திங்கள், 30 ஜூலை, 2018

மாயமான் வேட்டை


மாயமான் வேட்டை
============================================ருத்ரா

உச்சம் தொடு
உயரம் தொடு
இந்த உரத்த குரல்களின்
வேட்டைக்காடுகளில்
பெய்யும் அம்பு மழை
உன்னை ஓட ஓட விரட்டுகிறது.
பணம் புகழ்
இந்த மாயமான்கள்
உன்னை எங்கெல்லாமோ
இழுத்துச்செல்கிறது.
மனிதனின் முழு வீச்சு
இந்த வெற்றியின் மைல்கற்களை
நோக்கித்தான்.
ஆனாலும் கடல்போன்ற‌
உன் பொழுதுகளில்
சிறு கீற்றுத்துளிகளை
அதோ அந்த மைனாப்பறவைகளை
பார்த்து களிப்படையேன்.
வானம் போன்ற விரிந்த‌
உன் மனம் உனக்கு தெரியும்.
அப்போது
உன் அருகாமையில்
உள்ள முட்புதர்களில்
கிடப்பவர்களின் ரத்த சிவப்பில்
உன் கனவு ரோஜாக்களின்
இளஞ்சிவப்பு அடி பட்டு போய்விடும்.
உன் காலடி தடங்களில்
எத்தனை அப்பாவிப்புழுக்கள்
நசுங்கிக்கிடக்கின்றன‌
என்பதும் தெரியும்.

இப்போது புரியும்
அந்த வேட்டைக்கார அர்ஜுனன் போல்
உன் குறி
குரூரமாய்
ஒரு ரத்தப்பசி கொண்டு அலையாது.
நீ வெற்றிச்சிகரம்
ஏறுவதற்கு
உனக்கு படிகளாய்
படுத்துக்கிடப்பவர்களை
ஒரு போதும் காணவிடாமல் செய்வது
அந்த உன் தன்லாபம் எனும்
காட்டுத்தீ தான்.

இந்தப் பெருந்தீயை
எப்படி நீ வளர்த்துக்கொள்ளவேண்டும்?
அதனால்
உன்னை மானிட நேயத்தோடு
போர்த்திக்கொள்ளும்
இந்த சமுதாயம்
கருகிச்சாம்பலாய் போனாலும்
கவலையில்லை.
உன் "டார்கெட்" தான்
உனக்கு ரத்த சிவப்பு அணுக்கள்.
மற்ற உயிர்ப்புகள் எல்லாம்
வெறும் செத்த அணுக்கள்.
இப்படியே யோசி.
இதை மாத்தி யோசிக்காதே.
இந்த குளோபல் பொருளாதாரம்
இந்த நச்சு அம்புகளைத்தான்
உன் அம்பறாத்தூணியில் செருகித்தருகிறது.
உன் கல்வியின் உயர் "பட்டங்களில்"
இந்த "மாஞ்சா" தான் தடவப்பட்டிருக்கிறது.
உன் போட்டியாளனின்
கழுத்தை அந்த‌
பட்டத்தின் கண்ணாடித்தூள் கயிறு
துண்டாக்கி உன் கண் முன்னே
எறிந்தாலும்
நீ முன்னேறு.
பங்கு மூலதனக்குறியீடு
கொள்ளைப்பணக் குவியல்களின்
குறியீடு.
வறுமையின் கபாலங்கள் குவிந்து
கிடந்தபோதும்
அதையும் அடுக்கி
அப்பார்ட்மெண்ட் கட்டு.
இது வளர்ச்சி.
ஆம் இது தான் வளர்ச்சி.
வானத்தை சொறிந்து விடும் கட்டிடங்களின்
பின்னே
விடியல் நம்பிக்கைகளின்
கல்லறைகளும்
கூடவே கட்டப்படுகின்றன.
உன் வேட்டை துவங்கி விட்டது.
சுரண்டல் தத்துவத்தின்
இந்த "பிக் பாஸ்"வேட்டையில்
உன் மீது எய்யப்படும்
அந்த நச்சு அம்பை
நீயே "டிசைன்"செய்து கொள்கிறாய்.

"கில்லர் இன்ஸ்டிங்க்ட்"
இதன் அசுரக்கோடு
"ஹிரோஷிமா நாகசாகி "வரைக்கும்
போய்விட்டது.
மானிடம்
அந்த கொத்து மரணங்களின்
நாய்க்குடை காளான்
புகை மண்டலங்களிலிருந்து 
மீளும் வழியை
நீ தெரிந்து கொள்ளவேண்டுமே .
எப்போது
நீ விழித்துக்கொள்ளப்போகிறாய்?
இதையும்
உன் ஆராய்ச்சிப்படிப்பாய்
எடுத்துக்கொள்
அன்பான மாணவனே!

=======================================================








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக