குவாண்ட பூதம்
___________________________________________
எல்லாம் சரி தான்.
பில்லியன் பில்லியன்
ஒளியாண்டுகள் தான்.
இ இஸ் ஈக்குவல் டு
எம் சி ஸ்குவார் தான்.
அது
அந்த கருந்துளை அடிவானில்
தன் சட்டைகளை
உரித்துக்கொள்கின்றன
எல்லாம் சரி தான்.
ஒரு சின்ன யானை வெடியை
இத்தனை நாள்
பிக் பேங்க் என்றும்
பிரபஞ்சம் பிரசவித்த துணி விரிப்பு
என்றும்
கொண்டாடிக் கொண்டிருந்தீர்களே
இன்று
என் ராட்சசக்கண்ணுக்கு
வேறு பூதம் தெரிகிறது.
கணித சமன்பாட்டின்
இடது புற வலது புற
மர்மங்களை
இன்னும் கொஞ்சம்
உற்றுப்பாருங்கள் என்று
விண்வெளி விஞ்ஞானம்
அறை கூவுகிறது.
அறை கூவட்டும் கவலையில்லை.
அது மட்டுமா?
அந்த "குவாண்டம்" எனும்
போண்டாவுக்குள்
பொரிக்கப்பட்டு இருப்பது
சீரோவா? இன்ஃபினிடியா?
பொசிஷனா? மொமென்டமா?
அல்லது
ப்ராபபலிடி எனும்
ஒத்தையா இரட்டையா...
விளையாட்டா?
அது என்ன என்று
சோழி குலுக்கிப்போட்டு
சொல்கிறோம்
என்று
"குவாண்டம் சிப்பே"
விளங்காத புராணங்கள் எல்லாம்
சொல்லத் தொடங்கி விட்டது.
கேட்டால்
ஃபூரியர் ட்ரான்ஸ்ஃபார்ம் என்கிறது.
இதோ
பிரமன் களிமண்ணில் பிடித்த
இன்னொரு
"பேரல்லல் யுனிவர்ஸ்"
என்று
உடுக்கையை மாற்றி
அடித்தாலும் அடிக்கலாம்.
பொறுங்கள்.
இதன் கணிதம் அந்த
ரிஷியிடம் இருக்கிறது
என்று
நம் மண்டைகளை
கழுவி ஊற்ற
திடீரென்று கிளம்பி விடலாம்.
ஏற்கனவே
அவதார்...கர்மா.. யோகா
என்று
பஞ்சுமிட்டாய்
ஸ்லோகங்களையும்
இடுப்பில்
சொருகித்தான் வைத்திருக்கிறது
மேலை நாட்டு விஞ்ஞானம்.
இவர்களின்
ஏ ஐ முதலீடுகள் எல்லாம்
பங்கு சந்தையில்
ட்ரில்லியன் ட்ரில்லியன்கள் என்று
கார்ப்பரேட்டுகளின்
நீண்ட நாக்கில்
லாபத்தின் "ஜொள்ளை"
நயாகராக்களாய்
பெருக விட்டுக்கொண்டு தான்
இருக்கிறது.
திடீரென்று நம் மைலாப்பூர் வாசனை
அவர்கள் குவாண்டத்துள்
நுழைந்து
ஏதாவது ஒரு பெருமாள் கோயிலில்
"யந்திரத்தை"
பிரதிஷ்டை செய்தாலும்
செய்து விடலாம்.
ஏனெனில்
நம் மக்கள் தொகை எனும்
கொழுத்த மார்க்கெட்டின்
"கருந்துளைக்குள்"
அந்த நீலவண்ணனை
வலை வீசி சுருட்டிக்கொள்வதாக
பரப்புரைகள் செய்யலாம்.
உலக அரசியலின் சில்மிஷங்கள்
இயக்கும்
பொருளாதார கிரீன் ரூமுக்குள்
எல்லா அரிதாரங்களுமே
இங்கு அவதாரங்கள் தான்.
_____________________________________________
சொற்கீரன்.