புதன், 6 செப்டம்பர், 2017

"பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி,"

"பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி,"
==============================================ருத்ரா இ பரமசிவன்.



"பாலை பாடிய பெருங்கடுங்கோ" அகநானுற்றில் "பாலை"பற்றிய காட்சிகளை மிக நுண்ணிய அழகுடன் பாடியிருக்கிறார்.ஒரு பாடலில் (பாடல்  எண்  5)
"பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி,"என்று கொத்துக்கொத்தாய்  கண்ணாடி (கோலிக்குண்டு)போலக்  காய்த்திருக்கும்
அந்த அழகை அப்படியே படம்பிடித்திருக்கிறார்.

நான் கல்லிடைக்குறிச்சி தாமிர பரணி ஆற்றுக்கு குளிக்கச்செல்லுகையில்
வழியில் உள்ள திருவாவடுதுறை "ஆதீன"த்தோப்பில் உள்ள நெல்லி மரத்தின்
நெல்லிக்காய் கொத்துக்களைக்கண்டு கிறங்கிப்போய் நின்றிருக்கிறேன்.
"கோலி" விளையாடும் பருவம் அது.அந்த ஒவ்வொரு நெல்லிக்காயும் பளிங்கு
கோலிக்காய் போலத்தோன்றும். கடைகளில் கண்ணாடி சீசாவில் அழகு அழகு வண்ணங்களில் பளிங்குக்கோலிக்குண்டுகள் விற்பார்கள்.அதில்  ஆறேழு குண்டுகளை வாங்கி என் கால் சட்டைப்பைக்குள் பதுக்கிய பின் தான் நிம்மதி பெறுவேன்.


முளிந்த ஓமை முதையல்அம் காட்டு,
 பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி,
மோட்டு இரும் பாறை, ஈட்டு வட்டு ஏய்ப்ப,
 உதிர்வன படூஉம் ......................

"அந்த அழகிய பழங்காட்டின் பட்டுப்போன ஓமை மரங்களிடையே நெல்லி மரத்தின்  பளிங்கு போன்ற நெல்லிக்காய் கொத்துகள் அங்குள்ள உயர்ந்த பாறையில் சிறுவர்கள் விளையாடும் கழற்காய்கள் போல உதிர்ந்து கிடக்கும்" என்பதே அவ்வடிகளின் பொருள்.

ஆம் இதை  என்னைப்போன்ற சிறுவர்களுக்காகவே பாடியிருக்கிறார்.



அன்று அந்த அகநாநூற்றுப்பாடலில் "பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி,"
வரிகளைப்பார்த்ததும் "பாலைபாடிய பெருங்கடுங்கோ" எனக்காகவே
அந்த வரியை மின்னலாய் பாய்ச்சியதாய் உணர்ந்தேன். அப்போது உடனே
"பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி," என்ற தலைப்பில் எழுதிய சங்கநடைச்செய்யுட்  கவிதையே இது. இதில் தலைவிக்கு அந்த பளிங்கத்துக் காய்கள் ஒவ்வொன்றிலும் தலைவனின் அன்புமுகம்  சுடர் விடுவதாக தோன்றுகிறது என்று தோழி சொல்லுகிறாள்.



பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி,
================================================ருத்ரா

வேழம் பிழிதர புடை பெயர்ந்து
நீள் குடுமிப்பெருங்கல் சிவணிய வீழ்ந்து
புல்லிய பாசிலை இன்  நீர் தடவ
சுரும்பும் மாந்தி மடி கொண்டாங்கு
அடுத்த வேழம் தூம்புக்கை நீட்டும்
சிறு கண் வியப்ப அதிர வியர்க்கும்
கான் மலி இருளிடை அவன் முகம் ஒளித்த
"பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி"
ஊழ் ஊழ் உகுக்கும் வால் நுதல் மழைக்கும்!
உன்னுள் ஒலிக்கும் மணி நா நடுங்கும்
அவன் அணித்தேர் ஆண்டு அசைஇ  வருமென
மென் பூஞ்செக்கையும் புண் ஆகியதோ
புரள் தரு புரள்  தரு நின் பெயர்ச் செயலால்.
நாகம் தந்த பாலிழை கலிங்கமும்
சுடு நிலை தாளா வெம்மையூட்டிய
நோவு நுடங்கி அறைபடு அறையில்
ஆயிரங்கண்  காட்டிய கிழி மை  வானென
ஆற்றாது கிடந்தாள் அளியள் ஆங்கே.

=================================================

 (விளக்கவுரை தொடரும்)















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக