திருவல்லிக்கேணி கோயில் யானை.
============================================ருத்ரா
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
.........................
கணபதி ராயன் அவன் இரு
காலைப்பிடித்திடுவோம்!
.......................
அன்பார்ந்த அந்த
பார்த்தசாரதி கோயில் ஆனையே!
உனக்கு
ஆயிரம் கோடி நமஸ்காரம்.
காற்சங்கிலி உன்னைப்பிணைத்துப்
போட்டு வதைத்த
ஆவேசமும் சீற்றமும் தான்
அந்த கோயில் வளாகத்தில்
உனக்கு"மதம்"பிடிக்க வைத்ததோ?
ஒரு புயல் மூச்சை
நிறுத்திவைக்க நீ நினைத்தது ஏன்?
அவன் கொடுத்த விளாம்பழம்
உன்னையும்
நீ கொடுத்த அந்த தும்பிக்கை தடவல்
அவனையும்
ஒரு அகண்ட பிரபஞ்சத்து
உயிர்ப்பசையைத்தானே
மகா கவிதைக்கொத்து ஆக்கியிருந்தது.
இந்த நல்லிணக்கம்
எப்படி அறுந்து போனது?
எங்கள் முண்டாசுக்கவிஞன்
ஆத்மீகமும் பாடியிருக்கிறான்
நாத்திகமும் பாடியிருக்கிறான்.
கடையத்து அக்கிரகாரத்தில்
அவன் வளர்த்த கழுதைக்குட்டியும்
இந்த திருவல்லிக்கேணிகோயில் யானையும்
அவனுக்கு ஒன்று தான்.
அவனைப்பொறுத்த வரையில்
அது
பசு பாசம் கவிதை.
அவன் "பதி" கவிதையே .
இந்த உயிர்கள் மூலம்
தன் எழுத்தின் மின்சாரக்கயிற்றைக்கொண்டு
அல்லவா
அந்த "பதியை " கட்டிப்போட்டிருந்தான்.
மனித சாதிகளை விட
காக்கைக்குருவிகள் தான்
அவனுக்கு உயர்ந்த சாதி.
கடலும் மலையும் தான்
அவன் கூடும் கூட்டம்.
வேதத்தின்
சோமக்கள்ளை காட்டிலும்
அதன் ஞானச்சாற்றை
ரசித்தவன் அல்லவா அவன்?
அதனால் தான்
அந்த சேரிச்செல்வர்களுக்கு
பூணூல் அணிவித்தான்.
இருட்டாய் இருந்த வேதம்
அப்போது தான் அவனுக்கு
வெளிச்சமாய் தெரிந்தது.
இப்போது இருந்தால்
அனிதாவை
பாரதத்தாய் என்று
பத்து பாடல் பாடியிருப்பான்.
ஓ! பாரதி!
விடுதலை விடுதலை விடுதலை
என்று
சாதிகளுக்கு எல்லாம் விடுதலை என
தீ முழக்கம் அல்லவா செய்தாய்!
குறைந்த ஆயுளில்
உன்னைக் கொள்ளையடித்து போன
அந்த "பார்த்த சாரதி" கிருஷ்ணனுக்கு
சமஸ்கிருதம் மட்டும் தான் தெரியுமா?
உன் "கண்ணன் பாட்டை" படிக்கும்
தமிழ் அவனிடம் இல்லாமல் போனதோ?
இப்போதும்
நினைவு தினம் என்று சிலர்
"ஸ்ரார்த்தம்" செய்ய
எள்ளும் தண்ணீரும்
தர்ப்பைப்புல்லும் கொண்ட ஒரு
சடங்கு எனும் கிடங்குக்குள் தான்
தள்ளப்பார்க்கிறார்கள்.
எட்டயபுரத்து எரிமலைப்பூவே!
இந்த எருக்கம்பூக்களைபி பற்றி
எங்களுக்கு கவலைஇல்லை.
எழு ஞாயிறே!
எங்களுக்கு எல்லாக்கிழமைகளும் உன்
விழி ஞாயிறு தான்!
==============================================
2 கருத்துகள்:
அருமை
மிக்க நன்றி ராஜி அவர்களே
அன்புடன் ருத்ரா
கருத்துரையிடுக