்க்க வேண்டிய‌
வரலாறுகளின் ஆற்றுப்படைகளைத்தான்
நிறைய கண்டிருக்கிறோம்.
வில் புலியை தாக்கும்.
புலி மீனைத் தின்னும்.
கோவூர்கிழார்கள் தேவைப்படுகிற‌
வில் அம்புப் பாட்டுகள் தானே
நம் செய்யுட்கள்?

தமிழா!
எதிரிகளை விட துரோகிகளே
கொடியவர்கள் என்று
நம் மூன்று கொடிகளும்
ஒன்றை யொன்று
வெட்டிக்கொண்ட‌
ரத்தம் சொட்டும் சங்கத்தமிழ்
என்றைக்கு
உலகத்தமிழர்கள் உருவாக்கும் ஒரு
செம்மொழித்தமிழின்
செஞ்சுடரொளி வீசப்போகிறது?
ஒரு தமிழன் இன்னொரு தமிழனை
துரோகி என நினைத்து
வாள் வீசிக்கொண்டே போனால்
நாம்
என்ற சொல்லும் இறந்து போகும்.
தமிழர்கள்
என்ற இனமும் அழிந்து போகும்.
லட்சம் தமிழர்களை இழந்தோம்.
அதே வழியில் இன்னும்
கோடித்தமிழர்களை இழந்து விடவா
இந்த இழி நெருப்பை உமிழ்கிறோம்?
காழ்ப்பில்
விளைந்த வரிகள் அல்ல இவை!
கால ஓட்டத்தின் அதிர்வுகளை
அறியச்செய்யும் வரிகள் இவை.

=========================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக