முதல் வெளிச்சம்
____________________________________ருத்ரா
அந்த சன்னலைச் சாத்துங்கள்
வெளிச்சம் தேவையில்லை
எங்களுக்கு.
பல நூற்றாண்டுகளாய்
இருட்டையே தின்று
இருட்டையே செரித்து
இன்னும்
இருட்டாகவே இருக்கிறோம்.
கடவுளின் குரல் மட்டுமே
இங்கே
இரைச்சலிடப்படுகிறது.
யாரிடம் அல்லது
யாருக்கு
இங்கே கடவுள் பேசுகிறார்?
கடவுள் சொல்கிறார்
ஓ மனிதர்களே!
பிறவிகள் வழியாக
நீங்கள் பிதுக்கித்தள்ளப்படுகிறீர்கள்.
இது தான்
பாவங்களுக்கு எல்லாம் பாவம்.
பிறப்பதை
எப்போது நீங்கள் நிறுத்துவீர்களோ
அப்போதே
நீங்கள் சுத்தம் செய்யப்படுகிறீர்கள்.
அந்த புண்ணிய லோகத்துக்கு
எப்போது செல்வீர்கள்?
பேசிக்கொண்டே போகிறார்.
சரி..
பிறக்கவில்லையென்றால்
அப்புறம்
யாரிடம் இந்த பேச்சுகள்
பீச்சியடிக்கப்படும்....?
இப்படி
சிந்திக்க
இதை கேள்வி எழுப்ப
இங்கு யாரும் இல்லை.
கடவுள் குறிப்பிடும் மனிதர்கள்
யார்?
அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
அவர்கள்
முகங்களை நாங்கள்
பார்த்ததே இல்லை.
அவர்களின் நிழல்கள் கூட
பார்க்கப்பட இயலவில்லை.
ஏதோ வெளிச்சம் எனும் பேய்
வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்
என்று குரல்கள் வருகின்றனவே!
இருட்டிலே கரைந்து போன
எங்களுக்கு ஏது நிழல்?
ஓ மனிதா!
நீ எங்கிருக்கிறாய்?
உன்னைப்பார்ப்பதே பாவம்
என்று சொல்லப்படுகிறதே.
நீ
எங்கு தான் இருக்கிறாய்?
அந்தப்பிசாசுகளை நீங்கள்
பார்த்து விடக்கூடாது
என்று
அடிக்கடி சொல்லப்படுகிறதே!
அட!
திடீரென்று எதோ ஒரு பிரவாகம்
பிளந்து வந்தது போல்...
அது என்ன?
ஏய்..யாரது..சன்னலைத்திறந்தது.
அவனைக்கொல்லு..குத்து..
விடாதே
இவை என்ன குரல்கள்?
ஒன்றும் புரியவில்லை..
எங்களைத்தின்னும் இருட்டே
இங்கு விழுங்கப்படுகிறதே..
அது என்ன?
ஒன்றும் புரியவில்லை
ஒன்றும் விளங்க வில்லை.
அந்தக்குரல்கள் மறைந்து போயின.
பாவம் புண்ணியம்..
எதுவும்
இப்போது கேட்கவில்லை.
துடிப்புகள் மட்டும் கேட்கிறது.
அதன் ஓசை அதிகரித்துக்கொண்டே
போகிறது.
இப்போது எல்லாம் தெரிகிறது.
கண்கள் என்கிறார்கள்.
வாய் என்கிறார்கள்.
மூக்கு முகம் என்றெல்லாம்
அடையாளங்கள் வருகின்றன.
இது தான் மனிதனா?
இவ்வளவு மகத்தானவனா?
உயர்ந்த கைகள்
இப்போது குரல்கள்
அங்கிருந்து வருகின்றன.
நாம் எல்லாமே தான் மனிதன்.
நம் கைகளில் பாருங்கள்.
நம் அறிவுகளில் நுழைந்து பாருங்கள்.
இப்போது உலகம் தெரிந்தது
வானம் தெரிந்தது.
கூட்டம் கூட்டமாய் புள்ளிகள்
தெறிக்க விட்டதைப்போல்
தெரிகின்றனவே
அவை பறவைகள்..
இனி ஒன்றாய் இயங்கிடுவோம்.
இது தான் மனிதனா?
மனிதம் பிரம்மாண்டமாய் விரிந்தது.
ஓ! இது தான் வெளிச்சமா?
உடைத்து நொறுக்குங்கள்
அந்த பாறாங்கல் சன்னலை...
இது புதிய வெள்ளம்.
கடவுளின் குரல்கள் மூழ்கிப்போயின.
கல் தோன்றும் முன்னே..
மண் தோன்றும் முன்னெ
நாம் உயர்வோம் மனிதா
நம் நீச்சல்களே நம் உயிர்கள்.
ஓ மனிதா.
இனி இந்த பிரபஞ்சமே உன் உடைமை.
அங்கே வானம் வந்து
தாழ்ந்து வணக்கம் சொன்னது!
__________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக