திங்கள், 30 ஏப்ரல், 2018

இன்று ஒரு விதி செய்வோம்!


இன்று ஒரு விதி செய்வோம்!






நமது 
ஜனநாயகத்தின்
முகம் எங்கே?
மொழி எங்கே ?
விழி எங்கே?
வழி எங்கே?
வாயும் செவியும் 
எங்கே?எங்கே?
சாதியும் மதமுமே 
பிண்டம் பிடித்த 
பிரம்மாக்களின் 
பித்தம் பிடித்த 
சொற்கள் இங்கே 
கற்கள் ஆகி 
கால்கள் இடறும் 
காலம் ஒரு நாள் 
மாறும் மாறும் !
அந்த அறிவின் 
சூரியனையே  
சமைத்து 
ஓட்டுகள் ஆக்கி 
உங்கள் 
விடியல் திறக்க 
ஒரு 
விதியினை இன்றே 
செய்மின்!செய்மின்!

==================================
ருத்ரா இ பரமசிவன்.

 


பல குரல் மங்கை

பல குரல் மங்கை
=================================================ருத்ரா இ பரமசிவன்

மயிலே மயிலே இறகு போடு என்று கேட்க அவன் அங்கே போகவில்லை.குயிலே குயிலே உன் கொஞ்சும் குரல் காட்டு என்று
தான் அந்த காட்டுக்குச் சென்றான் அவன்.அந்த "பல குரல்" மங்கையோ அவனை படுத்தியபாடு இருக்கிறதே! அம்மம்ம!
இதோ படியுங்கள்.இது எனது சங்க நடை செய்யுட்கவிதை.


புள் மொழி மிடறிய ஒள் வாள் நுதலி
============================================ருத்ரா இ பரமசிவன்


கொடு சினை வேங்கை நுண்தாது தூஉய்
மடிஅவிழ் கல்முனை கதிர் கொடு விழிப்ப‌
இரவின் நெடுங்குறி ஒல்லென மாய‌
அடுமனைப் பாகர் ஆங்கு அவிர் செத்தென‌
பொறி இணர்ப் பொன்பூ அடர்மணிக்குன்றன்
அளியன் ஆகி நோதல் என்னோ?
பொறிப்புள் அன்ன மென்குரல் சீர்க்கும்
வரிப்புள் அன்ன நீள்குரல் காட்டும்
குருகு முரல அதிர்சிறை ஆர்ப்ப‌
உருகு கனைகுரல் உரூஉம் என்றிமிழ‌
சில் ஓதை புல்லென இழிய‌
வெள்ளிடை கீறிய மணிநீர் அருவி
பாசடை மூசும் பளிக்கின் இழையில்
பண்ணிய யாழ ஒரு குரல் கேட்கும்.
மாந்தளிர் அன்ன நடு நா நடுங்க
மறைப்புள் குரலோ! மயங்கினன் மன்னே.
புள் சிமிழ்த்த வேட்டுவன் அம்பு ஆகினளே
புண் உமிழ் நெஞ்சின் குருதி குமிழ‌
கண் பிழி துஞ்சல் காணா மையிருள்
கலங்கினன் ஆங்கு கதிர் பிலிற்றுக் குன்றன்
புள்மொழி மிடறிய ஒள் வாள் நுதலி
கள்ளிய குரலின் பொய்த்த குறியால்.

===================================================




புள் மொழி மிடறிய ஒள் வாள் நுதலி
==================================================ருத்ரா
(பொழிப்புரை)

கொடு சினை வேங்கை நுண்தாது தூஉய்
மடிஅவிழ் கல்முனை கதிர் கொடு விழிப்ப‌
இரவின் நெடுங்குறி ஒல்லென மாய‌
அடுமனைப் பாகர் ஆங்கு அவிர் செத்தென‌
பொறி இணர்ப் பொன்பூ அடர்மணிக்குன்றன்
அளியன் ஆகி நோதல் என்னோ?



வளைந்த வேங்கை மரத்துக்கிளையின் நுண்ணிய பூந்துகள்கள்
தூவிப்பரவ மலைமுகடு தூக்கம் விழித்தாற்போல் வெளிச்சக்கதிர்
வீச இரவெல்லாம் தலைவி அங்கே இரவுக்குறி காட்டிய இடத்து
வருவாள் என்று காத்திருந்த தலைவனோ அவள் குறி ஏதும் காட்டாது கண்டு
நோதல் உற்றான்.அடுமனையில் சோறு கொதிப்பது போல் உள்ள ஒரு
வெம்மைத்துன்பதில் வெந்தது போல் ஆனான்.அந்த இரக்கத்துக்குரியவன்
 எப்படிப்பட்டவன் தெரியுமா? பொன் போன்ற மற்றும் புள்ளிகளோடு
 எழில் குலுங்க விளங்கும் பூங்கொத்துகள் அடர்ந்த மலைநாட்டுத் தலைவன்.
அவன் இப்படி துன்பம் கொள்ளல் தகுமோ?




பொறிப்புள் அன்ன மென்குரல் சீர்க்கும்
வரிப்புள் அன்ன நீள்குரல் காட்டும்
குருகு முரல அதிர்சிறை ஆர்ப்ப‌
உருகு கனைகுரல் உரூஉம் என்றிமிழ‌
சில் ஓதை புல்லென இழிய‌
வெள்ளிடை கீறிய மணிநீர் அருவி
பாசடை மூசும் பளிக்கின் இழையில்
பண்ணிய யாழ ஒரு குரல் கேட்கும்.


ஆனால் அந்த அடர்ந்த காட்டிலிருந்து புள்ளிகள் நிறைந்த பறவைக‌ளின்
 குரல் போன்ற ஒரு மென்குரல் அங்கு நிலைநின்று கேட்கும்.வரிகள் உள்ள
 பறவைகளின் குரல் போன்ற நீள் ஒலிகள் கேட்கும்.நாரையின் குரல் முனகலும்
அதன் சிறகடிப்புகளும் கூட‌ கேட்கும்.எங்கோ ஒரு பாழ் இடையில் பிளந்து கொண்டு
 மணித்திரள் ஒலிக்க விழும் அருவியும் ஓசை தரும்.இலைகள் போர்த்திய அவ்விடத்தில்
அந்த கண்ணாடிபிழம்பு இழையாகியது போல் நெளிந்து ஓடும் அருவி
ஒரு இனிய பண்ணை யாழிசைத்தது போலும் கூட ஒரு குரல் கேட்கும்.





மாந்தளிர் அன்ன நடு நா நடுங்க
மறைப்புள் குரலோ! மயங்கினன் மன்னே.
புள் சிமிழ்த்த வேட்டுவன் அம்பு ஆகினளே
புண் உமிழ் நெஞ்சின் குருதி குமிழ‌
கண் பிழி துஞ்சல் காணா மையிருள்
கலங்கினன் ஆங்கு கதிர் பிலிற்றுக் குன்றன்
புள்மொழி மிடறிய ஒள் வாள் நுதலி
கள்ளிய குரலின் பொய்த்த குறியால்.





மாவிலைகள் மறைவில் குயில் ஒன்று மாந்தளிர் போன்ற அதன்
தொண்டையின் நடுவிலிருந்து நீட்டும் நாவு நடுங்க நடுங்க இசைக்கும் குரலோ அது! தலைவன் மயங்கிக்கலங்கினான்.தலைவி தலைவனை சந்திக்க நாணம் கொண்டு மறைந்திருந்து பலப்பல புள்ளின் பல்குரல் ஒலித்து ஒரு வேடனைப்போல் பறவைஒலி காட்டி (புள் சிமிழ்த்து..மிகிக்ரி செய்து) மாயம் செய்கிறாள்.
அந்த வேடனின் கள்ள அம்பு போல் (அக்குரல்கள் போல்) ஆகினாள் தலைவி.
அதனால் அம்பு பட்டு தைத்து புண் ஆகி  குமிழியிட்டு குருதி வடியும் நிலைபோல் துயருற்றான் தலைவன்.விடிய விடிய தூக்கம் வராத நிலையில் கண்ணை கசக்கி கசக்கி அந்த நள்ளிரவில்கலங்கினான். கதிரவன் தன் ஒளியால் மலையில் "வெளிச்சச்சிதறலை" படர்வித்தான்.அந்த மலையின் மன்னனோ ஒளி பொருந்திய நெற்றிய உடைய தலைவியின்
 "பறவை மொழி" ஒத்த ஓசைவிளையாட்டுகளால் மற்றும் பொய்யான குறி  காட்டுதலால் இரவு முழுதும் பிரிவுத்துன்பத்தில் நைந்தான்.

================================================================
15.03.2015 ல் எழுதியது.

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

மெரீனா வெறும் மணல் அல்ல‌

மெரீனா வெறும் மணல் அல்ல‌
========================================ருத்ரா



தமிழ் நாட்டின் இதயத்துடிப்புகள்
ஒலிக்கும் திடல் இது.
பார்வைக்கு
பஞ்சுமிட்டாய்காரனும்
பட்டாணி சுண்டல் டப்பாக்களும்
காதல் ஜோடிகளும்
கூடு கட்டும் இடமாக‌
தெரியலாம்.
மேம்போக்காய்
இங்கே தான் "அமைதிப்பூங்கா"
அச்சடிக்கப்பட்டு
பறைசாற்றப்படுகிறது என‌வும்
தெரியலாம்.
அதனால்
தராசு தட்டுகள்
சமன் செய்து சீர் தூக்க‌
துடி துடிக்கலாம்.
ஆனால் ஜனநாயகத்தின்
கடல் சீற்றம் ஒரு மாய‌
உடல் தாங்கிக்கிடப்பது
இங்கு தான் என்று
மக்களுக்கே தெரியும்.
பாவம் பிழைத்துவிட்டுப்போகட்டும்!
வேண்டுமானால்
ஒரு தும்மல் போட்டுவிட்டு போகட்டும்
இந்த அலைகள்
என்று
இவர்கள் கருணை காட்டுவதும்
அதையும் கூட அனுமதித்தால்
"போயே போச்சு"
என்று சொல்லுவதும்
கேலிக்கூத்துகளுக்கெல்லாம்
சிகரம் வைக்கும்
கேலிக்கூத்து ஆகும்.
மணலின் வெட்டவெளியில்
அந்த அலை இரைச்சல்கள் கூட‌
அமைதிப்படலத்தை
நார் நாராய் கிழிக்கிறதே
என்ன செய்யப்போகிறீர்கள்?


================================================

பளிங்கினால் செய்த ஒரு "பஃறுளி யாறு"


பளிங்கினால் செய்த ஒரு "பஃறுளி யாறு"
======================================================================
ருத்ரா இ பரமசிவன்.




ஒரு கல்லிடைக்குறிச்சிக்காரனின்

கல் பொருது இறங்கும்

ப‌ஃறுளி யாறு

இந்த தாமிரபரணி ஆறு தான்.

அந்த ஊர்க்காரர்களின்

பளிங்கு கர்ப்பமே

இந்த தாமிரபரணிக்கவிதை!

தண்ணீரா அது?

கனவுகளின் கண்ணாடிப்பிழம்பு அது

தினம் தினம்

குளித்து எழுந்து உயிர்த்து எழும்

நினைவுகளில் அவர்கள்

திளைத்துக்கிடக்கிறார்கள்

இதனுள்

மேற்குமலை அடுக்கத்தின்

நடுக்கம் இருக்கும்

அகத்தியனின் நரம்பு துடிக்கும்

மாநாடு கூட்டாமலேயே

செம்மொழித்தமிழ்

ரத்தத்தின் ச‌த்த‌ம் கேட்கும்.

யுத்தம் செய்யும்

க‌வ‌லைக‌ளின் புண்க‌ள் மொய்க்கும்

க‌லிங்க‌த்துப்ப‌ர‌ணிக‌ள் கூட‌

தாமிர‌ப‌ர‌ணிக்குள் க‌ரைந்து போகும்

இதன் கூழாங்கற்களில்

விக்ரமாதித்யக்கவிதைகளின்

மைத்துளி நனைந்திருக்கும்.

அதன் வாசனை மனத்துள்

மையல் மூட்டும்.

கரை தழுவிய நாணல் பூக்கள்

வெள்ளைக்கவரி வீசி

நாரைகளை விரட்டும்.

நண்டுகளும் கெண்டைகளும்

தாமிரபரணியின்

திவலைகள் தோறும்

கவிதைகளை

பதிவிறக்கம் செய்யும்

கரையோரப்

புல்லின்

புல்லிய வருடல்களுக்கு

புள்ளித்தவளைகள்

புல்லரித்து ஒலி தூவும்.

அவை

மாண்டுக முனிவர்களின்

மாண்டூக்யோபனிஷதங்களாய்

இங்கே தான் மொழி பெயர்க்கும்

சமஸ்கிருத சடலங்களுக்குள்

உயிர் பாய்ச்சும் தமிழ் மூச்சு

அந்த தாமிரபரணிக் காட்சிகளில்

பரவிக்கிடக்கின்றது.

"கயிற்றரவு"

"கடவுளும் கந்தசாமியும்"

என்று

எத்தனை எத்தனையோ

சிறுகதை ரத்தினங்களை

சோழிகுலுக்கி

பல்லாங்குழி ஆடிய‌

அந்த எழுத்துப்பிரம்மன்

புதுமைப்பித்தன்

பித்துபிடித்து உட்கார்ந்து க‌தைக்கு

பிண்ட‌ம் பிடித்து

உயிர்பூசிய‌ துறை

தாமிர‌ப‌ர‌ணியின்

சிந்துபூந்துறை அல்லவா!

கல்லிடைக்குறிச்சியின் வடகரையின்

ஊர்க்காட்டு மலை சாஸ்தாவும்

இதில்

உற்று முகம் பார்த்து

உருண்டைக்கண்ணையும்

முறுக்கு மீசையையும்

ஒப்பனை செய்து கொள்ளும்!

அம்பாச‌முத்திர‌ம் தார்ச்சாலை கூட‌

தாமிர‌ப‌ர‌ணியின் க‌ழுத்தை

"மப்ளர்"போல‌

க‌ட்டிக்கொண்டே தான் கிட‌க்கும்.

அங்கு

இர‌ட்டையாய்

ம‌ல்லாந்து கிட‌க்கும்

வ‌ண்டி ம‌றிச்சான் அம்ம‌ன்க‌ள் கூட‌

ஆற்றின்

நீர‌லைத் தாலாட்டில்

நீண்டு ப‌டுத்திருக்கும்

ஊமை ம‌ருத‌ ம‌ர‌ங்க‌ள் இன்று

கோட‌ரிக‌ளால் தின்னப்ப‌ட்டு

கொலைக்க‌ள‌மாய் காணும்

அந்த‌ சுடுகாட்டுக்க‌ரையெல்லாம்

ம‌னித‌னின் பேராசையை

புகைமூட்ட‌ம் போட்டுக்காட்டும்.

தாமிர‌ப‌ர‌ணிக்குள்

முங்கி முங்கிக்குளித்து

தீக்குளிக்கும் போதெல்லாம்

த‌மிழின் நெருப்புத்தேன்

எலும்பு ம‌ஞ்ஞைக்குள்ளும்

எழுத்தாணி உழுது காட்டும்!


=====================================================
மே  21  2013

பெண்ணை மடல் மா


பெண்ணை மடல் மா
==========================================ருத்ரா இ.பரமசிவன்



பெண்ணை மடல்மா கலித்தல் அன்ன‌
எருக்கம் சூடி உருக்கம் பயின்று
ஆயிழைப் பொலங்கிளர் வாணுதல் எய்ய‌
இல் இல் அடுத்து ஊர்ந்தனை மன்னே!
தகரக்கூந்தல் கனலன் குரலென‌
கூரிய வீசும் அவள் நிலை அறியா
புல்லியக்கல்லா நெடுமகன் போல
மடலேறு ஆண்தகை மடம் கொண்டன்ன‌
அவள் பயிர் மடமே உணரா நின்று
உகுத்தனை என்னே விரிஉளை அலரி.
தூற்றல் கொடுநோய் அவள் உற்றது அறிதி.
குரூஉ மயிர் யாக்கை உளியத்து படர்முள்
செத்தென போர்த்த நீள்வரிப்பெண்ணை
நெடுமா தொலைச்சிய‌ செல்தி! ஒள்ளிழை
உண்கண் பனியின் பசப்ப கண்டிசினே.
வெள்ளிமீன் விண்குறி விரைதி!விரைதி!
எதிர்தர வருவாய் குன்றின் அடுக்கத்து
ஏந்திழை ஆங்கு ஏந்திக்கொள வாராய்.

=======================================

விளக்க உரை
=========================================


பெண்ணை மடல்மா கலித்தல் அன்ன‌
எருக்கம் சூடி உருக்கம் பயின்று
ஆயிழைப் பொலங்கிளர் வாணுதல் எய்ய‌
இல் இல் அடுத்து ஊர்ந்தனை மன்னே!

பனைமர மட்டைகளில் செய்யப்பட்ட குதிரை குளம்பு அதிர வருவது போல் ஆரவாரத்துடன் தன் காதல் தோல்வியை ஊருக்கு உணர்த்தும் வண்ணம் எருக்கம் பூ மாலை சூடி மன நெகிழ்ச்சி யுற்று வருகின்றவனே.நகைகள் அணிந்த தன் காதலியின் பொன் போல் சுடரும் அந்த நெற்றியழகைக் காண ஒவ்வோரு வீடாக உற்றுப் பார்த்து மெல்ல மெல்ல அசைந்து வருபவனே.

தகரக்கூந்தல் கனலன் குரலென‌
கூரிய வீசும் அவள் நிலை அறியா
புல்லியக் கல்லா நெடுமகன் போல
மடலேறு ஆண்தகை மடம் கொண்டன்ன‌
அவள் பயிர் மடமே உணரா நின்று
உகுத்தனை என்னே விரிஉளை அலரி.

தகரம் எனும் நறுமண மூலிகையின் நெய்பூசிய மணம் மிக்க அவள் கூந்தல் (தகரக்கூந்தல்) வெம்மை மிக்க கதிரவனின் ஒளிக்கூந்தல்  கற்றைகளைப்போன்று கூர்த்த நோக்கில் உன்னைப் பார்க்கும் அவளின் (காதல்) நிலையினை நீ அறியாமல் சிறுமை மிக்கவனாய் படிக்காத முட்டாளைப் போன்று (புல்லியக் கல்லா நெடுமகன் போல) இந்த பனைமடல் குதிரை ஏறி வந்து விட்டாயே! மடத்தனம் எனும் பெண்மை நிறைந்த "மடப்பம்"என்பது ஆண்மகனுக்கு கொஞ்சமும் பொருந்துமோ? அவளது மெல்லிய மடப்பத்தை (காதலை வெளிக்காட்டாத‌ சிணுக்கம் நிறைந்த மடம் எனும் உணர்வை) நீ இப்படி புரிந்து கொள்ளாமல் ஒரு முரட்டுத்தனமான மடத்தனத்தை இப்பொய்க்குதிரை ஏறியா வெளிப்படுத்துவது? உன் குதிரையின் பொய்யான பிடரி மயிர்ப் பிசுறுகள் அலரிப் பூக்களைப்போல  தெருவெல்லாம் உதிர்வது போல் நீ என் மீது இப்படி ஊரார் தூற்றும் பழிச்சொற்கள் பரவ விடலாமோ?(விரித்தனை என்னே விரியுளை அலரி)

தூற்றல் கொடுநோய் அவள் உற்றது அறிதி.
குரூஉ மயிர் யாக்கை உளியத்து படர்முள்
செத்தென போர்த்த நீள்வரிப்பெண்ணை
நெடுமா தொலைச்சிய‌ செல்தி! ஒள்ளிழை
உண்கண் பனியின் பசப்ப கண்டிசினே.

அவள் அடைந்த பழிச்சொல்லால்  அவள் மிகவும்  துயர் உற்றதை இப்போதாவது தெரிந்து கொள். குட்டையான மயிர்கள் நிறைந்த உடம்பினை உடைய கரடியைப்போல் முள் படர்ந்தாற்போன்றே (குரூஉ மயிர் யாக்கை உளியத்து படர் முள் செத்தென) அந்த வரிகள் நிறைந்த நெடிய பனைமடல் குதிரையை அழித்துவிட்டு (தொலைச்சிய) அல்லது கொன்று விட்டு திரும்பிச்செல்.ஒளிமிக்க அணிகலன்கள் பூட்டிய அவள் உன்னை நினைத்து பசலையுற்று கண்ணீர் மல்கும் காட்சியை இப்போதாவது கண்டு கொள்வாயாக.

வெள்ளிமீன் விண்குறி விரைதி!விரைதி!
எதிர்தர வருவாய் குன்றின் அடுக்கத்து
ஏந்திழை ஆங்கு ஏந்திக்கொள வாராய்.

நாளை விடிவெள்ளி தோன்றும் வேளை அவள் உன்னை சந்திக்கும் ஒரு அடையாளம் (விண்குறி) அறிந்து விரைந்து வந்துவிடு. குன்றுகளின் அந்த அடர்ந்த வெளியில் அவளை நீ எதிர்கொள்ள வந்துவிடு.பெருமை மிக்க அணிகள் அணிந்து அங்கு உனக்காக காத்திருக்கும் அவளை காதலுடன் சந்தித்துக்கொள்ள‌ விரைந்து நீ அங்கு வருவாயாக!

தலைவன் மடலேறி தலைவிக்கு ஊர்ப்பழி ஏற்படுத்திய தவறைச் சுட்டிக்காட்டிய தோழி அவனுக்கு எடுத்து உரைத்தது.பனை மடல் குதிரை ஏறி தலைவன் தன் காதல் நிறைவேறாமல் போனதே என்று தன் துயரத்தை ஊருக்குச்சொல்லும் ஒரு வழிமுறை இது.தன்னைக் காதலிக்கவில்லை யென்றால் அமிலம் வீசிக்கொல்லும் இன்றைய அரக்கத்தனமான காதல் அல்ல அன்றைய சங்க காலக் காதல்
இதை சங்கநடைச் செய்யுட் கவிதையாய் "பெண்ணை மடல் மா.."என்ற தலைப்பில் இங்கு எழுதியிருக்கிறேன்.


=======================================ருத்ரா இ.பரமசிவன்
20.03.2016

சனி, 28 ஏப்ரல், 2018

"தி - லி டவுண்"

"தி - லி  டவுண்"
==========================================ருத்ரா

உன்னதமான‌
உலகத்து நகரங்கள்
எத்தனையோ இருக்கலாம்.
இருப்பினும் செல்லமாக
நாங்கள் இப்படி அழைக்கும்
திருநெல்வேலி டவுண்
எங்கள்
நாடி நரம்பில் எல்லாம்
வடம் பிடித்து
ஒரு தேரோட்டம் நடத்திக்கொண்டிரும்
கோலாகலம்
யாருக்குமே கிடைக்காது.
அதிலும்
அந்த "வாகையடி முக்கு"
வாழையடி வாழையாய்
இது தான்
"வாடிகன் சிடி".
எங்கோ பக்கத்தில்
மாதாங்கோயில் மணியொலியில் கூட‌
நெல்லையப்பரும் காந்திமதியும்
தங்கள் உடனுறை காட்சியை
ஒலி ஒளி தரிசனமாக்கி
த்ந்து கொண்டிருப்பார்கள்.
எல்லோரும் அங்கே
கொத்து கொத்தாய்
குவிந்து கிடப்போம்.
திருநெல்வேலிக்காரனுக்கு
இது
நியூயார்க் "டைம்ஸ் ஸ்குவேர்".

அந்த முக்கில் நின்று
எத்தனை மணித்துளிகளை
கரையவிட்டிருப்பேன்?
அந்த முனையிலிருந்து
நீளமாய் ஓடும்
தெக்குப்பூத்தெருவும்
நீலச்சுண்ணாம்பு பூசி
என்னவோ மஞ்சள் பூசிக்கொண்டது போல்
வெட்கப்படும்
தாசாலைகளும்
பட்டாலைகளும்
கொண்ட வீடுகள்
ட்ராமாவுல சீன்கள் மாத்துற மாரில்ல‌
நகந்துக்கிட்டேருக்கும்.
அதெல்லாம் நெஞ்சுக்குள்
ஓலைப்பெட்டி முட்டாசி கணக்கா
சுவையோ சுவை.
ஆனி மாசம்
தூள் கிளப்ப தூள் கிளப்ப ஓடிவிட்டு
அப்புறம்
தகரக்குல்லாய் போட்டு
வெய்யிலில் சுள்ளென்று
நின்று கொண்டிருக்கும்
அந்த சாமித்தேரும் அம்மன் தேரும்
என்னவோ கிசு கிசுத்துக்கொண்டிருப்பது
அந்த சட்டநாத சங்கிலிப் பூதத்தான்களுக்கு
மட்டுமே தெரியும்.
எவ்வளவு நேரம் நின்றாலும்
அந்த தூசிகள் கூட‌
அரைக்கழஞ்சி தங்கத்தூசிகள்
என்று
சொர்ண சொப்பனம்
கண்டுகொண்டு நிற்பேன் நான்.
போகும் முகங்கள்
வரும் முகங்கள்
எல்லாவற்றிலும்
ஏதாவது ஒரு நிழல்
அச்சிடித்திருக்கும்.
இவர் சிந்துபூந்துறைக்காரர்.
இன்னொருவர்
வழுக்க ஓடைக்காரர்.
அதோ அந்த பெண்
நேற்று குறுக்குத்துறையில்
மார்பு வரை சேலைகட்டி
தாமிரவர்ணியில்
முக்கியெடுத்து முக்கியெடுத்து
மேனியை மெருகு ஏற்றியவள்.
இப்போ
என்னை இடித்துவிட்டு
போகிறது போல் போகிறாரே
இவர் வேகத்தில்
எதோ ஒரு கவலைக்கு
கூளக்கடை பஜாரில்
தீர்வுகள் விற்கிறார்கள்
என்பது போல்
அதை வாங்கப்போகும் அவசரம்
அவலம் அவலமாய்த் தெரிகிறது.
சந்திப்பிள்ளையார் கோயில் பக்கம்
ஒரு லாலாக்கடை அல்வா
சுடசுட இலையில் சுருட்டி
கொடுக்கப்படுவது இங்கு
நாக்கில் சொட்டுகிறது.
அங்கே திரும்பி
ரெட்டை சம்முவம்பிள்ளத்தெரு
போறத்தெருவுப்பக்கம்
அந்த பாப்லர் டாக்கீஸில்
"வீடு நோக்கி ஓடி வந்த" பாட்டு
(இன்றோடு கேட்டு கேட்டு
எட்டு நாள் ஆகிவிட்டது)
இங்கு வரை காதுக்குள் குடைந்து
இனிப்பான மயில்பீலியைச்
சொருகுகிறது.
பதி பக்திலே சிவாஜி கணேசன்
பாடிட்டே வரும் காட்சி.
"எலெ.
என்ன நெனப்புலே.
இங்கன நின்னுகிட்டு..
போதும் போதும்
போலாம்.வீட்டுக்கு வா."
தோளுலே தட்டி கூப்புட்டுப்போனான்.
என் அண்ணன்
அந்த தெக்குப்பூத்தெருவுக்குள்
விருந்தாய் வந்த‌
பெரியம்மா வீட்டுக்கு.
"நாளக்கி
ஸ்கூல் தெறக்குலே"
கல்றகுரிச்சி திலகர்வித்யாலம்
கண்முன் வந்தது.
"சொற்றுணை வேதியன் சோதி வானவன்"
ப்ரேயர் பாட்டுடன்
திமு திமு என்று
செகண்ட் ஃபார்ம் வகுப்புக்கு போகவேண்டும்.
"வாகையடி முக்கே"
"வருவேன் ..மறவாதே.
அடுத்த லீவுக்கு."
வெகு பக்கத்தில் ஓடும்
வாய்க்கால் படித்துறையில்
டப் டப் என்று
துணி கிளியிர மாதிரி
தொவைக்கிற சத்தம்
முதுகில் அறைந்தது.

=================================================
29.12.2013ல்  எழுதியது.

"நான் யார்?"

"நான் யார்?"
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍=================================ருத்ரா

திருவண்ணாமலை
பாறையிடுக்குகளில்
பள்ளி கொண்ட முனிவர்
ரமணர்.
மனத்தின் படர்ந்த வெளியில்
மேய்ந்தவர்.
ஒரு தூசு கூட‌
இந்த மேனியில்
கோடிக்கணக்கான
டன் எடையுள்ள பாறை தான்
அவருக்கு!
அந்த உறுத்தலில்
அவருள் முளைவிட்ட கேள்வி தான்
"நான் யார்?"
அவர் நினைத்தார்
இந்த பிரபஞ்சத்தையே கூட‌
மூடி மறைக்க
ஒரு கோவணம் போதும் என்று?
அது தான்
அந்த "நான் யார்?" என்ற கேள்வி.
ஒரு சமணத்துறவிக்கு
அதுவும் தேவையில்லை.
கேள்வியே கேட்கவேண்டாம்.
வெட்கம் எதற்கு?
ஆசை எதற்கு?
வேதனை எதற்கு?
பிரபஞ்சம் தன்னையே
மூளியாய்
உற்றுப்பார்த்துக்கொண்டிருப்பதே
பிரம்ம நிர்வாணம்.
ஆன்மீகம்
என்பதும்
இப்படி கண்ணாடியை
சில்லு சில்லாய் நொறுக்கி
ஒவ்வொன்றிலும்
தன் பிம்பத்தையே
பார்த்துக்கொண்டிருப்பது தான்.
இந்த இதயத்துள்
வெண்டிரிக்கிள் ஆரிக்கிள்
அறைகள் மட்டுமே
உண்டு.
அதனுள் ரத்தம் ஆடும்
நர்த்தனமே ஆன்மீகம்.
அது தான்
இந்த உலக்மே உறையும் இடம்.
அதில்
சூலங்கள் இல்லை.
சிலுவைகள் இல்லை.
பிறைகளும் இல்லை.
மலைகளை
கற்பாளங்களாக‌
வெட்டி வெட்டித்
தின்னும் ஆசைகள் இல்லை.
ஆற்றைச்சுரண்டி
மணலும் நீரும்
கொள்ளையடிக்கப்படவேண்டும்
என்ற பணவெறி இல்லை.
என் மதம் உன் மதம்
என்ற கொலைகள் இல்லை.
மனித வர்ணங்கள் இல்லை.
இந்தப்பூவை
கோடரி கொண்டா பறிப்பது?
ஆன்மீகம்
மானிடப்பூ என்றால்
அரசியல் எனும்
கோடரிக்கு
அங்கு வேலையே இல்லை.
அப்படியென்றால்
ஆன்மீக அரசியல் என்பது
யாரோ
யாரையோ
ஏமாற்றுவது தான்.
அந்த "நான் யார்?"
அதற்கு எதிரே உட்கார்ந்திருக்கும்
அந்த "நீ யார்?"

ஓட்டு வைத்திருப்பவனே.
நன்றாய் உணர்ந்து கொள்
அந்த இரண்டுமே
அந்த கணினிப்பொறியின்
"பட்டன்" தான்!

====================================================

மெர்க்குரி


மெர்க்குரி
=========================================ருத்ரா

கமலஹாசனின் பேசும்படம்
பேசாத ஊமைப்படம் போல் வந்தது.
அதிலும் த்ரில் இருந்தது.
கூடவே நகைச்சுவையும் மெர்க்குரி
நகர்ந்து நகர்ந்து வந்தது.
அதிலும் "அனந்து"வின் அந்த
"ஐஸ் கத்தி" அபாரமாய் நடித்தது.

மெர்க்குரியில்
அந்த நாய்ச்சங்கிலியும்
அதில் இழுத்துவரப்படும்
பிரபு தேவாவும் தான்
படம் முழுதும்
நம் நரம்புகளில் "ஐஸ் அக்கினியை"
நிரப்பி நம்மை
துகள் துகளாக சிதறடிக்கின்றனர்.

அந்த ஐந்து நண்பர்களும்
பிரபு தேவாவின்
ஐந்து வித திகில் கோணங்களில்
அரண்டு விடும்போது
மொத்தக்கதையும் படமும்
கார்த்திக் சுப்பராஜை
மிக உயரத்துக்கு
கொண்டுபோய் விட்டது.
ஆல் ஃ ப்ரெட் ஹிட்ச்காக்
திரைப்படத்தில்
இப்படித்தான்
நம் ரத்தத்தை உறையவைக்க
ஒவ்வொரு மூலை முடுக்கிலும்
ஒரு காட்சியை செருகி வைத்திருப்பார்.
எதிர்பாராத அந்தக்கணம்
தியேட்டர் முழுவதும் "திடுக்"
என்று குலுங்கி விடும்.
மெர்க்குரி படம்
நிச்சயம் நம் திரைப்படப்பாதையில்
ஒரு புதிய மைல் கல்.
"பிரபு தேவாவின் நடிப்பு சூப்பர்ர்ர்ர் "
சூப்பர்ஸ்டாரே சொல்லிவிட்டாரே .
மொத்தமாய் அவர் மீது
விருது மழை பெய்தது போல்.
அது உண்மையே தான்.
ஏற்கனவே காதலன் படத்தில் அந்த
"முக்காபுலா"பாட்டுக்கு
ஏ ஆர் ரஹ்மான் இசைக்கு
தன்  உடம்பை
பார்ட் பார்ட்டாக கழற்றி வீசுவார்
அப்புறம்
ரம்மி சீட்டு போல செட் சேர்த்து விடுவார்.
இதில்
படம் முழுதும்
பயம் "பாதரசம்"போல்
சொட்டு சொட்டாய் ஒழுகி
அப்புறம் அடர்த்திக்கடலாய்
நம்மை அமுக்கி விடுகிறது.
அவர் நடிப்பும் அப்படியே
ஒரு "லிக்குடிட்டி"யை விரவி
கலவரப்படுத்துகிறது.
பயத்தையே கவிதை ஆக்கிய
ஒரு "பயோ"ஸ்கோப் இந்த
மெர்க்குரி எனும் பயாஸ்கோப்.

=============================================





ஆனைக்கு அர்ரம்....


ஆனைக்கு அர்ரம்....
============================================ருத்ரா


உஷ்..
மூச்...
சப்தம் காட்டாதீர்கள்.
தீர்ப்பு வந்து விட்டது.
விமரிசனம் செய்வது
தண்டனைக்குரியது.
தீர்ப்பினால்
சில சமயங்களில்
ஆளும் தகுதி இழந்தவர்கள் என‌
நியாயப்படி கருதப்படுகின்றவர்கள்
அந்த முழுக்காலத்தையும்
நியாயத்துக்கு புறம்பாக ஆண்டுவிடுகிறார்களே
அந்த ஜனநாயக அநியாயத்துக்கு
யார் தண்டனை தருவது?
அந்த "ஜனநாயக இழப்புக்கு"
நஷ்ட ஈடு இந்த மக்களுக்கு
யார் தருவது?
அந்த இழப்பீடு எவ்வாறு மதிப்பிடப்படும்?
ஆனைக்கு அர்ரம்
குதிரைக்கு குர்ரம் என்று தான்
சொல்லப்படும் என்றால்
இந்த ஜனநாயக விபத்தில்
மௌனமாக மக்கள்
ஒரு ரத்தச்சேற்றில் அமிழ்ந்து கிடப்பது போன்ற‌
அல்லது இந்த‌
ஜனநாயக "கோமா"வுக்கு
எப்படி இயக்கம் தருவது?
அல்லது
மரச்சுத்தியல் தட்டி
ஒரு கருணைக்கொலைக்கு
சைகை காட்டி விடவேண்டியது தானா?
சொத்துக்குவிப்பில்
தண்டனை பெற வேண்டியவர்
சாவகாசமாய்
மறுபடியும்
ஆயிரக்கணக்கான‌
பக்கங்கள் படிக்கப்பட்டு அல்லது
எழுதப்பட்டு
அவர் தண்டனை தரப்படும்போது
அரசு எந்திரமே
அவர் கைச்சொடுக்கில்
அல்லது
அவர் காலடியில்
வீழ்ந்து கிடக்கும்
போமரேனியன்களாய்
இந்த ஜனநாயகம் ஆகிப்போகின்றதே?
அதற்கு யார் பொறுப்பு?
கேட்டால் ஓட்டுக்களே வலுவானது
என்பார்கள்.
அப்படியென்றால்
அவர் எப்படி ஒரு கிரிமினல் ஆக முடியும்?
உச்சமாய் தீர்ப்பு கொடுத்துவிட்டோம்
அவர் அப்படித்தான் என்றால்
சட்டமன்றம் எனும் ஜனநாயக ஆலயத்தின்
கருவறைக்குள்
அவர் படம் இருப்பதை
என்னவென்று சொல்வது?
நிழல் உலகங்கள் இருப்பதைப்போல‌
நிழல் நியாயங்களும்
கண்ணுக்குத்தெரியாமல்
வித்தை காட்டுகின்றனவோ?
"நீதி தேவன் மயக்கம்" என்றார் அண்ணா!
இங்கே மயக்கங்களுக்கும் குழப்பங்களுக்கும்
அடியில் நசுங்கிக்கிடப்பது தான்
நீதியா?
"ஷரத்துக்களும் உள் ஷரத்துக்களும்" கூட‌
நமக்கு இன்னும் திசை காட்டாத‌
சொற்காடுகள் தான்.

உஷ்..
மூச்...
சப்தம் காட்டாதீர்கள்.
ஆனைக்கு அர்ரம்.
குதிரைக்கு குர்ரம்.

====================================================

காந்தள் நெகிழும் கடிவிரல்..

காந்தள் நெகிழும் கடிவிரல்..
===========================================ருத்ரா இ பரமசிவன்

"காந்தள் நெகிழும் கடிவிரல் தூஉய்
ஐம்பால் வகுக்கும் கொடுநிலை அன்ன‌
அலையின் அலையின் நெளிதரும் நினைவின்
ஆரிடை மிதப்ப களிகூர் போழ்தின்
இன்னிசை ஏந்தினேன் தோழி நீ ஓர்க!
காலிடை ஆயிரம் கீற்றுகள் பிளக்கும்
பண் அஃதின் அமிழ்தும் சுவைப்பாய் மன்னே!"


பொருள்
==========================================


தலைவி தன் காந்தள் மலர் ஒத்த‌ மெல்லிய விரல்களால் கோதி கோதி தன் கூந்தலில் வகிடுபிரித்த போது வளைவு வளைவுகளாய்
இருக்கும் அந்த  கூந்தல் சிக்கலில் ஈடுபட்டிருக்கிறள்.அந்த
கூந்த‌லைப்போலவே அலை அலையாய் அவள் மீது கவிழும் இனிய நினவுகளில் அவள் மிதந்து களிப்புற்ற போது "ஒரு மெல்லிசையை தவளவிட்டேனே! தோழி அதனை நீ கேட்டாயா?" என்று அவள் தன் தோழியுடன் பேசுவதாய் உணர்கிறாள்."அந்த இசை ஒலி காற்றினுள்ளும் ஆயிரம் கீற்றுகள் பிளக்கும்.அத்தகைய பாட்டின் அமுதத்தையும் நீ சுவைப்பாயாக" என்று மகிழ்ந்து கூறிக்கொள்கிறாள்.

=================================================
26.05.2017

திங்கள், 23 ஏப்ரல், 2018

புத்தகத்திருவிழா


புத்தகத்திருவிழா
============================ருத்ரா

வழ வழ அட்டைப்படத்தோடு ஒன்று.
கம்பியுட்டர் கர்ப்பப்பையிலிருந்து
அச்சாகி வந்த ஒன்று.
"மாடர்ன் ஆர்ட்" டில்
உடுத்துக்கொண்டு
புதிர் உருவதோடு
பளப்பாய் பளப்பாய் ஒன்று.
எத்தனை எத்தனை புத்தகங்கள்?
இதில் நீ எங்கு ஒளிந்திருக்கிறாய்?
அவள் கவிதைத்தொகுதியைத்தான்
தேடிக்கொண்டிருக்கிறேன்.
காதலை சொல்லும் புத்தகம் அது.
எனக்கு தலைப்பிலேயே
"ஐ லவ் யு" சொல்லப்போகிறாளாம்!
அந்த புத்தக்காடுகளில்
துருவி துருவிக்களைத்தேன்.
கடைசியில் கண்டுபிடித்து விட்டேன்.
தலைப்பை பார்த்து விட்டேன்.
அது.
"கடல் சீற்றம்"
குமரிக் கடல் சீற்றம்.

==============================

ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

ஓங்குக அண்ணல் அம்பேத்கார் புகழ்

ஓங்குக அண்ணல் அம்பேத்கார் புகழ்!
====================================================ருத்ரா.

ஒரு சுதந்திரத்தின் கருவறையில்
இன்னொரு சுதந்திரத்தின் கல்லறையும்
கட்டிவைக்கப்பட்டிருந்த 
விசித்திர  வரலாறு கொண்டது
நம் இந்திய தேசம்.
மனிதனை மனிதன் கைகுலுக்கிக்கொள்ளும்
மானிடப்பூவின் மாணிக்க மகரந்தங்கள்
இந்த உலகத்தின் காற்றையே
தூய்மைப்படுத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில்
இங்கு மட்டும் "தொட்டால் தீட்டு"
என்று அநாகரிகத்தின்
முடைநாற்றம் வீசிக்கொண்டிருந்ததே!
அதில் வெளிப்பட்ட சிந்தனைச்சீற்றத்தின்
விடியல் "உருவகமே" அண்ணல் அம்பேத்கார்!
மூவர்ணக்கொடியேந்தி சுதந்திரத்தின்
மூச்சுக்காற்றை முழங்கியவர்களின்
நரம்புப்புடைப்புகளில் எல்லாம்
நாலு வர்ணம் அல்லவா குதித்தோடிக்கொண்டிருந்தது.
தளை என்றால் தமிழில் "கட்டு"என்று பொருள்.
அப்படித் தளையில் தளைக்கப்பட்டு கிடக்கும்
கருஞ்சிறுத்தைகளின் கட்சியைத்தான்
தலித்துகளின் புதிய யுகமாய் திரட்டியவர் அம்பேத்கார்.
தலித் எனும் சிங்க மராட்டியனின் அந்தக்கவிதையில்
தமிழின் விடுதலைத்தாகமும் இருந்தது என்பது
இன்றும் நாம் காணும் உண்மை.

துப்பாக்கித் தோட்டாவுக்கு
பசுக்கொழுப்பா? பன்றிக்கொழுப்பா? என்று
மதக்கொழுப்பு கொழுந்து விட்டு எரிந்ததில்
ஒரு சிறு பொறியே
நம் நாட்டின் விடுதலைத்தீ வெள்ளத்தை
கர்ப்பம் தரித்தது..அதை
அற்பம் ஆக்கிட முடியுமா சாதீயின் ஆதிக்கம்?

சாதிக்கொடுமையை
சான்றோர்களே தவறு என உணர்ந்து கொள்ளச்செய்து
தன் ஓங்கி உலகளந்த கல்வியால்
சட்டமும் பொருளாதாரமும் கற்றுத்தேர்ந்த‌
மாமேதை நம் அம்பேத்கார்.

கங்கையைக் கொண்டு
கண்னில் கண்டதையெல்லாம்
சுத்தப்படுத்திய
அந்த சனாதனிகளின் கங்கையை
சுத்தப்படுத்தியது
அந்த கனத்த சட்டப்புத்தகம் மட்டுமே.
அந்த கறுப்புத்தங்கத்தின்
கை பட்ட புத்தகம் அல்லவா அது!

மேன்மை மிக்க
நம் முன்னாள் குடியரசு தலைவர்
அப்துல் கலாம் அவர்கள்
கனவு காணுங்கள் என்று
சரியாகத்தான் சொன்னார்.
இன்னும் தழல் வீசும் அந்தக்கனவே
நம் இதயம் நிறைந்த அண்ணல் அம்பேத்கார்.

ஓங்குக அண்ணல் அம்பேத்கார் புகழ்!

==================================================
15.04.2015 ல் எழுதியது.

சனி, 21 ஏப்ரல், 2018

வெள் நள் ஆறு


வெள் நள் ஆறு
===================================ருத்ரா இ பரமசிவன்.

வெறுமை பொருந்திய நள்ளிரவின் கூர்முனையில் நாய்களின்
ஒலிகளின் கூர்மையும் சேர்ந்து தலைவியை வதைத்த பிரிவுத்துயரம்
பற்றி நான் எழுதிய சங்கநடைச்செய்யுட் கவிதை இது.

வெள் நள் ஆறு
====================================ருத்ரா இ பரமசிவன்

ஞெமலி மகிழ்தரு வெள் நள் ஆறு
நீள ஒலிக்கும் புன்மைசெறி கங்குல்
அல்கு பொலம்வரி அணியிழை நெகிழ‌
மைபொதி விசும்பு விரியுளை அன்ன‌
மஞ்சுபரி ஏகும் உருகெழு வல்மா
நோதல் கதழ்த்து நெஞ்சகம் சிதைக்கும்.
ஓமை ஒளித்து பார்ப்புகள் கூட்டும்
வரிமணல் கீற வடியிலை எஃகம்
பசும்புண் பிளப்ப வெஞ்சமர்  கூர‌
அலமரல் ஆற்றா அளியள் ஆகி
கம்பலை உற்று கண்மழைப் படூஉம்
மடமும் பயிர்ப்பும் உடைபடுத்தாங்கு
ஊழி பெயர்த்த பெருங்கல் கொல்லோ
பொடிபட வீழ்க்கும் சேக்கை கண்ணே.
பொருள் மறை செய்து பொருள் நசைபெருக்கி
பொரியும் தீச்சுரம் உள் உள் கடாஅய்
யாது ஆற்றினை?அழியுமென் அணிநிறை.
அரவு வாய்ப்படு மென்சிறை அம்புள்
ஆகுவன் அறிதி.வீடத்தருதி.
மலைபடு ஊர! மல்லல் சீர்த்து.

===============================================
30.11.14 ல் எழுதியது.


வியாழன், 19 ஏப்ரல், 2018

அது


அது
=======================================ருத்ரா இ.பரமசிவன்

அதை இன்னமும் தேடுகிறேன்.
அது என்ன என்று
இன்னும் எல்லோரும் தேடுகிறார்கள்.
லட்சக்கணக்கான ஸ்லோகங்களில் எல்லாம்
திரும்ப திரும்ப‌
கொட்டிக்கவிழ்த்து தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
அது எங்கே இருக்கிறது?
என் வயிற்றிலா?
அல்லது சுருட்டி மடக்கி வைத்திருக்கும்
அந்த 22 அடி நீள‌ குடல்களிலா?
அந்த பஞ்சு நுரைப்பூங்காவனமாகிய‌
நுரையீரலிலா?
அல்லது
துடித்து துடித்து நுரை கக்கி ஓடி
வயதுகள் எனும்
மைல்கற்களை நொறுக்கிக்கொண்டு ஓடும்
கையளவு குதிரையான‌
இதயத்திலா?
அந்த டி என் ஏ , ஆர் என் ஏ சங்கிலிகளிலா?
மூளையின்
அந்த மடிப்புகளிலா?
நீயூரான்ககளிலும் சைனாப்டிக் ஜங்க்ஷன்களிலும்
அதனுள் நுணுக்கமாய்
ஜமா பந்தி நடத்திக்கொண்டிருக்கும்
அந்த "பர்கிஞ்சே" செல்களிலும்
என்று
இண்டு இடுக்குகளில் எல்லாம்
அது கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறதே!
அது என்ன?
உடலின் நவத்துவாரங்கள் வழியே
வந்து போகும்
காற்றையும் கூட‌
பதஞ்சலி சூத்திரத்தின் படி
பக்குவப்படுத்திப் பார்த்து விட்டோமே
கையில் கிடைக்கவில்லை அது.
கருத்தில் அகப்படவில்லை அது.
ஆம்
நான் தேடுவது அதோ அந்த...
ஒரு ஒளியாண்டு
அதாவது பத்து ட்ரில்லியன் கி.மீ
கனமுள்ள ஈயக்கட்டியைக்கூட‌
வெகு சுலபமாய் புகுந்து துளைத்து
அந்தப்பக்கம் போய்
இன்னும் பல பில்லியன் மைல்களை
கடந்து போய்க்கொண்டிருக்குமாமே
அந்த‌
"நியூட்ரினோ"வைத்தான்
"ஆத்மா"வை அல்ல!

======================================================
08.10.2015 ல் எழுதியது.

புதன், 18 ஏப்ரல், 2018

யானை




யானை
==========================================ருத்ரா இ.பரமசிவன்

இங்கே கொலை.
அங்கே கொலை.
கொலைக்குள் ஒரு தற்கொலை.
தற்கொலைக்குள் ஒரு கொலை.
சாதிக்காரணம்.
அரசியல் காரணம்.
காவிரித்தண்ணீர்.
ஈழம்.
தமிழ் என்னும்
ஆயிரம் ஆயிரமாய் பிணங்கள்.
இந்திய சாணக்கியம்
இறுக்க தாழ் போட்டு விட்டது.
ஐ.நா கூட கண்களை மூடிக்கொண்டு
குப்புறக்கிடக்கிறது.
யாருக்கென்ன?
பிள்ளையார்களையெல்லாம்
கடலில் கரைத்தாயிற்று.
அந்த "சசி வர்ண சதுர் புஜ"
ரசாயனம் எல்லாம்
திமிங்கிலங்களின் வயிற்றில்.
நூற்றுக்கணக்காய் அவை
நாளை மிதக்கும் கரையில்.
அதையும் விழாக்கோலம் கொண்டு
பார்க்க மக்கள் கூட்டம் தான்.
எங்கும் எதிலும்
ஈக்கள் கொசுக்கள் மொய்க்கின்றன‌
ஊடகங்களாய்.
சினிமாக்களிலும்
சமுதாய உடல்களின்
மார்ச்சுவரி இருட்டுகள்.
நீதி மன்றங்களும்
அப்போதைக்கப்போது
மரச்சுத்தியல் தட்டுகின்றன.
வாய்தா.
ஜாமீன்.
மறுபடியும்
மறுபடியும்
சக்கரம் சுழல்கிறது.
மண் புழுக்கள் நசுங்குகின்றன.
மணற்கொள்ளை.
வீடு புகுந்து
கொள்ளை கொலை.
கிரானைட்டை வெட்டி எடுக்கிறேன்
என்று சொல்லி
மலைகளை எல்லாம்
மாமிசம் போல் அறுத்து விற்பனை.
பணம் குவிகிறது.
அதன் நிழலே
நம்மை எல்லாம் அசையாமல்
தின்கிறது.
அந்த ராட்சசப்பறவை
சிறகடிக்கிறது.
சட்டம் ஒழுங்குக்குப்பின்னால்...
ஒழுங்கு சட்டத்துக்குப் பின்னால்...
சட்டம் ஒழுங்கு
நம் வேதம்.
நம் வேதாளம் எல்லாம்...
இதனூடே தான்.
தேர்தல் ஆணையம் எனும்
மந்திரக்கோல்
ஒரு யானையிடம்
மாலையைக்கொடுத்து
போடச்சொல்கிறது.
அது
மாலையா?
மலர்வளையமா?
இந்த ஜனநாயகம் விறைத்துக்கிடக்கிறது.

===================================================
25.09.2016 ல் எழுதியது.

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

கொடுவரி முதலை குடை தண் துறைய‌.



"கொடுவரி முதலை குடை தண் துறைய‌."
==================================================ருத்ரா இ பரமசிவன்.


தமிழன் திணை எனும் நிலப்பாகுபாடும் அதற்கேற்ற ஒழுக்க நிலையும்
மாண்புகள் கொண்டவை.காதல் வாழ்வில் பிரிதல் எனும் உணர்வு எழுச்சி
நுண்மையான வெளிப்பாடுகளில் சங்கப்புலவர்களால் பாடப்பட்டுள்ளன.
அத்தகைய ஒரு "நெய்தல்"காட்சியின் அழகிய நுண்வரிகளை என் கற்பனையில் நான் யாத்து எழுதிய சங்கநடைக் கவிதை  இது.


கொடுவரி முதலை குடை தண் துறைய‌.
==============================================ருத்ரா இ.பரமசிவன்

தன் பார்ப்பு தின்னும் தழல் குமிழ் தோலின்
கொடுவரி முதலை குடை தண் துறைய‌
குறிஎய்தி நெடுங்கங்குல் மடி தொலைத்து மாய‌
உடல் உயிர் தின்னும் உயிர் உடல் தின்னும்
பிணி தந்து கொளீஇ யாங்கு சென்றனை?
அம்பணத்தன்ன கவிழ் ஓமைப் புறத்து
அரிகுரல் குருகின் பரல் ஒலி ஒழுக்கத்து
வேங்கை வரித்த திண்கால் ஓமை
அசைவுறு காலை முரண்தர முரலும்
அதிர் ஒலி ஆர்க்க சிறை சிறை படுத்து
அலமரல் செய்யும் அயற்சினை சேரும்
எக்கர் மருங்கின் காட்சிகள் ஏய்க்கும்.
எரியுண்ட குவளையன்ன அழிபடு நலன்கள்
ஆவி உண்ணும் அவிர்நிலை தீர்ப்பாய்.
ஒளி ஒளித்து ஊரும் முளிபெயர் மஞ்சும்
கதிர் விழி மறைக்கும் அடுபோர் அட்ட‌
இரும்பொறை நெஞ்சத்து நெக்கு வீழ்த்து
தழீஇய வருதி!அழல்படு அளியள் யானே
.
______________________________________________________________


விளக்க உரை.
==============================================ருத்ரா இ.பரமசிவன்

தன் பார்ப்பு தின்னும் தழல் குமிழ் தோலின்
கொடுவரி முதலை குடை தண் துறைய‌
குறிஎய்தி நெடுங்கங்குல் மடி தொலைத்து மாய‌
உடல் உயிர் தின்னும் உயிர் உடல் தின்னும்
பிணி தந்து கொளீஇ யாங்கு சென்றனை?

தன் குட்டிகளையே தின்னும் இயல்புள்ளது முதலை.அது  நெருப்புக்குமிழிகளும் வளைந்த வரிகளும் உடையது.அந்த முதலைகள் குடைந்து நீராடும் குளிர்ந்த நீர்த்துறைகள் உடையவனே.இந்த நீண்டநெடும் இரவில் நீ வருவாய் என காத்திருந்து (குறி எய்தி) தூக்கம் தொலைத்து மாய்ந்து போக என் உயிர் என் உடலைத் தின்கிறதா?என் உடல் என் உயிரைத்தின்கிறதா? எனும் ஒரு வித நோயால் துன்புற்றேன். அந்நோயை எனக்கு தந்து விட்டு நீ எங்கு சென்றாய்?


அம்பணத்தன்ன கவிழ் ஓமைப் புறத்து
அரிகுரல் குருகின் பரல் ஒலி ஒழுக்கத்து
வேங்கை வரித்த திண்கால் ஓமை
அசைவுறு காலை முரண்தர முரலும்
அதிர் ஒலி ஆர்க்க சிறை சிறை படுத்து
அலமரல் செய்யும் அயற்சினை சேரும்
எக்கர் மருங்கின் காட்சிகள் ஏய்க்கும்.

மரக்கால் (அம்பணம்) எனும் ஒரு அளவைப்பாத்திரத்தை கவிழ்த்து வைத்தாற்போல் அசையாமல் கிடக்கும் பெரிய‌ ஆமையின் முதுகுப்புறத்தின் மேல் ஓயாமல் ஒலித்து குரல் எழுப்பும் நாரையின்அந்த ஒலி மழையில் வேங்கை மரத்தின் வரிகள் போன்ற காலை உடைய ஆமை கொஞ்சம் அசைந்து கொடுக்க அவ்வேளை அந்த நாரை ஆமைக்கு உயிர் இருக்கிறதோ என்ற எண்ணத்தில் வேறுபட்ட குரல்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்து அங்கே மீண்டும் மீண்டும் பறக்கும். பிறகு பறந்து திரிந்து அருகில் உள்ள மரக்கிளைகளில் போய் அமரும்.இத்தகைய மணற்கரைத்திட்டுக் (எக்கர்) காட்சிகள் நம் கண்களை மயக்கும்.(அது போல் ஏமாற்றி செல்லுவதே உன் வழக்கம்)



எரியுண்ட குவளையன்ன அழிபடு நலன்கள்
ஆவி உண்ணும் அவிர்நிலை தீர்ப்பாய்.
ஒளி ஒளித்து ஊரும் முளிபெயர் மஞ்சும்
கதிர் விழி மறைக்கும் அடுபோர் அட்ட‌
இரும்பொறை நெஞ்சத்து நெக்கு வீழ்த்து
தழீஇய வருதி!அழல்படு அளியள் யானே.

மென்குவளை மலர் தீப்பற்றி எரிந்தால் எப்படியிருக்குமோ அது போல் என் அழகு நலன்கள் சிதைந்து அந்த வெப்பத்து ஆவி என்னை உண்ணும் அந்த அவிந்துபோகும் நிலையிலிருந்து எனைக்காப்பாய். பகலவன் ஒளியை ஒளித்து ஒளித்து  ஊர்ந்து செல்லும் குழைவான மேகங்கள் அக்கதிரவனின் கண் பொத்தி விளையாடும்.ஆனால் அது அவன் என் மீது தொடுக்கும்  கொடும் போர் ஆகும். இறுகிய பாறை போன்ற உன் உறுதியை என்னிடமா காட்டுவது? உள்ளம் இளகிய பசுந்தளிராய் என்னிடம் வந்து என்னைத் தழுவிக் கொள்வாயாக. அனல் பட்ட நிலையில் துடிக்கும் எனக்கு அன்பினை அருள்வாய்.

==============================================ருத்ரா இ.பரமசிவன்
09.02.2016 ல் எழுதியது.



என்னை உரித்துக்கொண்டு...

என்னை உரித்துக்கொண்டு...

============================================ருத்ரா இ.பரமசிவன்.



எனக்குள் நான் இயல்பாய் இல்லை.

யார் என்னை பிதுக்கி க்கொண்டு   வெளியேறுகிறார்கள்.?

நாலு தலைமுறைக்கு முந்திய ஏதோ ஒரு பிறவி

தலை விரிகோலமாய் வெளியே வருகிறது.

வயது முடியாமல் எங்கோயோ ஒரு புளிய மரத்துக்கிளையில்

கயிற்றில் தொங்கி விட்டு

இப்போ சர  சரவென்று கீழே இறங்கி ஓடுகிறது.

என் எதிரில் உட்கார்ந்து சாவதானமாய் கேட்கிறது.

சமணத்துறவிகளை குடைந்து குடைந்து கேட்கிற

சங்கராசாரியார் பாஷ்யம்போல்

வாதராயணர் போல் கேட் கிறது.

காரணம் எது?காரியம் எது?

இரண்டுமேயாகவும் இரண்டுமே இல்லாமலும்

பரமாத்மாவுக்கு முந்திய ஜீவாத்மாவும்

ஜீவாத்மாவின் யோனிக்குள் தங்கியிருக்கிற பரமாத்மாவும்

.................

இன்னும் வாய்க்குள் நுழையா சம்ஸ்கிருத கொத்து கொத்தான

சொற்றோடர்கொண்டு

அது துளைத்துக்கொண்டே இருந்துது.

காலம் பின்னோக்கிக்கொண்டே போய்

காலம் காலத்திலிருந்தே கழன்று கொண்டது போல்

காலம் அறுந்து விழுந்தது.

யார் அது? எது அது?

திடீரென்று நாமக்கல் கோவில் தெய்வம்

கனவில் வந்து

எலிப்டிக் ஃ பங்க்ஷனின் க்யூப்த் ரூட் சொல்யூஷன்

சொல்லிசென்றதே அந்த தியரம் சொல்லு

என்று ராமானுஜனாய் ஒரு விஸ்வரூபக் குரல்  கேட்கிறது!

அது 2105 ஆம் ஆண்டின் நுணுக்கமான "ப்ரேன் காஸ்மாலாஜியின்"

கணித விவரம்..

என்ன இது? எதுவும் புரிய வில்லை.

நான் ஹீப்ருவில் கூட ஓல்டு டெஸ்டமெண்டை

அப்படியே ஒப்பிக்கிறேனாம்.

என்னை உரித்துக்கொண்டு

நிர்வாணமாய் ஓடியது யார்?

கோடி பறக்குது! கடல் துடிக்குது!ஒலி பெருக்கி வலியை பெருக்கியது.

ராவெல்லாம் என் நாக்கில் கோடாங்கி அதிர்ந்ததாம்.

அப்பா பதறி விட்டார்.அம்மா அழுது புரண்டாளாம்.

விடிந்தது.

முக்கு வீட்டு சாமியாடி பூதப்பாண்டிக்கு

ஆள் போயிருக்கிறது.



==================================================================










திங்கள், 16 ஏப்ரல், 2018

ரஜனி கமல் சிங்கங்களே!

ரஜனி கமல் சிங்கங்களே!
============================================ருத்ரா

அது என்ன?
நீங்கள் என்ன சொன்னாலும்
சினிமா வசனங்களாய்த்தான்
எங்களுக்கு கேட்கிறது.
காவிரிக்காக‌
தமிழ் நாட்டில் போராட்டக்கடல்
அலையடித்த போது
ஏன்
இன்னும் அந்த "அரிதார"க்கரையிலேயே
நின்று கொண்டிருக்கிறீர்கள்?
அவ்வப்போது
கூட்டங்களை திரட்டி
மனித முகங்களின்
காடுகளாய் படர்ந்து நின்றாலும்
தமிழ் மக்களின்
போராட்ட நரம்போட்டங்களில்
வெறும்
"கிளிசரினை"த் தடவினால்
போதும் என்றா நினைக்கிறீர்கள்?
பொது எதிரி யார் என்று
பிண்டம்பிடித்து காட்டியது போல்
போராடும் மக்கள் திசையை காட்டியபோதும்
தனியே தண்டவாளம் போட
நினைக்கும் "ட்விட்டர்" போராளிகளே.
மக்களுக்குள் ரசிகர்கள் இருக்கலாம்.
ரசிகளுக்குள் மக்கள் இருக்கவேண்டாமா?
சில தமிழருவி மணியன்களோ
இல்லை
சில அப்துல் கலாம் கனவு வாதிகளோ
"தமிழ்நாடு" இல்லை.
உலகமேப்பில்
சஹாரா பாலைவனங்கள் கூட‌
பேரீச்சை வனங்களால் செழிப்படையும்.
ஆனால்
அந்த "சஹாரா பாலைவனத்தை"
நம் காவேரி டெல்டாவில்
பதியமிட
ஒரு கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்தில் கூட‌
ஸ்லோகங்கள் இருக்கலாம் போலிருக்கிறது.
இனி இந்த அச்சமே நம் வீரம்!
கரையில் கையை கட்டிக்கொண்டு நிற்பது
எந்த வகை போராட்டம்?
உங்களுக்கும் பின்னே
"ஆக்சன்" "கட்"
என்ற "கேளா ஒலியின்"
வினோத டெசிபல்கள் ஏதேனும்
வழி நடத்துகின்றனவோ?
எனதருமை தமிழ் மக்களே!
இது வரை உங்கள் கந்தல் வேட்டிகளின்
வழியே வெள்ளித்திரை வெளிச்சம்
பார்த்ததெல்லாம் போதும்.
அதோ
கிழிந்து கிழிந்து வெட்டுகின்ற‌
வானத்தைப்பாருங்கள்.
போராட்ட மின்னல்கள்
உங்கள் அவலங்களையெல்லாம்
அழிக்க ஒளி பாய்ச்சுகிறது.
நீங்கள் "ஒளியேந்திகள்"
வெறும் இருள் பூச்சிகள் அல்ல!

==================================================

என்ன செய்வது இந்த சன்னல் கம்பிகளை?

என்ன செய்வது இந்த சன்னல் கம்பிகளை?









என்ன செய்வது இந்த சன்னல் கம்பிகளை?
======================================================ருத்ரா

எத்தனை தடவை தான்
இந்தக் கம்பிகளை.
என் கண்களால் வருடுவது?
ஒரே ஒரு தடவை
அந்த கம்பிகளில்
நிலவின் பிம்பம் பிதுங்கி சிரித்தது
அப்புறம் காணவே இல்லை.
அந்த "கம்பி மத்தாப்புகளில்"
தினமும் ஒரு வெளிச்சத்தைப்பார்த்தேன்
அவள் முகம், காட்டாத
அந்த வெறுமையிலும்
தினமும் புதிது புதிதாய்
பூக்கள் தான்.
கதவுகள் சாத்தப்படும் சத்தம்
கேட்டு ஓடுவேன்.
அவள் அம்மா கதவுகளுக்கு
கொக்கி மாட்டுவது மட்டுமே
தெரிந்தது.
அந்த கொக்கியில்
அவள் எறிந்த
பொன் தூண்டில்கள்
என் மனம் தைத்ததில்
துடித்து துடித்து
வதை படுகின்றேன்.
இந்த கம்பிகளை மராமரம் ஆக்கி
அம்புவிடும்
அவள் கண்கள்
என் இருதய ஆழத்தில்
குத்திட்டு நிற்கிறது.
அந்த இரும்புக்கம்பிகளின்
வானத்தில்
ஒரு தடவையாவது
நட்சத்திரங்களின்
சாரல் தெறிக்காதா?
இன்னும்
கம்பிகள் எண்ணிக்கொண்டு தான்
இருக்கிறேன்.
அவள் எப்போது எடுப்பாள் என்னை
"ஜாமீன்"?

=========================================
24.01.2016 ல்  எழுதியது.

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

ஓலைத்துடிப்புகள்

ஓலைத்துடிப்புகள்
=========================================ருத்ரா இ பரமசிவன்.


"கண்டிகும் அல்லமோ கொண்க‍   நின் கேளே?
தெண்டிரை பாவை வௌவ‌
உண்கண் சிவப்ப அழுதுநின் றோளே."
......

கற்பனைநயம் மிக்க வரிகளால் நம்மைக்கவர்ந்த சங்கத்தமிழ்ப்புலவர்  அம்மூவனார் எழுதிய ஐங்குறு நூற்றுப்பாடல் (125) இது. தெள்ளிய திரை என்று பொருள் படும் கடல் அலைகளின் நுண்மையான விளையாட்டு மிகவும் உற்று நோக்கத்தக்கது.அம்மூவன் எழுதிய "தெண்டிரை பாவை" எனும் சொல் கடல் விஞ்ஞானத்தில் அலைகளின் நுணுக்கமான இயக்கங்களை குறிக்கிறது.அதில் கிடைக்கும்"தெள்ளிய மண்ணில்" பாவை செய்து விளையாடும் தலைவியின் பால் மணம் மாறாத மனத்துள்ளும் சுரக்கும் காதலின் பிஞ்சு ஊற்றில் ஒரு பிரளயமே ஒளிந்திருக்கிறது என்பதை காட்டவே நான் இந்த சங்கநடைக் கவிதையை யாத்து உள்ளேன்



(தலைவின் துயரம் கண்டு பொருள் தேடச்சென்ற தலைவனை நோக்கி சொல்லுவது போல் பாடப்பட்ட தோழியின் கூற்று.)

இலஞ்சி பழனத்தவள்
==============================================ருத்ரா இ பரமசிவன்

இலஞ்சி பழனத்தவள் விழிமுன் விரிய‌
முட்சுரம் கற்சுரம் நளி எரி வெங்கடம்
கடாஅய்ச் செல்லும் இருப்பணைத் தோள!
அலைபடு முன்னீர்க் கரையக் கரைபடு
வௌவல் பௌவம் வளை முரல் ஆர்ப்ப‌
அழியுறு நெஞ்சில் அளியை ஆனோய்!
தொண்டிரை தந்த தொண்டி ஊர்பு
தெண்டிரை வண்டல் பாவை அழிய‌
மண்டிரை வெறியாட்டு வெருவி அழூஉம்
அளியள் காண்குவை.விரைதி விரைதி.
குவளையுள் குவளை பல்மழை தூஉய்
மடப்பு மீக்கூர வெண்கணீர் பெய்யும்
ஐது அமை இறையவள் வெஃகிய காட்சி
முதிர் தகையன்று அறிதி அறிதி.
பால் இழி தாமரை காமர் புரையா
ஒண்ணுதலி.மற்று ஏதும் ஓரா மன்னே.
பாவை கையில் மற்றொரு பாவை
படுத்தன்ன கரைவாள் தேற்ற வருதி.
பஞ்சாய்க் கோதை மகள் அல்ல இவளே.

===============================================






பொழிப்புரை
===================================================ருத்ரா

இலஞ்சி பழனத்தவள் விழிமுன் விரிய‌
முட்சுரம் கற்சுரம் நளி எரி வெங்கடம்
கடாஅய்ச் செல்லும் இரும்பணைத் தோள!
அலைபடு முன்னீர்க் கரையக் கரைபடு
வௌவல் பௌவம் வளை முரல் ஆர்ப்ப‌
அழியுறு நெஞ்சில் அளியை ஆனோய்!


உறுதி மிக்க மூங்கில் போன்ற தோள் வலிமை மிக்க தலைவனே!இலஞ்சி எனும் அடர்நிழல் தவளும் நீர்ச்சுனைகள் நிறைந்த ஊரின்
கனிச்சோலைகள் போல் கண்ணேதிரே எழிற்கோலம் காட்டும் உன் காதலியின் முகம் தோன்றும்படி கல்லும் முள்ளும் கலந்து வெம்மை
மிகுந்த காட்டுவழியில் கடந்து  செல்கிறாய்.கடலின் அலைகள் அரித்து அரித்து மண்திட்டாய் நிற்கும் கரை கூட கரைந்து போய்விடுகிறது. நிலப்பகுதியை பறித்துக்கொள்ளும் கடல் சங்குகளின் ஒரு வித ஒலியோடு ஆர்ப்பரிக்கிறது.அது போல் உன் நெஞ்சம் தலைவியை நினைத்து வேதனை உறுகிறது.




தொண்டிரை தந்த தொண்டி ஊர்பு
தெண்டிரை வண்டல் பாவை அழிய‌
மண்டிரை வெறியாட்டு வெருவி அழூஉம்
அளியள் காண்குவை.விரைதி விரைதி.
திணையின் திரிதரு திரள்நெரி மயக்கமனைய‌
நின் ஆறலைக்கண்ணும் ஆழி சூழ்ந்தது.

கடல் அலைகளின் சீற்றம் மிகக்கடுமையானது.தொள் என்றால் குழி பறி என்று பொருள்.அப்படி குழி பறித்த அலைகளே தொண்டி எனும் பட்டினத்தை உருவாக்கும்.தொண்டி எனும் ஊர் அப்படி உருவானதே அங்கே அந்த அலைகள் இன்னும் சில விளையாடல்களைச் செய்கின்றன.ஆழத்திலிருந்து மிகக்குழைவான வண்டல் மண்ணை தெள்ளியெடுத்து கரையில் குவிக்கிறது.தலைவி அதனோடு சிறுபிள்ளை போல் பொம்மை செய்து விளையாடுகிறாள்.ஆனால் அதே அலைகள் சீற்றத்தோடு அப்பொம்மையை பறித்துக்கொண்டு போய்விடுகிறது.மண்திரை அதாவது கரையை மண்கலந்து நீராட்டும் அலைகள் இப்படி வெறியோடு விளையாடுவது கண்டு தலைவி அச்சமுற்று அழுது கலங்குகிறாள்.அவள் பொம்மை அழிந்துபோனது பொறுக்காமல் அழுகிறாள்.இங்கே அது வெறும் பொம்மை அல்ல.உன்னை உன் நினைவைக் கொண்டு புனைந்த வடிவு அது.எனவேவிரைவில் வந்து அவளை தேற்று.கொடிய பாலையின் வழித்தடங்களில் அலையும் உனக்கு இவளது கடற்கரை விளையாட்டு ஒரு திணை மயக்கம் திரண்டு நெரிக்கும் துன்பத்தை கொடுக்கிறது.


குவளையுள் குவளை பல்மழை தூஉய்
மடப்பு மீக்கூர வெண்கணீர் பெய்யும்
ஐது அமை இறையவள் வெஃகிய காட்சி
முதிர் தகையன்று அறிதி அறிதி.
பால் இழி தாமரை காமர் புரையா
ஒண்ணுதலி.மற்று ஏதும் ஓரா மன்னே.
பாவை கையில் மற்றொரு பாவை
படுத்தன்ன கரைவாள் தேற்ற வருதி.
பஞ்சாய்க் கோதை மகள் அல்ல இவளே.


அவள் அழுகையில் கண்ணுக்குள் கண் பூப்பது போல் குவளைக்குள் குவளைகள் குவிந்து அடர்மழையை கண்ணீராய் பொழிகிறது. இன்னும் காதலின் முதிர்ச்சி பெறாமல் மடம் எனும் சிறு பிள்ளைத்தனம் மட்டுமே அந்த வெள்ளைமனத்தில் பொங்கும் வெண் கண்ணீரில் அவள் மூழ்குகின்றாள்.ஐது எனும் மென்மை படர்ந்த அழகிய‌ முன்னங்கைகளை உடைய அவள் வெட்கமுறுவது ஒரு ஒப்பற்ற எழில் மிகு  காட்சி ஆகும்.பால் வழியும் தாமரை முகம் அவளது முகம்.ஆனாலும் காமம் புகாத அந்த பிஞ்சுக்காதலில் ஒளி சுடரும் நெற்றியில் கூர்ந்து  சிந்திப்பதால் ஏற்படும் சுருக்கங்கள் ஏதுமில்லை.இருப்பினும் அவள் ஒரு சிறுமி போல் தான் இருக்கிறாள்.தெரிந்து கொள்.ஒரு மரப்பாய்ச்சியின் கையில் இன்னொரு மரப்பாய்ச்சி போல் இருக்கிறாள். அந்த மண் பொம்மை கரைந்ததற்கு அழுதுகொண்டே இருக்கும் அவளை விரைவாய் வந்து தேற்று.பொம்மைகளோடு ஒன்றிப் போனாலும் இவள் பொம்மை அல்ல.அதுவும் பஞ்சாரை எனும் கோரைப்புல்லைக்கொண்டு கூந்தல் முடித்த பொம்மைப்பெண் அல்ல‌

=======================================================ருத்ரா
12.05.2015 ல் எழுதியது.








கடவுளே தான்!

கடவுளே தான்!
=============================ருத்ரா

கட உள்.
கடந்து உள்ளே செல்.
இந்த முகமூடிகளையும் கூச்சல்களையும்
கழற்றி வைத்து விட்டு செல்.
அறிவு வெளிச்சம் நோக்கி செல்லுவதற்கும்
ஒரு சிறு வெளிச்சம் வேண்டும்.
தீக்குச்சி கிழித்து
இந்த இருட்டுத்திரை கிழித்தால்
சூரியனையும் நீ கைகுலுக்கும்
ஒளிப்பிழம்பு உன்னிடம் இருப்பதை
நீ அறிவாய்.
அந்த கீற்று வெளிச்சம் உன்
அறிவுத்தேடல் மட்டுமே!
கடவுள் என்றொரு
கனமான முற்றுப்புள்ளியை
உன் முதுகில் சுமந்து கொண்டபிறகு
எதைத்தேடி உன் பயணம்?
உன் கடவு சொல் சாவி கொண்டு
இந்த கடவுளைத்திறக்க
மதத்தையா நீ கையில் எடுப்பது?
மதாமதம் என்று ஸ்லோகம் சொல்கிறது.
மதத்தை மதமற்றதாக ஆக்கும் அறிவே
சிறந்த அறிவு.
கடந்து உள் செல்.
அது குகை அல்ல.
எல்லைகள் உடைந்த அறிவு வெளி அது.
வெளியே போவதைத்தான்
உள்ளே செல் என்கிறோம்.
அதுவே
கட உள் !
நாம ரூப வர்ணங்களால்
எச்சில் படுத்தாதே!
கடவுளை மறுக்கும்
ஒரு விஞ்ஞானம் கொண்டு
கடவுளை நீ கண்டுபிடித்தால் கூட‌ போதும்
அதை அப்படியே வாங்கி அறிந்து கொள்ள‌
உன் பின்னே
ஓடி ஓடி வருவது யார்?
கடவுளே தான்.

====================================================
17.10.2016 ல் எழுதியது

பூதம்.

பூதம்.
===========================================ருத்ரா
(குறுகித் தெறித்த குறும்பாக்கள்.)


கண்கள் விரித்த‌
கருப்புக்கம்பளம்

"பார்வை"


பூகம்பத்தையும்
பொடி செய்தாள்

"கொலுசு"


கண்ணாடிச்
சிணுங்கல்கள்

"வளையல்கள்"


பழம் இல்லாத‌
ஈடன் தோட்டம்.

"ஆப்பிள் ஐ பேட்"


ஒரு மழை பெய்தாள்
ஊசிகளில்.

"சிரிப்பு"


தவளைக் கத்தல்.
சுநாமித்தேனலை.

"மிஸ்ஸ்டு கால்"


இமைகள் கடன் வாங்கிய‌
பிக்காஸோக்கள்

"பட்டாம்பூச்சிகள்".


ஓடி ஓடி வந்தவள்
ஓய்வாக காதலித்தாள்.

"அசோக வனம்"


அவனைக் கூடுகட்டிய
"ஹார்ட் லங்"மெஷின்.

"ஹேண்ட் பேக்"


பேசு பேசு..விழுங்கி விடுவேன்.
பூதம் மிரட்டுகிறது.

"செல்ஃபோன் எண்கள்"

===========================================ருத்ரா
20.01.2014 ல் எழுதியது.

சனி, 14 ஏப்ரல், 2018

அந்த சூரியனை நனைக்க முடியாது

அந்த சூரியனை நனைக்க முடியாது
=================================================ருத்ரா
(ஜெயகாந்தன் எழுத்துக்கள்)



எழுத்துக்கள்
வெறும் நிப்புகளின் வடுக்கள் அல்ல!
அவை ஒவ்வொன்றும்
கடி எறும்புகள் ஆனபோது தான்
தமிழ் இலக்கியம்
தூக்கம் கலைத்தது.
புதிய யுகம் காண‌
தூக்கம் கலைத்த அவருக்கு
தூக்கம் ஏது?
தூங்கி விட்டார் என்ற செய்தியில்
செய்திகள் ஏதும் இல்லை.
ஒரு வெட்டியானைப்பற்றிய‌
அவரது சிறுகதைக்கு
இப்போது தான்
பிள்ளையார் சுழி போடுகிறார் என்று
எடுத்துக்கொள்வோம்.
பிள்ளையார் என்று சொல்லால்
அவரை நாம் கொச்சைப்படுத்தினாலும்
மார்க்ஸ் எங்கல்ஸின்
டையலக்டிகல் மெடீரியலிஸம்
அவருள்
நாடி துடித்துக்கொண்டிருப்பதாய் தான்
தெரிகிறது.
நடப்பு (தீஸிஸ்)
எதிர்ப்பு (ஆன்டி தீஸிஸ்)
இணைப்பு (சிந்தெஸிஸ்)
என்ற சங்கிலியின் கண்ணிகள்
அவர் பேனாவுக்குள்
தர்க்கம் கழன்றதில்லை.
அவர்
சமுதாய முரண்களின்
சமுக்காளம் நெய்ததில்
எத்தனை வண்ணங்கள்?
அத்தனையும் சிவப்பை உடுத்தி வந்ததாய்
பின் நவீனத்துவம் பேசியவர்கள்
புளிய மரத்துப்பேய் வளையங்களில்
ஃப்ராய்டிஸக்குஞ்சம் கட்டினார்கள்.
இந்த மண்ணின் உள் நரம்பின்
தமிழ் கூட அவருக்கு
ஒரு உலகக்கோணத்தில்
அந்நியப்பட்டு போயிருக்கலாம்.
அதனால்
அந்த சில உரசல்களின் தீப்பொறிகளில்
அவர் விதை தூவியிருக்கலாம்.
ஆனால் அந்த "சிறுகதை மன்னன்"
எழுத்தில் ஒரு  குறுநில மன்னன் அல்ல.
சிந்தனை ஊற்றுகளின் சக்கரவர்த்தி அவன்.
வால்டர் ரூஸோவும் ஆன்டன் செக்காவும்
எழுத்தில் கனல்மூட்டி ரோஜாக்களை
பதியம் இட்டதை மகரந்தங்கள் ஆக்கியவன்.

சிந்துபூந்துறை ஆற்று பனங்காடுகளின்
ஒரு "கயிற்றரவு"மயக்கத்தை
சமுதாய உள்வலியாய் உள்வாங்கிய‌
ஒரு  புதுமைப்பித்தனின்
ஆவித்துடிப்பையும் ஆங்காரம் ஆக்கியவன்.

"யாருக்காக அழுதான்?"
என்ற கேள்வியை வீசிவிட்டுப் போனவன்.
அக்கதையின் கரு
இன்னும் கருக்குலையாமல்
தழல் வீசிக்கொண்டு தான் இருக்கிறது.
இப்போது சொல்கின்றான்.
யாருக்காகவும் அழவேண்டாம் என்று.
மரணங்களின் அர்த்தம் அழுகை அல்ல.
அழுகைகளால்
அந்த சூரியனை நனைக்கமுடியாது!

===============================================ருத்ரா

12.04.2015 ல் சிறுகதை மன்னன் ஜெயகாந்தன் அவர்களின்
மறைவு குறித்து எழுதிய கவிதை.



கல்லிலிருந்து...

கல்லிலிருந்து...
======================================ருத்ரா இ பரமசிவன்.

மனிதன் கல்லிலிருந்து
நார் உரிக்கும் விளையாட்டை
இன்னும் நிறுத்தவில்லை.
கல்லின் துளியில்
கோடியில் கோடி கோடியில்
ஒரு துளிக்குள்
ஒளிந்திருக்கும்
உட்பொருள் என்ன என்று
உற்றுப்பார்த்துகொண்டு தான்
இருக்கிறான்.
ஞான காண்டம்
கர்ம காண்டம் எல்லாம்
இருக்கட்டும்...
அந்த "குவாண்டம்"
ஒரு திரையை அகற்றி இருக்கிறது.
சக்கரநாற்காலியில் இருந்து கொண்டே
தன் கழுத்து நரம்பு அசைவில்
இந்த விண்வெளியைச்
சுற்றி சுற்றி வந்து
அந்த பரம்பொருளின் சூத்திரம்
சொல்லிவிட்டுப்போய்விட்டானே!
ஸ்டீஃபன் ஹாக்கிங் எனும்
இயற்பியல் கணித முனி!
கருந்துளைக்குள்ளிருந்தும்
கனல் கசிகிறது என்று
எச்சரித்தானே!
"ஹிக்ஸ் போஸான்"எனும்
"பார்முதல் பூதம்"
சும்மா சாதுவாய்த்தான்
நம் கழுத்தில்
வெறும் "மப்ளர்" போல்
சுற்றிக்கொண்டிருக்கிறது.
ஒரு "செப்பு விளையாட்டில்"
நம் அணு உலைக்குள்
அதன் வாலைப்பிடித்து
கொஞ்சம் வருடிக்கொண்டு
விட்டு விட்டோம்.
அதன் முழுச்சீறல் அறிய‌
இந்த பிரபஞ்சத்தையே
உருட்டித்திரட்டினால் தான்
உண்டு.
அப்புறம்
இங்கே எல்லாம் முற்றுப்புள்ளி தான்
என்று சொல்லிவிட்டுப்போய் இருக்கிறான்.
அழிவின் பிம்பம்
எப்படி நமக்கு
ஐந்து தலை நாகமாய் சீறினாலும்
நம் அறிவில்
அதை அடக்கும் மகுடிகள் உண்டு.
அறிவியலின் கூர்மை
எப்போதும் மழுங்கி விடலாகாது.
அதனால் தான்
அந்தக்கல்லோடு இந்த விளையாட்டு.
அந்த எம் தியரி எனும்
"மாஸ்டர் கீ" நம்மிடம் தான் இருக்கிறது.
கல்லின் உருவத்தோடு
தேங்கி நிற்கும்
ஆத்திகத்தின்
நாத்திக விளிம்பில் தான்
நம் நம்பிக்கை சுடர் வீசுகிறது.
தேக்கம் அடைந்த ஞானத்தில்
ஆத்மிக சிறைக்கூடங்கள் மட்டுமே உண்டு.
ஆள் எனும்
மனிதன் என்ற பொருளில்
நம் பிரபஞ்சம்
ஆற்றல் சிறகை விரித்துக்காட்டுகிறது.
அந்த "ஆள்மா" அல்லது ஆத்மா
எனும் "கல்பாக்கங்களை"
"ஆத்மீக"அறியாமையால்
அவித்து விடாதீர்கள்.
வாருங்கள்
இந்தக் கல்லில் நார் உரிக்கும்
விளையாட்டை தொடர்ந்து
விளையாடுவோம்!

========================================================


அவை தான் அது!

அவை தான் அது!
==========================================ருத்ரா இ பரமசிவன்

கண்ணே!
காதலின் தொன்மையை
எந்த ஃபாசில்களிலிருந்து
நிறுவுவது?
அதோ மில்லியன் ஆண்டுகளுக்கு
முன் வாழ்ந்த
ஒரு பெண்ணின் கபாலம்
அந்த மியூசியத்தில்
இருக்கிறது.
எனக்கு அந்த கண்குழிகளில்
ஒன்றும் தெரியவில்லை.
பெண்ணே!
இன்றும் உன் ஆழம் காணமுடியாத
ஒரு அமர்த்தலான பார்வை தான்.
மண்டையோட்டின் மேடுகளில் கூட
மயில் தொகை அன்ன
கூந்தல் கண்ணுக்குத்தெரியவில்லையே.
வெறும் பாஸ்வரத்தின் ரசாயன
உன் மிச்சத்தில்
காதலின் உன் முதல் ரசாயனத்தின்
பக்கம் எங்கே?
ஆ! அதோ
உன் சிரிப்பு
எவ்வளவு அழகு?
அந்த பல் வரிசையில்
வள்ளுவன் காட்டிய
வாலெயிறு நீர்
வைரத்திவலைகளை
வாரி இறைக்கின்றதே
அந்தக்கடல்களில்
எல்லா "சுராசிக்" மற்றும்
"பிரி கேம்பியன்"யுகங்களும்
அல்லவா மூழ்கிக்கிடக்கின்றன.
உற்றுக்கேட்கிறேன்
அவை டினோசார்களின் உறுமல்கள் அல்ல.
நீ அன்றொரு நாள்
நான் ஒரு முத்தம் கேட்டதற்கு
அடம்பிடித்து
மறுத்து அதிர்வு அலைகள்
ஏற்படுத்தினாயே
அவை தான் அது!

=================================================
26.09.2017 ல் எழுதியது.










ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

"கேணி"

"கேணி"
=========================================ருத்ரா

இப்படி ஒரு படம்
நம் மூக்கின் முனையிலேயே
கொட்டும் குளவி போல்
காவிரியை
பிரிச்சு மேஞ்சு தான் இருக்கிறது.

கோர்ட்டு தீர்ப்பு எல்லாமே
செப்பு விளையாட்டு போல்
ஆக்கி
நம் தண்ணீர் பிரச்னையை
கேலிக்கூத்து ஆக்கும்
பொம்மலாட்ட அரசியலின்
ஒரு அழிவு நெருப்பு
பிஞ்சு விட்டிருக்கும் படம் தான் இது.

ஒரு எல்லையோரக் கிணறு
ஒரு தமிழ் நாட்டு கிராமத்துக்கு
உயிர் ஆதாரமாக இருக்கக்கூடாது
என்று ஒரு வேதாளமாகவும்
அந்த தடையின் முரட்டுக்கையை
வெட்டிவீழ்த்தும்
ஒரு விக்கிரமாதித்த ஆவேசமாகவும்
படம்
அனக்கோண்டா கிராஃபிக் பாம்புபோல்
முறுக்கி முறுக்கி
நம் பிரச்னையின் கண்ணாடி பிம்பத்தை
நன்றாக காட்டுகிறது.

லவ்வு லவ்வு என்று
எத்தனை நாளைக்குத்தான்
மாரடித்துக்கொண்டிருப்பது?
தமிழனின் ஆவேசம் என்றாவது
ஒரு நாள்
எரிமலை லாவா ஆகவேண்டாமா
என்று
இயக்குனர் திரு எம்.ஏ நிஷாத்
கனவு கண்டு
செதுக்கிய படம் தான் இது.
நேரடியாக
நம் காவிரி தாகத்தின் வெப்பத்தை
காட்டாமல்
வேறு கதைஅமைப்பில்
பரபரப்பு காட்டி
அந்த அக்கினிக்குஞ்சின்
தீம் திரிகிட தீம் திரிகிட‌
அடி நாதத்தை
மறைந்திருந்து கோபம் காட்டும்
பாரதியின் முறுக்கு மீசையை
நிழல் ஆக்கிய‌
நேர்த்திக்கு இயக்குநருக்கு
ஒரு தனி முத்திரை.

பார்த்திபன்
ஜெயபிரதா
ரேவதி
ரேகா
நாசர்
என்று
வழக்கமாய் சொல்லும்
நட்சத்திர பட்டாளம்
என்ற சொற்றொடரை இங்கே
வீசுவது முறையாகாது.

தமிழனின் கனல்கின்ற கண்களும்
துளிர்க்கின்ற கண்ணீரும்
கந்தல் குரல்களின் கணீர் தெறிப்புகளும்
அவனின் தொல்லிய மாண்பின்
ஏக்க வடிவ வீச்சுகளும்
இவர்களிடம்
அலைகளாக‌
அலைகளின் நுரைகளாக‌
படரச்செய்து இருக்கிறார்கள்.
தமிழ் எனும் குடும்பம்
உணர்வு நரம்புகளில்
யாழ் மீட்டியிருக்கிறது.

ஓகோ!
இப்படியெல்லாம் படம் எடுப்பீர்களா?
மூச்!
உங்களுக்கு விருது கிடையாது என்று
மேலிடம் கோபத்தை
குமிழியிடுமானால்
அதுவே இந்த படத்துக்கு
ஒரு சிறந்த விருது!

================================================



"மின்னம்பலத்தில்" ரஜனியின் அரசியல் தாண்டவம்

"மின்னம்பலத்தில்" ரஜனியின் அரசியல் தாண்டவம்
=========================================================ருத்ரா
https://minnambalam.com/k/2018/04/08/61 (LINK WITH THANKS)

"பொன்னார் மேனியன்
புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடை"மேல்
............
ஆம்
ரஜனி அவர்கள்
தன் அரசியல் தாண்டவத்தை
நிகழ்த்தியிருக்கிறார்.
புலித்தோலை
அணிந்து கொள்ளாமலேயே
புலியென
"சொற்ளை" பவுல் செய்து விட்டார்
கிரிக்கெட் களம் நோக்கி!

கிரிக்கெட் மட்டை நிழலில்
பரவசம் கொண்டிருக்கும்
தமிழ் நாட்டு இளைஞர்களே
ஒரு "கூக்ளி" போடுங்களேன்
"காவிரி மேலாண் வாரியம்"
அமைக்க
வேண்டுமென்றே தாமதப்படுத்தும்
அந்த "ஸ்கீம்" சொல் தந்திரத்தின் மீது.
இந்த "மாய சுழல் " அதன் எதிர் தந்திரமாய்
பந்தில் பறக்கட்டுமே.
உங்கள் வெளிப்பாடுகள்
சிக்ஸும் ஃபோரும் ஆக குவியட்டும்
நமக்கு
காவிரியை தராமல் போக்கு காட்டும்
அந்த எதிரணி மீது.
கிரிக்கெட் மேட்ச்களின்
அழகே
அவற்றின் வெற்றியும் தோல்வியும் தான்.
ஆனால் இந்த
காவிரி விளையாட்டில்
தமிழ் நாடு மீது
கவிந்து கொண்டிருப்பது
மரண நிழல் மட்டுமே!
தமிழ்ச்சிங்கங்களே
உங்கள் கூரிய பல் கொண்டு
குடல் கிழித்து
நரசிம்ம அவதாரம் எடுக்கவேண்டாம்.
தமிழ் நாடு
பஞ்சத்தின் கோரைப்பற்களால்
கிழிபட
கர்நாடகா திரைமறைவில்
ஒரு "துர்நாடகா"
அரங்கேறவிடாமல்
ஒரு தடுப்பணை கட்டுங்கள்.
இதற்கு கல் வேண்டாம்.
சிமெண்ட் வேண்டாம்.
உங்கள் சீற்றமும் ஆவேசமும்
ஒரு நியாயமான சினமும் மட்டும்
இருந்தாலே போதும்.
ரஜனியின் இப்படை இருக்கையில்
எப்படை தோற்கும் இங்கு?

==========================================================



காதல் ஓவியம்

காதல் ஓவியம் 

காதலின் குறுக்குவெட்டுத்
தோற்றம்
சாதி மதங்கள்
சாணை பிடிக்கும்
ஆணவக்கத்திகளின்
கசாப்புகள் தீட்டும்
ரத்த விளாறுகளின்
ஓவியம்.

_______________ருத்ரா






வெள்ளி, 6 ஏப்ரல், 2018

இலைகளே உன்னைப்பார்த்துக்கொண்டிருக்கட்டும்.


இலைகளே உன்னைப்பார்த்துக்கொண்டிருக்கட்டும்.
=========================================================ருத்ரா

எத்தனை தடவை
அந்த அடர்த்தியான
இலைசன்னல்களிடையே
வந்து
எங்களை எட்டிப்பார்த்திருப்பாய்?
இன்னும் நாங்கள்
தார் பூசிய  முகங்களில் தான்
மேக்  அப் செய்து கொண்டிருக்கிறோம்.
சாதிகள் மதங்கள்
செய்த இருட்டடிப்பில்
உனக்கு வெற்று "கும்ப மேளாக்கள்" நடத்தி
எங்கள் அசுத்தங்களைக்கொண்டு
உன்னை நீராட்டும் வேடங்கள்
புனைந்து கொண்டிருக்கிறோம்.
இந்த அஞ்ஞான பூமி போதும்.
எங்கள் அறிவு விழிகள் திறக்கும் வரை
இந்த போதையே சுகம்.
அந்த இலைகளே
உன்னைப்பார்த்துக்கொண்டிருக்கட்டும்.

===================================================




சுத்தமான அசுத்தங்கள்

சுத்தமான அசுத்தங்கள்
=================================================ருத்ரா

சுத்தம் செய்ய வந்த
உத்தமர் அவர்.
கையில்
துடைப்பம் தானே அது!
துப்பாக்கியா?
புரோஹிதம் செய்பவர்கள் கையில்
புனிதமான‌
தர்ப்பைப்புல் தானே இருக்கும்.
தர்க்கங்கள் எதற்கு?
இனி வடமொழிப்பிரளயம்
எங்கும் எதிலும் தான்.
தமிழின் எலும்புக்கூடுகள்
இனி
பத்திரமாக பாதுகாக்கப்படும்
மியூசியங்களில்..
"இதோ
அடிமைப்பட்டு அழிந்துபோன‌
அடையாளங்கள்!"
என்ற‌
தலைப்பில்.
இன்று "சூரப்பா"தானே என்று
விரல் சூப்பிக்கொண்டிருங்கள்..
சூரசம்ஹாரத்தில்
சூரப்பாக்களே இனி
சுப்பிரமணியன்கள்!
ஓ! தமிழர்களே!
பக்தி பக்தி என்று
பாதம் வீழ்ந்தீர்களே
இப்படி சாம்பலாய்
சம்ஹரிக்கப்படவா
வீழ்ந்து போனீர்கள்?
நம் "அண்ணா பல்கலை கழகம்"
இனி
அண்ணாந்து தான் பார்க்கப்படும்!
பாடங்களுக்கு இனி
வடமொழியே மீடியம்.
சாமியார்கள் அமைச்சர்கள் ஆக்கப்படும்
புண்ணிய பூமி இது!
இங்கேயும் மந்திரிமார்கள்
இனி
உருத்திராட்சங்கள்
உருட்டப்படும் நாள்
வெகுதொலைவில் இல்லை.
உங்களை உல்லாசமாய்
இந்த ரெண்டு மூணு ஆண்டுகளுக்கு
குளிப்பாட்டிக்கொள்ள‌
பலப்பல ஆயிரம் ஆண்டுகளின்
தொல்லிய மாண்பு கொண்ட‌
தமிழை
கருவறுக்கவும் துணிந்துவிட்டீர்களோ?
இந்த தமிழும் தமிழர்களும்
மந்திரிக்கப்பட்டு
மஞ்சள் குங்குமம் வைத்த‌
இந்த ஓட்டுப்பெட்டிக்குள்ளா
சமாதி ஆக்கப்படவேண்டும்?
ஜனநாயகம்
கூச்ச நாச்சமின்றி
சிதைக்கப்படுவது
இந்த சுத்தமான  அசுத்தங்களால் தான்.
சாதி மதங்களின் சல்லிவேர்களில்
ஒட்டுண்ணிகளாய் இருந்து கொண்டு
ஓட்டுவங்கிகள் கட்டிக்கொண்டிருக்கும்
இந்த பேய்த்தனங்கள்
விரட்டியடிக்கப்படவேண்டும்.

"செந்தமிழ் நாடெனும் போதினிலே..."
இந்த மதப்போதைகளின் போர்வைகள்
எல்லாம் இனி
சாம்பல் சாம்பல் சாம்பலே தான்!

==================================================








வியாழன், 5 ஏப்ரல், 2018

"ஜிமிக்கி கம்மல்"

"ஜிமிக்கி கம்மல்"
==============================ருத்ரா

பட்டாம்பூச்சிகள் சிறகு விரிக்கும்
என்று
கனவின் புழுக்கூடுகள்
"ஜிமிக்கி கம்மல்" ஆட்டம் போட்டன.
எல்லாம்
வாழ்க்கை என்ற இருட்டுக்கு
வர்ணங்கள் பூச சிறகுகளுடன்
காதல் இங்கு
காண்ட்ராக்ட் எடுத்துக்கொள்ளத்தான்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍__________________________________ருத்ரா

"நாதி"

நன்றி புகைப்படம்  from EM Joseph


"நாதி"
================================ருத்ரா இ பரமசிவன்

இது பெயர் அல்ல.
ஒரு புன்னகையின் கிரீடம்.
மண் 
அவரை அழைத்துக்கொண்டிருக்கலாம்.
ஆனால்
அந்த சிரிப்பின்
"திருவாய்மொழி"
அந்த தீயையே
திகு திகு என்று எரித்து
சிரித்துக்கொண்டிருக்கிறதே.
மனிதமை
என்ற சொல் 
அடித்துத்திருத்தப்பட்டது
அவரால்
தோழமை என்று!
"அமுதுக்கும் தமிழ் என்று பேர்"
என்று முழங்கிய 
கனல் முரசின் கலப்படம் இல்லாத‌
உண்மை
கணீர் கணீர் என்று
நம் முன் 
ஒலி எழுப்பிக்கொண்டிருக்கிறது.

============================================

"நாதி" என்று அழைக்கப்படும் திரு.நா.திருமலை எனும் 
எங்கள் அன்புத்தோழர் மறைவு குறித்த இரங்கற்பா.இது.

============================================


ஒரு ரோஜாவை நீட்டு

ஒரு ரோஜாவை நீட்டு
============================================ருத்ரா

ஒரு ரோஜாவை நீட்டு
சிங்கம் கூட‌
கோரைப்பற்களில்
ஒரு புன்னகையைக்காட்டும்.
நீல வானப் பந்தலின் கீழ்
என்றைக்கும் எப்போதும்
யாருக்கோ
ஒரு மங்கல விழா நடக்கிறது என்று
கொட்டு முழக்கு.
நாயனம் இசை.
ஒரு அகவற்பா பாடு.
ரகசிய கிடங்குகளில்
மனிதனின் வயிற்றுக்குழிகளுக்காக‌
உயிர்கள் கசாப்பு செய்யப்பட்டு
கொண்டிருக்கலாம்.
திடீரென்று
கடல் புடைத்து எழுந்து
கடலோர மக்களையும் கட்டிடங்களையும்
பலகாரம் பண்ணிக்கொண்டிருக்கலாம்.
விஞ்ஞானிகள்
துல்லியமாய் அந்த நேனொ செகண்டுகளில்
பஞ்சாங்கம் எழுதிக்கொண்டிருக்கலாம்.
அகராதிகளை
மூட்டை கட்டி வைத்துவிட்டு
இஷ்டம் போல்
வார்த்தைகளை வீசியெறிந்து
கழற்சி விளையாடு.
அந்த சொட்டாங்கல் விளையாட்டில்
உன் மொழிகளையும்
கவிதைகளையும்
இலக்கணங்களையும்
தூர எறி.
அப்போது உனக்கு
துன்பம் என்றால்
இன்பம் என்று பொருள்.
ஜனநாயகம் என்றால்
ஹிட்லரிசம் என்று பொருள்.
மனிதர்கள்
கால்நடை மருத்துவமனைகளில் போய்
மருத்துவம் செய்யட்டும்.
நண்டுகளும் நட்டுவாக்காளிகளும்
ஆலயங்களில்
மேடையில் சொற்பொழிவாற்றட்டும்.
குழறல் மொழியில்
வேதங்களும் வியாக்கியானங்களும்
வசனங்களை ஒலிக்கட்டும்.
சோம பானங்களும்
உடைந்து சிதறிய‌
டாஸ்மாக் பாட்டில்களும்
ஜபமாலைகள் உருட்டட்டும்.
சாதிகள் மதங்கள்
தீயின் கொழுந்துகளாய்
அடர்ந்த ஆரண்யங்கள் ஆகட்டும்.
அப்போதும்
உன் நகைமுகத்திலிருந்து
சோகத்தின் சுருக்கங்களை அகற்று.
இது
பரமண்டலத்துப்  பசு பதி பாசம்
நமக்கு அனுப்பியிருக்கிற
ஆறாத புண்களையும் ஆற்றுகின்ற‌
ஆறுமுகக்களிம்பு.

ஒரு தினுசாய் பார்க்கிறீர்கள்.
பாருங்கள்.
வெளியே போர்டு மாட்டியிருக்கிறது.
உலகத்து அத்தனை மொழிகளிலும்.

"இது
கடவுளர்களுக்கான‌
மனநல மருத்துவ மனை"
என்று.

===========================================================

ருத்ராவின் கவிதைகள்

ருத்ராவின் கவிதைகள்
=======================

நாமும்
காவிரி காவிரி
என்கிறோம்.
அவர்களும்
"காவி" ரி.."காவி" ரி
என்கிறார்கள்.

________________________________

மோடிஜியிடம்
யாராவது சொல்லுங்கள்
காவிரி
ஏதோ ஒரு அயல் நாட்டின் குட்டித்தீவு
என்று.
உடனே
விமானத்தில் புறப்பட்டு விடுவார்
கை குலுக்கி
பேச்சுவார்த்தை நடத்த.

___________________________________

ஒரு சித்திரம் (காவிரி)

ஒரு சித்திரம் (காவிரி)
_____________________________________ருத்ரா

ஹெச் டு ஓ என்றார்கள்
ரசாயனப்பாடத்தில்.
பொலிடிகல் சையின்ஸ்ல் கூட‌
இது ஒரு
நாற்காலி ரசாயனம்.
பொக்கைவாய்க்குள்
அந்த பாட்டி
தன் நீள மெலிந்த நாக்கை
சுழட்டி சுழட்டி
தாகம் தீர்க்க நினைக்கிறாள்.
ஒரு துளிக்கு
ஒரு கற்றை கரன்சிகளின்
காந்திப்புன்னகைகள் கைமாறும்
கால கட்டமும்
அதோ கண்ணில் தெரிகிறது.
அந்த ஓணானுக்கு தெரிந்திருக்கிறது
இந்த பாழ்மணலின்
அடி ஆழத்தில்
நீர் அருந்த.
இந்த தமிழர்கள்
இன்னும் அலைகிறார்கள்
இந்த ஓட்டுச்சீட்டைக்கொடுத்தால்
எங்கு ஒரு வாய் தண்ணி கிடைக்கும் என்று.
காவிரி..
இந்த பெயர் எப்படி
இந்த மண்ணில்
ஒரு அணுகுண்டை போட்டு
இந்த தமிழ் நாட்டை
பொத்தல் ஆக்கியது.
ஒரு வருங்காலச் சித்திரத்தின்
ரத்தவிளாறுகள் இவை.

======================================================


நடந்"தாய்" வாழி காவிரி.


நடந்"தாய்" வாழி காவிரி.



உன்னை அறி.






உன்னை அறி.


கமல் அவர்களே!


கமல் அவர்களே!
==========================================ருத்ரா

உங்கள் கவிதை கொப்பளிக்கும்
சொற்கூட்டத்தை கேட்க‌
கூட்டங்களுக்கு பஞ்சமில்லை.
அந்த அலைகள் கூட‌
இடையிடையே ஆர்ப்பரிக்கின்றன.
"நேர் கொள்வோம் ..எதிர் கொள்வோம்"
என்று
ஒரு தொல்காப்பியப்பூங்காவின்
இலக்கண இலக்கியப் பூக்களையெல்லாம்
அள்ளி அள்ளி இறைக்கிறீர்கள்!
அருமைத்தமிழ் கோலோச்சுகிறது!
ஒவ்வொன்றாய்
நீங்கள் பட்டியல் இடுவது
ஒரு ஜனநாயகத்தின் படிக்கட்டுகளை
வெற்றிச்சிகரம் நோக்கி
பயணப்படுத்துகிறது.
திராவிடம் ஒழியாது என்று
குரலெழுப்புகிறீர்கள்.
இவர்கள் ஊழல் நாற்றுகள்
திராவிட வயல்களில் தான்
நடப்பட்டது என்று
தாரை தப்பட்டைகளை முழக்கும்போதும்
திராவிடம் எனும் தமிழின்
பெருங்கனல் உங்களிடம்
ஓங்கி சுடர் பூக்கிறது.
ஊழல் ஒழிக்கப்படவேண்டும்
என்ற கருத்து
ஓங்கி ஒங்கி ஒலிக்கத்தான் வேண்டும்.
சுதந்திரம் பெற்ற உடனேயே
டி.டி.கே யிடமிருந்து ஆரம்பித்த
முந்த்ரா ஊழல் இன்னும்
நம் குப்பைத்தொட்டியில் தான்
பொக்கிஷமாக
பாதுக்காக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
ஊழல் எனும்
"குருக்ஷேத்திரப்போருக்கு"
கிருஷ்ணர்களும்
பாண்டவர்களும்
அரிஜுனர்களும்
ஆயிரம் ஆயிரமாய்
அவதரித்த போதும்
ஊழலின் "விஸ்வரூபத்தின்" முன்னே
உங்கள் விஸ்வரூபங்கள் எல்லாம் ஜுஜுபி.
அது ஒரு "சமுதாய விஞ்ஞான"மயமானப்போர்.
இந்த கணினி அஸ்திரங்கள்
வெறும் மயிற்பீலி வருடல்கள்.
போகட்டும்!
காவிரிக்கு "மேலாண்மை வாரியம் தான் தீர்வு"
என்று உறுதி பட முழங்கியிருக்கிறீர்கள்.
அதற்காக
மக்கள் சுனாமியாய் பொங்கி எழுவது
உங்கள் முதுகுக்குப்பின்னே நிகழ்ந்த போதும்
நீங்கள் ட்விட்டர்கள் கொண்டு
சொல்லின் அலைகள் எழுப்புவது போதுமா?
உறையிலிருந்து
வாளை உருவுவது போல் உருவி
மீண்டும் உறைக்குள் போய்
அது முடங்குவதற்கா
ஓசை முரசுகள் கொட்டுகின்றீர்கள்?
உலகமே கவனிக்கும்
உலக நாயகன் நீங்கள்.
அந்த மெரீனாவில்
வெறும் சில நாய்கள் படுத்து விளையாடும்
வெறித்த காட்சிகள்
உங்களை வேதனை படச்செய்யவில்லையா?
உங்கள் பேச்சுகள்
மிக மிக நம்பிக்கை ஊட்டுகின்றன.
அது நிச்சயம் காமிராவுக்கு முன் அல்ல.
கடல் போல் மக்கள் உங்கள் முன்!
அலைகளை அணிவகுக்கச்செய்யுங்கள்.
இந்த தமிழ் அலைகள்
மூழ்கடிக்கப்பட உதிக்கவில்லை!

=====================================================