"தெய்வமாய்..."
______________________________
ருத்ரா
குணமடைந்து என் அப்பா
வீடு திரும்பினார்.
அவர் அறைக்குள்
முடங்கிக்கொண்டார்.
என்ன பேசுவது?
எதை பேசுவது?
ரெம்டெசிவருக்கு
கியூவில் நின்று
நைந்து போனதையா?
கவசத்துள் கிடக்கும்
அவரோடு
பேசமுடியாமல்
கண்ணீர் பெருக்கியதையா?
மின் மயானங்கள்
உடலைப்பெற்று
சற்று நேரத்திலேயே
சாம்பலாக
பண்டமாற்றம் செய்து
கொடுத்துக்
கொண்டிருக்கிறார்களே
அதைப்பேசுவதா?
ஊரடங்கு என்று சொல்லி
ரோடுகள் எல்லாம் வெறிச்சென்று ஆகி
அந்த ஆவிகள் விளையாடும்
ஒலிம்பிக் மைதானங்களாகி
விட்டனவே!
அதைச்சொல்வதா?
அம்பாள் சமேதரராய்
கோடியில் இருக்கும் கோவிலில்
அந்த மருந்தீஸ்வரர்
கனத்த பூட்டு சங்கிலிக்குள்
கிடப்பதைச்சொல்வதா?
அப்போதும்
புரியாமல் கடவுளைக் குழப்பும்
அந்த மந்திரங்களைச்
சொல்லிக்கொண்டிருக்கிறார்களே!
அதைச்சொல்வதா?
வாயோடு வாய் வார்த்தை கூட
பேச முடியாமல்
ஏதோ கூண்டோடு கைலாசம் போவது
போல
போய்விடுகிறார்களே..
அதைப்பற்றியெல்லாமா
இவரிடம் புலம்ப முடியும்?
என்ன பேசுவது?
என்ன பேசுவது?
........................
.......................
ஒன்றும் பேசவேண்டாம்
பேசியதெல்லாம் போதும்.
ஒரே புகை மூட்டம்.
டிவிகளில்
ப்ரேக்கிங் நியூஸ்னு போட்டுவிட்டு
கொடேங்க் மொடேங்க் என்று
பின்னணி இசை கொடுப்பார்களே
அந்த பாணியில்
ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு
அந்த முள்ளு மகுடசாமி
அதான்..அந்த கொரோனா முனி
மறைந்து போனது.
அறை முழுதும்
இன்னும் விபூதி அல்லது சாம்பல்
புகை மூட்டம் தான்.
......
அண்ணே..எழுந்திருண்ணே.
அப்பா தெய்வமாய் போய்ச்சேர்ந்திட்டார்.
நீ ஏன் எதேதோ
கனவுல பும்பிட்டிருக்கே.
தம்பி எழுப்பினான்.
நான் எழுந்து
மலங்க மலங்க விழித்தேன்.
அப்போ அவர் குணமடைந்து
வீட்டுக்கு வந்தது?
நான் இன்னும்
மலங்க மலங்க தான்
விழித்துக்கொண்டிருந்தேன்.
__________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக