புதன், 4 ஏப்ரல், 2018

மெரினா

மெரினா
=======================================ருத்ரா

"அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்"
என்று சங்கப்புலவன் ஒருவன்
தன் ஏக்கங்களை
தன் கடந்த காலச்சுவடுகளை
கண்ணீர் சேர்த்து எழுதினான்.
எப்போதுமே
தமிழ் அப்படி ஓலைச்சுவடிகளுக்குள்
சுருண்டு கொண்டு விடுமோ
என்ற அச்சமும் கவலையும் தான்
"ஓ" மெரினா!
உன் மணல்துளிகள் எனும்
வைரப்படுகையில் புதைந்து கிடக்கின்றனவோ?
ஆனால்
தமிழ் வீரம் கொப்பளித்து
சுடர் பூத்த வைரங்களாய்
அந்த மணல் விரிப்பில்
ஒளி கிளர்ந்து இந்த‌
உலகமெல்லாம் ஒரு வெளிச்சம்
"அற்றைத்திங்கள் ஒரு வெண்ணிலவில்"
விரவிக்கிடந்ததே
அது இன்னும் அவியவில்லை!
இன்னும் அந்த‌
காளைகளின் கொம்புகளோடும்
அவற்றின் திமில்களோடும்
பின்னிக்கிடந்த ஆவேசம்
இங்கே மூண்டுகொண்டு தான் இருக்கிறது.
"வான் பொய்ப்பினும் தான் பொய்யா "
என்று "காவிரியை"
தன் மூச்சாக்கினவன் ..அதில்
தமிழின் நம்பிக்கையை ஆறாய்
பெருகசெய்தவன்
ஒரு பிச்சைக்கரம் ஏந்தி நிற்பவனாய்
அவலங்களில்  வீழ்ந்து கிடக்கும்
ஒரு வரலாற்றை சுமந்து நசுங்கிக்கிடக்கும்
தந்திரங்களை ..சூழ்ச்சிகளை
விதைத்த தமிழ்ப்பகைவர்கள் யார்?
விளங்கிக்கொண்டாயா
அருமைத்தமிழனே ?

மெரினா எனும் நிலா முற்றமே!
உன்னை
சுத்தப்படுத்தி வெறிச்சென்று
ஆக்கியிருக்கிறார்களே.
விலங்குகளை எப்படி வேண்டுமானாலும்
பூட்டிக்கொள்ளட்டும்.
"அணிலாடு முன்றில்"என்று எழுதினானே
புலவன்
இப்போது இப்படித்தான் எழுதுவான்
"அனலாடு முன்றில்..." ஆன‌
"ஓ" மெரினாவே! என்று.
இந்த மணலில் புதைந்து கிடப்பது
வெறும் சுண்டல் மடித்த காகிதங்கள் அல்ல!
உயிர் இழந்த கிளிஞ்சல் கூடுகளும் அல்ல!
நண்டுகளும் கடற்பாசிகளும் கூட அல்ல!
தமிழ்ப்புயலின் புறநானூறுகளும்
வீரத்தின் விடியல்களை
கருவுற்றுக்காத்திருக்கும்
அந்த ஒப்பற்ற
பூங்காலைப்பொழுதுகளும் தான்!
"கூவின பூங்குயில் கூவின கோழி"
அந்த மாணிக்கவாசகனின்
திருப்பள்ளியெழுச்சியில்
இந்த மணல் அரங்கத்தில்
கண்ணுக்குத்தெரியாத ஒரு
சமுதாய எழுச்சியின் தாண்டவம்
தடம் பதிப்பது தெரிகிறது.
நம்பிக்கை தான் எல்லாம்.
மக்கள் மக்கள் மக்கள்....எனும்
இந்தக்கடலும் வானமும்
கை கோர்த்து நர்த்தனம் புரியும்
காட்சி தெரிகிறது.
தமிழ் வாழ்க! தமிழ் வெல்க!

==================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக