யோகம்
_________________________________ருத்ரா
யோகம் என்பதும் இங்கு ஒன்றியமே
ஒன்றியம் என்றாலே
சிலர் பதற்றம் கொள்ளுவதைப்போல
இந்த யோகம் என்பதன்
உள்ளே சென்று உட்பொருள் பார்த்தால்
அதே சிலர் மீண்டும்
பதற்றம் அடையலாம்.
"உடம்பு உள்ளம் உயிர் மூச்சு அறிவு சிந்தனை கற்பனை..."
எல்லாவற்றையும்
ஒரு புள்ளியில்
அல்லது நேர் கோட்டில்
நிறுத்துவதே யோகம்.
இப்படித்தான்
"பிரம்மம்"என்றால் என்ன?
என்று
ஒரு கல்லை தங்கள்
மனக்குளத்தில்
விட்டெறிந்தார்கள் முனிவர்கள்
அல்லது முனைவர்கள்.
"ரிஷிகள்" என்று சொன்னால் தான்
நமக்குப்பிடிக்கும்.
புரிவதை சொல்வதை விட
புரியாததை சொல்வதே
இங்கு (விளம்பர) சத்தங்களைத்தரும்.
சரி.
பிரம்மத்தை தோலுரிக்கக்கிளம்பியவர்கள்
எதுவுமே இல்லாதது எதுவோ
அதுவே பிரம்மம் என்றார்கள்.
பிறப்பு இறப்பு ஐம்பொறிகள் சாதி மதம் வர்ணம்
தர்மம் அதர்மம்...இத்யாதி இத்யாதி..
என்று
எது எதுவுமே இல்லாததாக இருக்கிறதோ
அதுவே பிரம்மம் என்றார்கள்.
அப்படியென்றால்
பரமாத்மா ஜீவாத்மா...இதெல்லாம்..?
ஆம்
பரமாத்மா ஜீவாத்மா என்றெல்லாம்
எதுவுமே இல்லை
இரண்டும் ஒன்று தான்
அதுவே அத்வைதம் என்றார்கள்.
சரி அது "இரண்டல்ல ஒன்று" என்று தானே பொருள்.
அந்த ஒன்று தானே பிரம்மம்!
ஆமாம் அதற்கென்ன?
அந்த ஒன்று
கடவுளா?(பரமாத்மா)
மனிதனா?(ஜீவாத்மா)
மனிதன் என்று கடவுளே வந்து சொல்லிவிட்டான்.
பரிணாம வளர்ச்சியில்
மனித(அறிவு)ன் தானே சிகரத்தில் இருக்கிறது.
நிஜமனிதனுக்குப் பின் ஒரு கற்பனை மனிதன்
நிழலாக விழுந்துகொண்டே இருக்கிறான்.
நம்பிக்கை தான் கடவுள் என்றால்
அதையும் திண்ணிய அறிவுடன் மனிதன் தானே
திளைத்து நிற்கிறான்.
அறிவின் ஒளி ஏற்படுத்தும் நிழல் இது.
கடவுள் இருக்கிறது கடவுள் இல்லை
என்றெல்லாம் சொல்லும் அறிவியல் அறிவும்
மனிதனிடம் தானே இருக்கிறது.
கடவுளைப்பற்றி கடவுளே
கவலைப்படாமல்
அவன்
மனிதனின் அறிவில் நீந்திக்கொண்டிருக்கிறான்.
அது இல்லை இது இல்லை எதுவும் இல்லை...
என்று சொல்லிக்கொண்டே வந்து
இந்த பிரம்மமும் அது இல்லை
என்று
முனிவர்
குளத்தில் கல் கல்லாக எறிந்து கொண்டே இருக்கிறார்.
வெங்காயம்.
ஒன்றுமே இல்லை.
போங்கள் உங்கள் வேலையைப்பார்த்துக்கொண்டு.
ஒன்றுமில்லை என்பதன்
சமஸ்கிருதமே நாத்திகம்.
பாருங்கள் ஒன்றியம் எனும் "யோகம்"
எங்கே போய்
தலைகீழாய் (சிரசாசனம்)
நின்று கொண்டிருக்கிறது பாருங்கள்.
இப்போதும்
அந்த சிலர் பதற்றத்தத்தோடு வரலாம்.
_____________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக