வியாழன், 3 ஜூன், 2021

கீறல்

 

கீறல்

________________________________ருத்ரா இ பரமசிவன்


சின்ன சின்னை 

தருணங்களையும் கூட‌

ஓட்டை போட்டு

உன்னைத் துருவி துருவி 

தேடிக்கொண்டிருக்கிறேன்.

அணிலாடு முன்றில் என்று

அன்றைக்கு ஒரு ஓலையில்

எழுத்தாணி கொண்டு கீறினானே

ஒரு கவிஞன்

அவனுக்குள் ஏற்பட்ட 

அந்தக் கீறல் தான்

இன்னும் இன்னும் இங்கே

என்னைத்

"துணி துவைத்துக்கொண்டிருக்கிறது."

எப்போது தான் வந்து தொலைப்பாய்?

இப்படி

நான் பல்லைக்கடித்து பல்லைக்கடித்து

சன்னல் கம்பிகளைக்கூட‌

தின்ன ஆரம்பித்து விட்டேன்.

உன்னைப்பார்க்க வேண்டும் என்ற‌

அடங்காத வெறி!

ஆனால் உன்னைக்காணும்

அந்த துளிப்பார்வையிலும் கூட‌

உன் பார்வையில் 

நான் விழுந்து விடக்கூடாதே

என்ற 

வெட்கமும் பயமும் ஆனந்தமும்

கள்ள மகிழ்ச்சியின் கள் போதையும்

இன்னும்

என்னவெல்லாமோ கலந்து

என்னை 

அதோ

வானில் தூசாய் பறக்கிறதே

அந்த அனிச்சத்துரும்பை விடவும்

இலேசாய் மிதக்க வைக்கிறது.

ஆனால் அதையும் மீறி கனமாய்

ஒரு இன்பம் அடி ஆழத்துக்குள்

இழுக்கிறது.

சன்னல் கம்பிகள் 

ஒரு மௌனத்தை முலாம்பூசிக்கொண்டே

இந்த நீண்ட காலத்து 

துண்டு துணுக்குகளை

துருப்பிடிக்க 

வைத்துக்கொண்டே இருக்கிறது.

போதும்.

இந்த கம்பிகளில் எல்லாம்

தனிமையின் பனிகொடுமை

அண்டார்டிக்காவாய் உறையச்செய்து

என்னைப்புதைக்கின்றது.

விரைவில் உன் முகம் காட்டு.


______________________________________



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக