Edward Witten | |
---|---|
சூரியனிலிருந்து ஒரு மயிற்பீலி.
_________________________________________
ருத்ரா
மரக்கிளைகள் வழியே
கசிந்த சூரியனில்
ஒரு குளியல்!
அந்த நெருப்பின் பிழம்பில்
செய்த
கோடிக்கணக்கான மைல்களில்
மிக நீளமான
ஒளியின் மயிற்பீலி
என் இதயத்துக்குள் வருடியது.
மனிதா!
உன் ரகசியத்தை
எனக்கு சொல்லக்கூடாதா?
ஓ சூரியனே!
உன்னை கிச்சு கிச்சு மூட்டி
இவர்கள் தினமும்
ஆதித்ய ஹருதயம்
சொல்லி சொல்லி
"ஜலம்"தெளிக்கிறார்களே
அந்த ரகசியத்தின் மர்மக்குகையை நீ
எப்போது திறந்து காட்டப்போகிறாய்?
அவர்கள்
ஏதோ களிம்பு ஏறிப்போன
ஒரு புராணத்தை அல்லது இதிகாசத்தை
சும்மா புளி போட்டு தேய்க்க
என்னைக்
கூப்பாடு போட்டு
கூப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
அதெல்லாம் யாருக்கு வேணும்?
தெரியாததை புதிர் முடிச்சு
என்கிறாய்
ஆனாலும் எங்கள்
புதிர்முடிச்சுக்கு எதிர்முடிச்சு
போடும் கணித வல்லமை கொண்ட
ஒரு மனிதன் இருக்கிறான்.
யார்?யார்?...யார்?
ஆவலை அடக்கமுடியாமல்
கேட்டேன்.
"எட்வர்டு விட்டன்"
என்று அவன் விவரித்ததை
என்னால் விவரிக்க முடியவில்லை.
இது அறிவின் விசுவரூபம்.
இதற்குள்
கடவுள்... பக்தன் என்கிற
"மச்சியோவில்லி"க்கொச்சைத்
தந்திரங்கள் ஏதுமில்லை!
கணிதவியலுக்கு என்று தனியாக
நோபல் பரிசு ஏதுமில்லை.
அதனால் "ஃபீல்ட்ஸ் மெடல்"எனும்
அதற்கு இணையான விருது
1990ல் அவனுக்கு அளிக்கப்பட்டது.
ஈர்ப்பு என்பது மையத்தை நோக்கிய
எதிர்மறை ஆற்றல் ஆகும்.
கருந்துளையின் சிங்குலாரிடி
ஒற்றைப்புள்ளியில்
பிரபஞ்சத்தின் எல்லா நேர்மறை
ஆற்றல்களும் அந்த ஒரே
எதிர்மறைப்புள்ளியில் போய் ஒடுங்கிவிட்டால்
அப்புறம் பிரபஞ்சம் என்று
எதுவுமே இருக்காதே!
இப்படி ஒரு முரண் எல்லா விஞ்ஞானிகளாலும்
எழுப்பப்பட்டபோது
இதை
ஐன்ஸ்டீன் தன் மாபெரும் தவறுகள்
"க்ரேட் ப்லண்டர்ஸ்"
என்கிறார்.
அப்புறம் பிரபஞ்ச மாறிலி எனும்
"காஸ்மலாஜிகல் கான்ஸ்டண்ட்"டுடன்
அவரது "பொதுச்சார்பு"கோட்பாடு
உலகப்புகழ் பெற்றது.
ஆனால் அந்த மாறிலிக்குள்
ஒரு நேர்மறை ஆற்றல் ஒன்று
முட்டுக்கொடுத்துக்கொண்டு
இந்த பிரபஞ்சத்தை
பிரபஞ்சமாக வைத்துக்கொண்டிருக்கிறது.
இதை "விட்டன்"
"நேர்மறை ஆற்றல் கோட்பாடு"
(பாசிடிவ் எனர்ஜி தியரம்)
எனும் சமன்பாட்டில் அற்புதமாய்
விளக்கியிருக்கிறார்.
அதற்குத்தான் அவருக்கு அந்த
உயரிய விருது!
முடிச்சுகள்(நாட்ஸ்) பற்றிய அவனது
கணிதங்களில்
என்னைப்போல கோடிசூரியன்களின்
தொப்புள்கொடி
நாளங்களையே உருவி
முடிச்சு போட்டு முடிச்சு அவிழ்த்து
எங்கள் ரகசியங்களை
தோரணங்கள் கட்டி தொங்க விட்டுவிட்டானே.
"நாட் காம்ப்ளிமெண்ட்" எனும்
கணித கோட்பாடுகளை
குழையும் இடவியல் எனும்
டோபாலஜியில் உட்புகுத்தி
குவாண்டம் எனும் "நுண் அளவை" கணிதத்தை
அக்கு வேறாய் ஆணி வேறாய்
பிரித்து மேய்ந்திருக்கிறானே.
அதிலும்
"கோ ஹோமாலாஜி"எனும்
அவனது கணித நுணுக்கத்தின்
வழியாக
எங்கள் அறிவின் வெளிச்சத்தை
எங்கள் கண்களுக்கே கூசும்படி அல்லவா
செய்திருக்கிறான்.
ஓ! மனித ஒளி வெள்ளமே!
உங்கள் மூளைக்குள்
அடிக்கும் இந்த மின்னல்களை
வைத்து
மொத்த பிரபஞ்சத்தையும்
சுருட்டி ஆய்வுக்கட்டுரைகளாக
பல்கலைக்கழகங்கள் தோறும்
படுக்கவைத்திருக்கிறீர்களே!
எப்படி அது?
அதன் ரகசியம் என்ன?
ஆதித்யஹ்ருதயம் எனும்
ஸ்லோகங்கள் எல்லாம் இருக்கட்டும்.
அந்த ஆதித்யனே மனித செவிக்களில்
நுழைந்து கேட்கிறானே!
சூரியன்
இந்த மானிட"அற்பர்களின்"
மூளைச்செதில்களின் ஆரண்யங்களில் அல்லவா
தினம் தினம் ஒளித்து ஒளித்து
கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறான்.
மனிதன் எனும்
அறிவின் உட்கருவுக்குள்
இத்தனை கோடி சூரியன்களா?
அதோ
சூரியன் விக்கித்துப்போய் நிற்கிறான்.
துகள்கள் பளுவான நிலையில்
ஹேட்ரான்கள் ஆகும்.
இவற்றின் சுழல்வியம் (ஸ்பின்)
ஆற்றல் கடலில் ஒரு மையம் ஆகும்.
இது நேர்மறை எதிர்மறை ஆவதே
பிரபஞ்சங்களின்
உள் விளையாட்டு ஆகும்.
சுழல்விகளாக (ஸ்பைனார்)
போக்குகாட்டும் அதன்
சதுரங்க கட்டங்களை
சடக்கென்று ஒரு புள்ளியில்
அதன் நாடிபிடித்து
அதாவது அதன் பல்ஸ்க்குள்ளும்
கணித நுட்பம் செலுத்திதான்
விட்டன்
இந்த "நேர் ஆற்றல்" கோட்பாட்டை
வைத்து
இப்படியொரு
அபூர்வக்கோட்டையைக்கட்டி
கொடியேற்றினான்.
ஐன்ஸ்டீன் தன் நண்பரான
விஞ்ஞானி "டி சிட்டர்"ஐ வைத்து
அந்த பிரபஞ்ச ஓட்டையை
அடைக்கும்
"டி சிட்டர் வெளியை"
தன் சமன்பாட்டுக்குள்
செருகினார்.
அதன் எதிர்வெளியான
"அன்டி டி சிட்டர் வெளியை"
வைத்து
ஈர்ப்பு ஆற்றலின் எதிர் ஆற்றலை
நேர் ஆற்றலாய்
வைத்து ஒரு சமன்பாடு ஆக்கி
புரட்சி செய்தான்
விட்டன் எனும்
மனிதன் எனும் மாபெரும் விஞ்ஞானி.
எலக்ட்ரான்களுக்குள் புகுந்து
தலை காட்டும் இந்த
"மனிதட்ரான்"கள்
என் மண்டைக்குள்ளும்
ஆயிரம் பூரான்களாக
குடைந்து கொண்டிருக்கிறான்கள்.
என்ன மாணிக்கமயமான
சூரியக்குளியல் இது!
____________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக