சனி, 21 ஜூலை, 2018

காக்கி என்பது நிறம் அல்ல!

Chennai Police Helps Pregnant Women in Railway Station



 சில நேரங்களில் தமிழக போலீசார் செய்யும் செயல்கள் நம்மை திக்குமுக்காட செய்துவிடகிறது. திடீரென்று உணர்ச்சிப் பிழம்பான காரியங்களை செய்துவிட்டு, "காவல்துறை உங்கள் நண்பனேதான்" என்பதை அடிக்கடி நமக்கு பறைசாற்றி வருகின்றனர். அதற்கு ஒரு உதாரணம்தான் இது. நேற்று தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று சிக்னல் கோளாறு ஏற்பட்டுவிட்டது. அதனால், அந்த ரயிலானது, கோட்டை மற்றும் பூங்கா ரயில் நிலையங்களின் இடையே நின்றுவிட்டது. பாதி வழியில் ரயில் நின்றுவிட்டதால், பெரும்பாலான பயணிகளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதனால் ரயிலிலிருந்து இறங்கி நடந்து சென்றுவிடலாம் என்று ஒவ்வொருவராக இறங்க தொடங்கினர். அப்போது அமுதா என்ற கர்ப்பிணி பெண்ணும் கீழே இறங்க முயற்சித்தார். நடைமேடை இல்லை என்பதாலும், படிக்கட்டுகள் உயரமாக இருந்ததாலும் அமுதாவால் இறங்க முடியவில்லை. வெகுநேரம் எப்படி ரயிலை விட்டு இறங்குவது என தெரியாமல் தவித்தார். இப்படியே 2 மணி நேரம் ஆகிவிட்டது. அமுதாவால் கடைசிவரை கீழே இறங்கவே முடியவில்லை. அப்போது போலீசார் இரண்டு பேர் அங்கு வந்தனர். அவர்களது பெயர் தனசேகர், மணிகண்டன். அமுதா கீழே இறங்க முடியாமல் தடுமாறி கொண்டிருப்பதை கண்ட அவர்கள், திடீரென ரயிலின் நுழைவு வாயிலில் படிக்கட்டு போல குனிந்து நின்றனர். இப்போது அமுதாவை தங்கள் மீது கால்வைத்து கீழே இறங்குமாறு சொன்னார்கள். அமுதாவும் ஒரு சிறு தயக்கத்திற்கு பின்னர், தன் கால்களை போலீசார் இருவரின் முதுகுகளின் மீது வைத்து கீழே இறங்கினார். இதேபோல அங்கு கீழே இறங்க முடியாமல் தவித்த வயதானவர்களுக்கும் இதேபோல படிக்கட்டு போல குனிந்து நின்றனர் இரு போலீசாரும். போலீசாரின் இந்த மனிதநேய மிக்க செயலை அங்குள்ளவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே பாராட்டி வருகிறார்கள். புல்லரிக்க வைத்த அந்த இரண்டு போலீசாருக்கும் பெரிய சல்யூட் ஒன்று நாம் அடித்தே ஆக வேண்டும்!

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-police-helps-pregnant-women-railway-station-325472.html

tamil.oneindia.com க்கு மிக்க நன்றி.

காக்கி என்பது நிறம் அல்ல!
==========================================ருத்ரா இ பரமசிவன்.

காக்கிச் சட்டை என்பது
வெறும் விடைத்த
கஞ்சி போட்டு தேய்க்கப்பட்ட
உடை அல்ல,
சமுதாயத்தின்
சட்ட  ஒழுங்கு அமைதிக்கு
"லாட்டி" சுழற்றும் வெறும் எந்திரத்தின்
உடையும் அல்ல.
அவ்வப்போது
எங்கோ எதற்கோ  கசியும்
அமுத ஊற்று எனும்
மானிட நேயத்தின் சுடரும் தான்
அது!
ஒரு உயிருக்குள் இன்னொரு உயிர்
சுமக்கப்படும் அந்த தாய்மையே
நம் கண்முன் தெரியும்
ஒரு மகத்தான பிரபஞ்சம்.
அதன் "பிக் பேங்க்"என்பது
உயிர்ப்பாய் விஸ்வரூபம் எடுத்து
தாயும் சேயுமாய் நமக்கு
தரிசனம் தரும் இன்னொரு
மகத்தான பிரபஞ்சத்தின்
மாணிக்க காட்சி ஆகும்.
இதை காக்கும் பெருந்தெய்வங்களான
நம் மதிப்பிற்குரிய
திரு.தனசேகர்
திரு,மணிகண்டன்
ஆகிய இருவரும்
நம்மால் விறைப்பாக
ஒரு பெரிய சல்யூட் வைக்கப்பட வேண்டியவர்கள்.
வழக்கமான "போலீஸ்"விருதுகள்
அவர்களுக்கு  வழங்கப்பட  இருக்கலாம்.
இவர்கள் காட்டிய அந்த
கடமை கண்ணியம் கட்டுப்பாடு எனும்
மானிடப்பேரொளிக்கு
"மானிட ரத்னா"
எனும் விருது அறிவிக்கப்பட்ட வேண்டிய
கட்டாயமான தருணங்கள் இவை.
இவர்களுக்கு நம்
மனமார்ந்த பாராட்டுக்கள்!!

===================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக