அந்த இருவர்....
_____________________________ருத்ரா
கண்ணதாசன் கவிஅரசர்
ஆன போது
அவரது
வெண்கொற்றக்குடையும்
மணி மகுடமும்
அவரது பேனாவும் காகிதமும் தான்.
அவரது பாடல்வரிகள்
எம் எஸ் வி யின்
நரம்பு வாத்தியங்களையும்
தாள வாத்தியங்களையும்
வருடிக்கொடுத்தன என்பதை விட
அரிப்பெடுத்த
அந்த வாத்தியங்களுக்கு
அவை நன்றாய் முதுகு சொறிந்தன.
என்பதே சரி.
ஏனெனில்
அவரது பேனாவின்
நிப்பு முனைத் தினவுகளுக்கு
தீனி போட்டது
அந்த இசைக்கருவிகளே.
எத்தனை எத்தனை பாடல்கள்?
நம் செவிகளுக்கும் இதயங்களுக்கும்
இடையே
பொன்னூஞ்சல்கள்
ஆட்டி விட்டுக்கொண்டிருந்தார்கள்
இருவரும்.
ஒரு பாட்டைப்பற்றிச் சொன்னால்
அது ஏற்படுத்திய
கிளர்வுகளும்
இனிமைக்கிளுகிளுப்புகளும்
பற்றிச்சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
பாட்டின் வரிகளில்
பெண்மைக்குள் ஒரு ஆண்மையும்
ஆண்மைக்குள் ஒரு பெண்மையும்
நெய்யும் இனிமையான இழைவை
மறக்க இயலாது.
அது....
"தேடினேன் வந்தது..."
ஊட்டிவரை உறவு என்ற படம்.
கே ஆர் விஜயா அவர்களின்
அமர்த்தலான ஆனால்
அமெச்சூர் தனமான
உடலின் வளைவு நெளிவுகளில்
சிவாஜி அவர்களின்
கல் போன்ற இறுகிய மௌனத்துள்
பூக்காமல் பூக்கும் முறுவல்
அற்புதம் அருமை!
அந்த ஒப்பற்ற கலை நெசவுக்கு
காரணமாய் கவிஞரின் வரிகள்.
இவை போல்
எண்ணற்ற மின்னல் தெறிப்புகளை
விதைத்துத் தந்த வித்தகர் கவியரசு.
கவியரசனே!
உன் குடியிருப்பு ஒரு கோப்பை
என்றாய்
அது எப்படி இருவர்களால்
ஒரு கோப்பையில்
பூங்குமிழிகளையும்
வைரப் புகைமண்டலங்களையும்
உயிர்ப்போடு
இன்று வரை பிரசவித்துக்கொண்டே
இருக்க முடிகிறது?
அந்த இருவர் யார்?
உமர்கய்யாமும்
கண்ணதாசனும் தான்.
____________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக