வியாழன், 28 செப்டம்பர், 2017

மணல் சிற்பம்...குறும்பாக்கள்



மணல் சிற்பம்...குறும்பாக்கள்
========================================ருத்ரா

மணல்

கனவுகளை பிசைந்தனர்.
கையில் வந்ததோ
கடலின் சதை.

____________________________________________


கைவிரல்கள்

உருவம் தேடி அளைந்தனர்.
நெருடியது
நண்டின் கொடுக்குகள்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_______________________________________________

அலைகள்

தொட்டுப்பிடிச்சு விளையாடுவோம்
என்று வந்தன
துடைத்து அளிக்க.

________________________________________________

பரிசு

உலகப்போட்டியில் இதற்கே பரிசு.
இதன் தலைப்பே காரணம்
"இது பரிசுக்கு அல்ல"

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍___________________________________________________


இருவர்

அகங்களில் அணைத்திருக்க‌
முகங்களில் பட்டிமன்றம்.
மண முறிவா? மண மகிழ்வா?

__________________________________________________

மனிதன்

கடவுள் ஒத்திகை.
அரங்கேறும்போதோ
இருவரும் அங்கு இல்லை.
___________________________________________________

கடவுள்

இங்கே மணல் துளிகள் எத்தனை
என்று எண்ணிக்கொண்டிருங்கள்.
"நான் இல்லை"என்று தெரியும் வரை.
___________________________________________________

சிற்பம்

பிரம்மன் தோற்றான்.
மனிதன் வென்றான்.
உளி இங்கே உள்ளம் அல்லவா.
______________________________________________________

உதயம்

இன்று ரொக்கம் நாளை கடன்.
"போர்டு" மாட்டியிருக்கிறது கிழக்கில்.
விடியாததன் பெயரே விடியல்.
_______________________________________________________

கோட்டை

உதிரும் என்று தெரியும்.
கலையும் என்றும் தெரியும்.
நம்பிக்கை இங்கு லட்சம் ஆண்டுகள்.

__________________________________________________________

சுண்டல்

தேங்காய் மாங்காயோடு
காகிதம் சுற்றியிருந்தது.
முண்டகோபனிஷதம் அச்சிட்டது.

___________________________________________________________

காற்று

வாங்க வந்தேன்.
கவிதையெல்லாம் வேண்டாம்
இங்கே ஏற்கனவே குப்பை.

________________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக