செவ்வாய், 17 ஏப்ரல், 2018

கொடுவரி முதலை குடை தண் துறைய‌.



"கொடுவரி முதலை குடை தண் துறைய‌."
==================================================ருத்ரா இ பரமசிவன்.


தமிழன் திணை எனும் நிலப்பாகுபாடும் அதற்கேற்ற ஒழுக்க நிலையும்
மாண்புகள் கொண்டவை.காதல் வாழ்வில் பிரிதல் எனும் உணர்வு எழுச்சி
நுண்மையான வெளிப்பாடுகளில் சங்கப்புலவர்களால் பாடப்பட்டுள்ளன.
அத்தகைய ஒரு "நெய்தல்"காட்சியின் அழகிய நுண்வரிகளை என் கற்பனையில் நான் யாத்து எழுதிய சங்கநடைக் கவிதை  இது.


கொடுவரி முதலை குடை தண் துறைய‌.
==============================================ருத்ரா இ.பரமசிவன்

தன் பார்ப்பு தின்னும் தழல் குமிழ் தோலின்
கொடுவரி முதலை குடை தண் துறைய‌
குறிஎய்தி நெடுங்கங்குல் மடி தொலைத்து மாய‌
உடல் உயிர் தின்னும் உயிர் உடல் தின்னும்
பிணி தந்து கொளீஇ யாங்கு சென்றனை?
அம்பணத்தன்ன கவிழ் ஓமைப் புறத்து
அரிகுரல் குருகின் பரல் ஒலி ஒழுக்கத்து
வேங்கை வரித்த திண்கால் ஓமை
அசைவுறு காலை முரண்தர முரலும்
அதிர் ஒலி ஆர்க்க சிறை சிறை படுத்து
அலமரல் செய்யும் அயற்சினை சேரும்
எக்கர் மருங்கின் காட்சிகள் ஏய்க்கும்.
எரியுண்ட குவளையன்ன அழிபடு நலன்கள்
ஆவி உண்ணும் அவிர்நிலை தீர்ப்பாய்.
ஒளி ஒளித்து ஊரும் முளிபெயர் மஞ்சும்
கதிர் விழி மறைக்கும் அடுபோர் அட்ட‌
இரும்பொறை நெஞ்சத்து நெக்கு வீழ்த்து
தழீஇய வருதி!அழல்படு அளியள் யானே
.
______________________________________________________________


விளக்க உரை.
==============================================ருத்ரா இ.பரமசிவன்

தன் பார்ப்பு தின்னும் தழல் குமிழ் தோலின்
கொடுவரி முதலை குடை தண் துறைய‌
குறிஎய்தி நெடுங்கங்குல் மடி தொலைத்து மாய‌
உடல் உயிர் தின்னும் உயிர் உடல் தின்னும்
பிணி தந்து கொளீஇ யாங்கு சென்றனை?

தன் குட்டிகளையே தின்னும் இயல்புள்ளது முதலை.அது  நெருப்புக்குமிழிகளும் வளைந்த வரிகளும் உடையது.அந்த முதலைகள் குடைந்து நீராடும் குளிர்ந்த நீர்த்துறைகள் உடையவனே.இந்த நீண்டநெடும் இரவில் நீ வருவாய் என காத்திருந்து (குறி எய்தி) தூக்கம் தொலைத்து மாய்ந்து போக என் உயிர் என் உடலைத் தின்கிறதா?என் உடல் என் உயிரைத்தின்கிறதா? எனும் ஒரு வித நோயால் துன்புற்றேன். அந்நோயை எனக்கு தந்து விட்டு நீ எங்கு சென்றாய்?


அம்பணத்தன்ன கவிழ் ஓமைப் புறத்து
அரிகுரல் குருகின் பரல் ஒலி ஒழுக்கத்து
வேங்கை வரித்த திண்கால் ஓமை
அசைவுறு காலை முரண்தர முரலும்
அதிர் ஒலி ஆர்க்க சிறை சிறை படுத்து
அலமரல் செய்யும் அயற்சினை சேரும்
எக்கர் மருங்கின் காட்சிகள் ஏய்க்கும்.

மரக்கால் (அம்பணம்) எனும் ஒரு அளவைப்பாத்திரத்தை கவிழ்த்து வைத்தாற்போல் அசையாமல் கிடக்கும் பெரிய‌ ஆமையின் முதுகுப்புறத்தின் மேல் ஓயாமல் ஒலித்து குரல் எழுப்பும் நாரையின்அந்த ஒலி மழையில் வேங்கை மரத்தின் வரிகள் போன்ற காலை உடைய ஆமை கொஞ்சம் அசைந்து கொடுக்க அவ்வேளை அந்த நாரை ஆமைக்கு உயிர் இருக்கிறதோ என்ற எண்ணத்தில் வேறுபட்ட குரல்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்து அங்கே மீண்டும் மீண்டும் பறக்கும். பிறகு பறந்து திரிந்து அருகில் உள்ள மரக்கிளைகளில் போய் அமரும்.இத்தகைய மணற்கரைத்திட்டுக் (எக்கர்) காட்சிகள் நம் கண்களை மயக்கும்.(அது போல் ஏமாற்றி செல்லுவதே உன் வழக்கம்)



எரியுண்ட குவளையன்ன அழிபடு நலன்கள்
ஆவி உண்ணும் அவிர்நிலை தீர்ப்பாய்.
ஒளி ஒளித்து ஊரும் முளிபெயர் மஞ்சும்
கதிர் விழி மறைக்கும் அடுபோர் அட்ட‌
இரும்பொறை நெஞ்சத்து நெக்கு வீழ்த்து
தழீஇய வருதி!அழல்படு அளியள் யானே.

மென்குவளை மலர் தீப்பற்றி எரிந்தால் எப்படியிருக்குமோ அது போல் என் அழகு நலன்கள் சிதைந்து அந்த வெப்பத்து ஆவி என்னை உண்ணும் அந்த அவிந்துபோகும் நிலையிலிருந்து எனைக்காப்பாய். பகலவன் ஒளியை ஒளித்து ஒளித்து  ஊர்ந்து செல்லும் குழைவான மேகங்கள் அக்கதிரவனின் கண் பொத்தி விளையாடும்.ஆனால் அது அவன் என் மீது தொடுக்கும்  கொடும் போர் ஆகும். இறுகிய பாறை போன்ற உன் உறுதியை என்னிடமா காட்டுவது? உள்ளம் இளகிய பசுந்தளிராய் என்னிடம் வந்து என்னைத் தழுவிக் கொள்வாயாக. அனல் பட்ட நிலையில் துடிக்கும் எனக்கு அன்பினை அருள்வாய்.

==============================================ருத்ரா இ.பரமசிவன்
09.02.2016 ல் எழுதியது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக