சனி, 19 ஜூன், 2021

முட்களின் தவம்

 

                                                                       

முட்களின் தவம் 

--------------------------------------------ருத்ரா 



முப்பத்தாறு வருடங்களுக்கு முன் 

எங்கள் வீட்டு மொட்டை மாடியில் 

ஒரு மேடை போட்டு 

இந்த முள்ளு முனிவனை 

உட்கார வைத்தேன்.

அதன் பின் என்ன ஏது என்று 

எதுவும் கேட்கவில்லை.

ஒரு சொட்டு தண்ணீர் கூட 

நான் ஊற்ற வில்லை.

அந்த முனிவனின் 

ஒவ்வொரு தாடி மயிரும் 

நீல வானத்தை நோக்கியே 

விறைத்து நிற்கின்றது.

"விசும்பின் துளி "வீழ்ந்த போது 

மட்டுமே 

அவனுக்குள் ஒரு வசந்தம் 

ஊற்றெடுத்திருக்கலாம்.

இத்தனை வருடங்களாக 

அவன் 

உதிரவில்லை...காயவில்லை.

ஒவ்வொரு முகமாக 

இங்கொன்றும் அங்கொன்றும் 

காட்டிக்கொண்டே இருக்கிறான் 

பசுமையாக!

அத்தனையும் 

முட்கள் முட்கள் முட்கள் தான்.

ரோஜாவை முட்களோடு தானே 

பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

அவன் 

கனவு அல்லது தவம் 

அவனுக்கு ஒரு 

சுகமான "இன்ஃ பினிட்டி"

அந்த மெல்லிய முட்களே 

அவனுக்கு  நுண்ணிய 

சிலிர்ப்பாகும் 

பளிங்கு ரோஜாக்கள்.

சில பனித்துளிகளுடன் 

அவன் முணுமுணுப்புகள் 

எனக்கு கேட்டிருக்கின்றன.

"செடிகளே! பூக்களே !

மனிதனுக்கு நீங்கள் 

அழகு காட்டி 

அலங்காரம்

 செய்ததெல்லாம் போதும்.

பயம் காட்டுங்கள் .

அச்சமூ ட்டுங்கள்..

இயற்கையின் அடி இதயத்தை 

எட்டிப்பார்க்காமலேயே 

எத்தனை ஆட்டம் போடுகிறான்?

"உள்ளங்கை செல்பேசி "களுக்குள் கூட 

எத்தனை வக்கிரங்கள்?

எத்தனை உக்கிரங்கள்?...."

இன்னும் 

அந்த முள் முனிவன் 

முகம் சிவந்து 

கத்திக்கொண்டே இருந்தான்.

இப்போது 

அந்த முள்ளுக்கொத்துகள் 

அரக்கன்களாய் ஆகின!...

................

........................

டிவியில் அந்த 

கொரோனா குவித்த பிணங்களின் 

புள்ளிவிவரங்கள் 

ஊர்வலம் போய்க்கொண்டிருந்தன

 .

---------------------------------------------------------------------------










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக