செவ்வாய், 1 ஜூன், 2021

கங்காருகளும் குட்டிகளும்


கங்காருகளும் குட்டிகளும்

___________________________________________


கொரோனா பற்றி

எல்லோருக்கும் தெரியும்.

கொரோனா

மரணங்களைக் குவித்ததும்

நடு நடுங்க‌

எல்லோருக்கும் தெரியும்.

மரணம் என்றால் 

அடுத்த உலகம் தான்.

போய் வாருங்கள்.

உங்களுக்கு

இந்த காக்காய்கள் மூலம்

பிண்டம் வைத்து அனுப்புகிறோம்

என்று மந்திரங்கள் மூலம்

இந்த மரணத்தை 

பூசை செய்பவர்கள் உண்டு.

அந்த பூசை இத்யாதி இத்யாதி கூட‌

கொரோனா முன்

கதவைப் பூட்டிக்கொள்கிறது.

கொரோனா

ஒரு மரணத்தின் அடையாளம் அல்ல.

அதன் கனம் சிலுவையின் கனம் தான்.

அதில் 

நசுங்கிக்கொண்டவர்களும்

நசுங்கி மீண்டவர்களும்

நம்மீது ஒரு கூர்மையான‌

நம்பிக்கையை ஆணி அடிக்கிறார்கள்.

ஏசுநாதரும் ஒரு ஜூடாவை

மடியில் கட்டிக்கொண்டே தான்

சொற்பொழிவுகள் ஆற்றினார்.

ஆத்திகமும் நாத்திகமும்

ஒன்றை ஒன்று

கங்காருக்கள் போல‌

குட்டிகளை சுமந்துதான் 

ஓடுகின்றது.

நமது ஞானமற்ற ஞானப்பயிற்சிகள்

எல்லாம்

இதன் மூலமே நடக்கிறது.

இந்த மரணங்கள் நம்மை

அமிழ்த்திவிடும் ஆழங்கள் அல்ல.

இதிலிலிருந்து

கோடி கோடி ஜன்மங்கள்

முளைக்கப்போகின்றன.

மனிதனின் அறிவு நுட்பமும்

அவனது

முனை முறியாத முனைப்பும்

நம்பிக்கையுமே

அவ்னது கர்த்தர்களாக‌

அவனுக்குள் 

கூடு கட்டிக்கொண்டிருக்கின்றன.

ஒரு கவிதை என்பது

இன்னொரு கவிதையால் தான்

வெளிச்சம் ஏற்றப்பட வேண்டியிருக்கிறது.

அதனால் தான்

இந்த கவிதைகளும் பேனாக்களும்

ஓய்ந்து போய் உட்காருவதே இல்லை.

இதன் மூச்சான எழுத்துகளுக்கு

எந்த ஆக்சிஜன் சிலிண்டரும்

வரம்பு கட்ட முன் வருவதில்லை.


____________________________________ருத்ரா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக