செவ்வாய், 8 ஜூன், 2021

என் குரல் அல்ல..

 என் குரல் அல்ல..

____________________________

அன்பர்களே

அனைவரும் கேளுங்கள்.

என் குரல் அல்ல இது.

ஆகாய வானொலியில்

ஆண்டவன் பேசுவது:....

என்னை இன்னும் 

தேடிக்கொண்டே இருக்கிறீர்கள்.

உங்கள் நம்பிக்கைகளில்

ஏன் அவநம்பிக்கைகளிலும் கூட‌

உங்கள் நலப்பாடுகளில்

ஏன் இந்த கொள்ளை நோய்களிலும் கூட‌

உங்கள் கோவில்களில்

ஏன் இந்த நடைபாதை சாக்கடையோரங்களிலும் கூட‌

உங்கள் பனைமர உயரத்து சிலைகளின் பாலாபிஷேகங்களில்

ஏன் ஒரு பிடி சோறும் இன்றி வற்றிப்போன அந்த எலும்புக்கூட்டு உருவங்களிலும் கூட‌

தேடிக்கொண்டே இருக்கிறீர்கள்

ஆம்.

தேடுங்கள் தேடிக்கொண்டே இருங்கள்.

அந்தப் புள்ளிக்கு வரும் வரை

அந்த முனையில் நீங்கள் பின்னால் திரும்பிவர இயலாத‌

அந்த நுனிக்கொம்பு வரை...

கடவுளைத் தேட 

அவசியம் இல்லாத அல்லது

தேட இயலாத‌

அந்தப்புள்ளி...

இன்னும் ஒரு

இறுதிப்புள்ளி அல்ல.

அவர் உங்களில் ஒரு பிம்பம் போல‌

உங்களுக்குள் ஊடுருவும் போது

உங்களுக்குள்

ஒரு உறுத்தல் அல்லது பயம் அல்லது அருவறுப்பு

அல்லது ஒரு பெருங்களிப்பின்

குமிழிகளை வெளியிடும்

அந்தப் புள்ளிவரை

நீங்கள் தேடிக்கொண்டே இருக்கலாம்.

அந்த பிம்பமா நான்?

நான் தான் அந்த பிம்பமா?

ஒரு கணம் 

என் மீதே நீங்கள் முகம் சுழிக்கலாம்.

என் மீதே நீங்கள் வெறுப்பு காட்டலாம்.

ஏன்

காறியும் உமிழலாம்.

ஐயய்யோ என் முகத்தின் மீதா இது வரை

உமிழ்ந்து கொண்டிருந்தேன் என்று

நீங்கள் அலறி அலறி புலம்பிக்கொண்டிருக்கலாம்.

அழுது கரையலாம்.

உருகலாம் 

உன்மத்தம் பிடித்துக்கிடக்கலாம்.

நீங்கள் எது செய்தாலும் அது சரியே!

அப்போது

என் மக்களே நீங்கள் அந்த‌

மோட்ச ராஜ்யத்தை அடைந்து விட்டீர்கள்.

உங்களுக்கு

மைல் கற்களும் தேவையில்லை.

பயணமும் தேவையில்லை.

உங்களை அறியாமல் ஒரு அறிவு

உங்களை இயக்குகிறது.

எதையோ ஒரு உட்கிடக்கையை

உங்களுக்கிடையே இன்ப ஆறு போல‌

ஊற்றெடுக்கும்

உங்களுக்குள் ஒருவருக்கொருவர்

பாய்ச்சிக்கொள்ளும்

அன்பின் மின்காந்த ஆறு

பெருகி ஓடுவதை உணர்கிறீர்கள்.

உலகம் உங்கள்

விரல்களில் சுற்றும் அதிசயம் கண்டு

கொண்டாடுகிறீர்கள்.

கொண்டாடுங்கள்.

அன்பு தொடரட்டும்.

மகிழ்ச்சிப்பிழம்பில் திளையுங்கள்.

இப்போதும் நீங்கள் தேடுங்கள்.

ஆம்!

பிம்பங்களை அல்ல.

உங்கள் உண்மை இருப்புகளை

தேடிக்கொண்டே இருங்கள்!

_______________________________________ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக