திங்கள், 16 ஜூலை, 2018

ரஜனியின் ஒரே வழி

ரஜனியின் ஒரே வழி
============================================ருத்ரா

"என் வழி தனி வழி"
என்ற ரஜனிக்கு
இப்போது இருப்பது ஒரே வழி!
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற‌
அந்த "முட்டுச்சந்தே"
அவர் காட்டும் வழி.
ஆன்மீக அரசியலின்
ஆனா ஆவன்னா
படிக்கத்தொடங்கி விட்டார்.
எங்கோ இருக்கிற
ஆண்டவன் எதுவோ சொல்வான்
இங்கே இருக்கிற‌
அருணாசலங்கள்
தோப்புக்கரணம் போட்டு
தோற்றுக்கொண்டே இருக்கவேண்டுமா?
அந்த ஆண்டவன்
நான்குவர்ணத்தில்
ஒரு கொடியை அசைத்தாலும்
இவர்கள் அடங்கி ஒடுங்கி
சமாதிக்குள் போய்விடவேண்டுமா?
வளர்ச்சி வேண்டும் வளர்ச்சி வேண்டும்
என்று
பசுமையான வயல்கள் எல்லாம்
மயானம் ஆகவா வேண்டும்?
பொருளாதார சித்தாந்தங்கள் எல்லாம்
புதைகுழிக்குள் போகவா
இந்த எட்டுவழிப்பாதை?
அந்த எட்டாத உயரத்தின் கார்ப்பரேட்டுகளுக்கா
இந்த எட்டுவழிப்பாதை?

ரஜனி அவர்களே!
தமிழ்நாடு முழுவதும் இந்த‌
"தார்ப் பாம்புகளால்" விழுங்கப்பட்டபின்
மிஞ்சுவது
வெறும் தார்ப்பாலவனம் தானே!
தண்ணீர் ஓடும் ஆறுகள் எனும்
ரோடுகளால்
இந்த பாரதத்தை இணைப்போம்
எனச்சூளுரைத்து விட்டு
விவசாய மக்களின்
கண்ணீர்நதிகளைக்கொண்டா
இங்கே இணைக்கப்போகிறீர்கள்?

"ஒருவன் ஒருவன் முதலாளி"
என்று நீங்கள் பாடிய போது
மதங்களையெல்லாம் தாண்டிய‌
ஆண்டவனைத்தான் குறிக்கிறீர்கள்
என்று நினைத்தோம்.
இப்போது
ஆண்டவனைக்கூட எங்கோ கடாசி விட்டு
ஒரு சர்வாதிகாரம் எனும் மதத்தின்
அரிதாரம் பூசிக்கொண்டு அல்லவா
எங்கள் முன்
நடிக்காமல் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

நான் ஒரு தடவை சொன்னா
அது நூறு தடவை சொன்ன மாதிரி
என்ற சினிமாத்திரையின்
உங்கள் "பஞ்ச் கீதை"யில்
பஞ்சம் ஆகிப்போனது
நியாயமும் தர்மமும் தான்.
ஏனெனில்
அந்த "நூறு"குரல்களுக்கு
சொந்தக்காரர்களான
அந்த மர்மத்தனம் நிறைந்த‌
அரக்குமாளிகைக்காரர்களான‌
கௌரவர்களுக்காக அல்லவா
இப்போது
பேசத்தொடங்கியிருக்கிறீர்கள்!

================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக