சனி, 28 ஜூலை, 2018

எங்கள் மாண்புமிகு அப்துல்கலாம் அவர்களே!


எங்கள் மாண்புமிகு அப்துல்கலாம் அவர்களே!
===========================================================ருத்ரா

அந்த ராமேஸ்வரம் அலைகள்
மூச்சு விட்டு மூச்சு விட்டு
யோகா செய்வதாய்
இவர்கள் கற்பனை செய்யலாம்.
ஆனால்
"பேக்கரும்பின்" மண்ணிலிருந்து
அறிவியலின் ஒரு இனிய‌
அடிக்கரும்பு
அலையெழுப்பிக்கொண்டிருப்பதாய்
நாங்கள் உன்னை
நினைவு கூர்கிறோம்.

உன் எலும்புக்கூட்டை நிறுத்திவைத்து
மணிமண்டபம் என்று சொல்கிறார்கள்.
அக்னிப்பிரளயமாய்
இந்த இளைஞர்களின் அறிவு செதில்களில்
ஒரு விஞ்ஞானக்கனவை அல்லவா
நீ சிறகு விரித்துக்காட்டியிருக்கிறாய்.
இந்த மக்களின் ரத்தசதையையெல்லாம்
எல்லா மதங்களையும் கடந்த
உன் புன்னகையும் பேச்சுமாய்
ஒரு உயிர்ப்பை பூசிவிட்டுப் போனாயே!
அதன் மீது ஏதோ ஒரு
காவி வர்ணத்தையல்லவா தடவியிருக்கிறார்கள்.
நீ வாசித்துக்கொண்டிருப்பது
மத நல்லிணக்கத்தின் வரிகள்
என்பதை மறுத்து
உன் அருகில் ஒரு கீதையை
வைத்து
இந்த மண்டபத்தை திறந்து வைத்தார்கள்.
உன்னை
இந்த விண்வெளியையே வீணையாக்கி
அதன் ஜியுடி (பேரொன்றியக்கோட்பாடு)யின்
நரம்புகள் தடவி
நீ யாழ் இசைப்பதாகத்தான்
நாங்கள் பார்க்கிறோம்.
ஆனால்
இவர்கள் ஒரு "சரஸ்வதி வந்தனா"வுக்கு
அல்லவா
மாடல் ஆக்கி உனக்கு
ஒரு பொம்மைக்கொலு வைத்திருக்கிறார்கள்.
பூமியின் நிழல்
நிலாவைத்தீண்டியதற்கான
அந்த "கிரஹணத்"தீட்டு போவதற்காக
நதிகளில் "கங்காஸ்நானம்"செய்து
நம் நீர்வளங்களை
தீட்டு ஆக்கும்
இவர்கள் மேதாவித்தனைத்தை
வைத்துக்கொண்டு
"வளர்ச்சி" என்று நாம் பேசுவதே
ஒரு "சமுதாய ஒவ்வாமை"ஆகும்.
சமுதாயம் இந்த சடங்குகளின்
கிடங்குகளில்
வீழ்ந்திடாமல் இருக்க
அறிவியல் கிளர்ந்த
அக்கினிக்கனவுகளின்
"நாயகமே" நம்
ஜனநாயகத்துக்கு தேவை.
அதனால்
ஓ எங்கள் கனவுகளின் நாயகனே !
நாங்கள் தூங்கினாலும்
நீ கற்பித்த கனவுகளே
எங்கள் விடியல் சிற்பங்கள்.

==============================================










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக