சனி, 12 ஜூன், 2021

ஏக்கம்.

 ஏக்கம்.

.__________________________ருத்ரா



என் மேசையடி என் உலகம்.

அந்தக்காலத்து உருண்டைப்பேனாவும்

கத்தை கத்தையாய் 

காகிதமும் என் உடமைகள்.

என் உள்ளம் 

என் சிந்தனை

என் கற்பனை

என் அறிவுப்படிமங்கள்

எல்லாம்

உருண்டு திரண்டு

உடல் போல மொத்தையாய்

உருக்கொள்ளுமானால்

அதையும் என்னுடன்

ஆலிங்கனம் செய்து கொள்ளுவதாய்

உருவகித்துக்கோள்ளுவேன்.

அப்புறம்

அந்த மாயப்புணர்ச்சியை

எழுத்து எழுத்தாக‌

இலக்கண இலக்கியச் சிதிலங்களோடு

செதில் செதிலாய் செதுக்குவேன்.

ஆயிரம் இரண்டாயிரம் பக்கங்களையும்

தின்று தீர்த்துவிடும் அந்தப்பேனா.

சீற்றம் சினம் பாய்ச்சல்

எல்லாம் அக்கினியின் காட்டாறுகளாய்

என் அடி மூலையின் 

ஃப்ராய்டிசப்பிறாண்டல்களிலிருந்து

வெளிக்கிளம்பும்.

சமுதாயம் என்று சொல்லப்படுகின்ற‌

அந்த கலைடோஸ்கோப்பு

சித்திரங்களின்

நிகழ்வுகளில்

எல்லாம் அந்த உடைந்த‌

வண்ண வண்ண வளையல்களின்

பரல்களாய்

உருண்டு உருண்டு

என்னை வெறியேற்ற‌

எதை எதையோ எழுதி எழுதிக்

குவிக்கச்செய்யும்.

காகிதங்கள் கட்டு கட்டாய் 

உண்டு முடிக்கப்பட்டு

சொல்லாக்கங்களும்

வரி வரியாய் அவற்றின் மீது

பற்பசைக்குப்பியிலிருந்து

பிதுக்கப்படுவது போல்

பிழிய பிழிய வெளித்தள்ளப்படும்.

ஊழியின் உன்மத்த நெருப்பின் பிழம்பு

அங்கு

அழகிய அழகிய மயிற்பீலிகளாய்

அந்த காகிதங்கள் எல்லாம் 

செருகி வைக்கப்படும்.

அசிங்கங்களும்

அவலங்களும்

புனிதங்களும்

வக்கிரங்களும் 

உக்கிரங்களும்

ஆபாசங்களும்

இன்னும்..என்ன என்ன என்று

தேடித்துருவி

சமுதாய அல்லது தனிமனித‌

கோண முடுக்குகள் எல்லாம்

அலங்கார ஜிகினாக்களின்

தோரணங்களுடன்

அல்லது உணர்ச்சித்தீயின்

லாவா வடிதல்களுடன்

எழுதப்படும்.

மூவாயிரம் நாலாயிரம் பக்கங்கள்

அங்கு

காகிதக்கூழ் ஆற்றில் 

மூழ்கிக்கிடக்கும்.

நாடு நகரங்கள் 

அதன் மக்கள் எனும் 

புழுக்கூட்டு மண்டலங்கள் 

அப்புறம் உள்ளே

புடைத்துக்கிடக்கும்

வர்ண வர்ண பிரளய‌ங்களின்

இறக்கைகளின் கூடுகள்

சம்பவ அடைசல்களின்

புற்றிசல்கள் எல்லாம்

அங்கே மொய்த்துக்கிடக்கும்.

...........

.................

ஒரு நாள் 

நான் அந்த நாற்காலியில்

சரிந்து கிடந்தேன்.

தலை

தொங்கிகிடந்தது.

நான் அங்கே இருந்து

அள்ளியெறியப்பட்டேன்.

ஈக்கள் மொய்த்துக்கிடந்த‌

அந்த காகிதங்களையெல்லாம்

சுருட்டிக்கொண்டு போனார்கள்

யாரோ அச்சகத்துக்காரர்கள்.

அவர்கள் பேசிக்கொண்டார்கள்.

இந்த வருட விருதுக்கு

இது வந்து விடும்.

அந்தச்சொற்கள்

அந்த அறையின் காரை பெயர்ந்த‌

சுவர்க்கீறல்களில் கூட 

எதிரொலித்தது.

இன்னும் ஈக்கள் அந்த‌

மேசையை 

மொய்த்துக்கொண்டு தான் இருந்தன.


__________________________________________

 









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக