வெள்ளி, 25 ஜூன், 2021

தென்னையில் ஒரு முகம்.




தென்னையில் ஒரு முகம்.
_____________________________________
ருத்ரா


பார்க்க பார்க்க‌
அழகின் வெறியை
ஊட்டுகிறது.
கீற்றுகள் 
வாட்களை 
ஒன்று சேர்த்து 
தலையில் கட்டு கட்டாய்
சுமையேற்றி
வீரமோ வீரம் 
என்று கூவி விற்றுக்கொண்டு
போவதாய் ஒரு தோற்றம்.
மண்ணின் வீரம்
தென்னங்குருத்தில் கூட‌
சொட்டு சொட்டாய்
ஒரு மௌன "லாவா"வை
சிந்துகிறது.
எரிமலையின் விதைகள்
திடுமென்று சில தருணங்களில்
சினை கொள்ளலாம்.
தமிழே! யுக நெருப்பே!
மரணங்கள் உனக்கு
முற்றுப்புள்ளி வைப்பதென்றால்
பலப்பல நூற்றாண்டுகளை
அந்த சிவப்பு புறநானூறுகளில்
பச்சைக்குதிரை விளையாடி
நீ
தாண்டி வந்திருக்க முடியுமா?
உன் உயிரெழுத்தில் தான்
சூரிய வெப்பத்தின்
கோடி "கர்ப்பம்"
தரித்து நின்று தளும்புகிறது.
சூடு தெறிக்கும்
எங்கள் கண்ணீர் தளும்பல்களில்
அவை நிழல்கள் அல்ல.
இந்த உலகமே 
உற்றுப்பார்த்துக்கொள்ளும்
தன் தொன்மையின்
பிரம்மாண்ட முகம் அது.

_______________________________________







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக