வியாழன், 7 செப்டம்பர், 2017

விழிமின்!எழுமின்!

விழிமின்!எழுமின்!
========================================ருத்ரா

சமுதாயப் ப்ரக்ஞை
பத்திரிகை வரிகளில்
நெருப்பு ஆறாய் பாயும்போது
பாசிசத்தின் ரத்தவெறியும்
உரிமைக்குரல்களின் குரல்வளையை
நசுக்க ஓடிவரும்.
கடவுள் பாதையா?
கடப்பாரை பாதையா?
இங்கே அடித்து நொறுக்கப்படுவது
பளிங்கு கட்டிடமாய் சுடரும்
ஜனநாயகக் கோவில்கள் தான்.
பசுக்கள் என்றார்கள்.
இறைச்சி என்றார்கள்.
மானிட நேயத்தைக் கூறு போடும்
கொடு வாள் உயர்த்தி
கும்பல்கள் கொண்டு
பயமுறுத்தல் எனும்
பேய்நிழலை
அன்னை பாரத முகத்தில்
காறி உமிழ்ந்தார்கள்.
இந்து மதத்தை
குத்தகை எடுத்திருக்கிறோம் என்று
பிற மதத்தைக்
குத்திக்குதறுவதையே
அரசியல் அஜண்டா ஆக்குகிறார்கள்.
ஜனநாயகத்தின் சிற்பிகளே
களிமண்ணாய் நீங்கள்
இருந்தீர்கள் என்றால்
உங்களைக்கொண்டே
ஆயிரம் அடி உயரத்துக்கு
அனுமார் பொம்மை செய்து
வடைமாலை சாத்துவார்கள்.
அவர்கள் சொல்கிற‌
விவேகானந்தர் முழக்கத்தை
நாமும் சொல்கிறோம்
"விழிமின்!எழுமின்!"
இல்லையேல்
இங்கு மானிட நீதியின்
வாசனையெல்லாம்
மானிடத்தின் ஒளிமிக்க‌
பரிணாமங்கள் எல்லாம்
பூண்டற்றுப்போகும்!
ஆதலினால்
விழிமின்!எழுமின்!

========================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக