ஞாயிறு, 20 ஜூன், 2021

அப்பா.

 அப்பா

_________________________________ருத்ரா


அப்பா!

உங்களை மறந்தே போய்விட்டேன்.

நீங்கள் இறந்ததும்

சுடுகாட்டின் வறட்டிகளில்

முகம் மறைக்கப்பட்ட போது தான்

நான் பார்த்த‌

கடைசி அந்திச் சூரியன்.

அப்புறம் மூண்ட 

தீயின் கீற்றுகளில்

பிக்காசோவின் தூரிகையை

கடன் வாங்கி

தீட்டி தீட்டிப் பார்த்துக்கொண்டேன்.

எங்களுக்கு

அப்பாவாக வாழ்ந்த போதெல்லாம்

என் காலடியில்

உங்கள் "காலடி" தான் இருந்தது.

அது சொன்ன அத்வைதம்

கடவுள் இல்லை.

கடவுள் இல்லவே இல்லை

என்பது தான்.

அம்மா

எங்களையெல்லாம்

கல்லிடைக்குறிச்சியின்

மேலைத்திசையில்

காண்டாமணி ஒலிக்க ஒலிக்க‌

அந்த பெருமாள்கோயில்

கெருட சேர்வையை பார்க்க‌

(கருட சேவையை அம்மா

அப்படித்தான் சொல்லுவாள்)

இழுத்துக்கொண்டு 

போவாள்.

எங்களுக்கு தெரிந்த பெருமாள் எல்லாம்

அந்த சவ்வுமிட்டாயும்

கீர் கீர் என ஒலியெழுப்புமே

அந்த கை சுற்றுக்கருவியும் தான்.

அந்த பொம்மைக்குள் தான்

நாங்கள் கண்ட விஸ்வரூபம்

சுருண்டு கிடந்து ஒலியெழுப்பும்.

அப்பா!

அப்போதெல்லாம்

உங்கள் கோயில் அந்த‌

வெத்திலைச்செல்லம் தான்.

அதிலிருந்து 

அங்குவிலாஸ் புகையிலைத்தூளை

உள்ளங்கையில் வைத்து

வாயில் அதக்கிக்கொண்டே

அத்வைத த்வைத விசிஷ்டாத்வைத

தத்துவங்களை

கிள்ளி கிள்ளி தருவீர்கள்.

அதன் உட்பொருளில் எல்லாம்

உங்கள் வெண்தாடி வேந்தர் சொன்ன‌

பிரம்ம சூத்திரம் தான்

சுருக்கென்று தைக்கும்.

அது சந்தேகம் இல்லாமல் இதுவே தான்.

"கடவுளை பிரச்சாரம் செய்பவன் 

காட்டுமிராண்டி"

நியாயம்

வைசேஷிகம்

சாங்கியம்

பூர்வ‌

ஊத்தர மீமாம்சங்கள்

இதையெல்லாம் கூட‌

எனக்கு புட்டு புட்டு தந்திருக்கிறீர்கள்.

இவ்வளவுக்கும்

நீங்கள் படித்தது 

நாலாம் கிளாஸ் வரை தானாம்.

தாத்தா சொல்லியிருக்கிறார்.

அதெல்லாவற்றையும் விட‌

எனக்கு இன்னும் உங்கள் மீது 

வியப்பு!

உங்களோடு பேசும் அந்த‌

சுவாரஸ்யத்துக்காக‌

நம்மூர் பதினெட்டு அக்கிரகாரங்களில்

அந்த முக்கிய 

ஏகாம்பரபுர அக்கிரகாரத்து

"சிதம்பர ஐயர்"

உங்களை அடிக்கடி

ஏதோ ஒரு தத்துவ விசாரத்துக்கு

பேச வரும்படி அழைப்பு விடுப்பாரே

அது தான்.

இன்னும் என்ன....

உங்கள் கருத்துகளும் சிந்தனைகளும்

ஒரு சவ்வூடு பரவலாய்

எனக்குள் ஊடுருவி

என்னைச் சிந்திக்க 

வைத்துக்கொண்டே இருக்கும்.

அப்பா!

உங்களை மறந்தே போய்விட்டேன் தான்!

மரணம் எனும் 

ரப்பர் அழித்துவிட்ட‌

அந்த நிழலுக்கும் அடியில்

அந்த வெத்திலைச்செல்லத்தில்

ஒவ்வொரு அறையாக‌

நீங்கள் எங்களை

தேடிக்கொண்டிருப்பதாகத்தான்

இன்னும் தெரிகிற‌து.

______________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக