வியாழன், 10 ஜூன், 2021

ஓர்மைகள் அற்று...

 ஓர்மைகள் அற்று...


_________________________________________ருத்ரா






நான் தினமும் உன்னை வணங்குகிறேன்.


உன்னைக்கேட்டேனா? என்கிறாய்.


உனக்கு உண்வாய் நைவேதியம் படைக்கிறேனே


கல் வயிற்றுக்கு ஏது பசி என்கிறாய்.


உன் புகழைப்போற்றித்தானே ஆயிரம் நாமம் சொல்லுகிறேன்.


ஆயிரம் விதமாய் உன் நாக்கு சுழல்வதில் என்ன பயன்?


அப்படியென்றால் போ! எனக்கு கடவுள் வேண்டாம்.


அப்படிச்சொல்லியே 


இந்தக் கல்லை நீ பிடித்துக்கொண்டு தானே நிற்கிறாய்.


எதுவுமே இல்லாததை யாருமாகவும் இல்லாததை


நீ ஏன் பிடித்துக்கொண்டு இருக்கிறாய் ?


அப்படியென்றால்


என்னை ஆட்கொள்ளுவது நீ இல்லையா?


ஹா..ஹா..ஹ்ஹா


ஓ! அந்த ஒன்றியம் பற்றி சொல்கிறாயா?


கடவுள் கூட அப்படிச்சிரிப்பாரா என்ன?


மனிதன் கடவுள் ஆவது.


கடவுள் மனிதன் ஆவது.


இதைச்சொல்கிறாயா?


வேடம் போடாதே மனிதா?


அந்த பிணம் எரிக்கிறவனாக அல்லது


அந்த மலக்குவியல் அள்ளுகின்றவனாக‌


எத்தனை தடவைகள் உன் முன் வந்திருக்கிறேன்.


கடவுள் மனிதன் ஆவது தானே அது.


அப்போது என்னை உயிரோடு எரித்து விடுகிறாய்.


"மங்கள்யான்" என்று


நுட்பமான ஏவுகணை எந்திரங்கள் எல்லாம் கண்டுபிடித்து


தேடிப்பிடித்து சமஸ்கிருதத்தில்


பெயர் சூட்டி 


செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கிறாயே


மலம் அள்ள பிணம் எரிக்க‌


ஏன் இன்னும் நீ எந்திரங்கள் கண்டுபிடிக்கவில்லை?


மானுடத்தை புழுவினும் கீழாக வைத்து


நசுக்கி நசுக்கி இன்பம் காணுவதில் தான்


உங்கள் நாபிக்கமலத்துப் பிரமமன்


உட்கார்ந்திருக்கிறாரா?


சாதி அடுக்குகளை வரட்டி போல்


அடுக்கி வைத்துக்கொண்டு


என்னை அந்த சிதையில் 


வைப்பதற்குth  தானே துடிக்கிறாய்.


மணிஅடித்து மந்திரக்கூச்சல் கிளப்புவதால்


நீ தான் "கடவுள் புத்திரன்"என்று


என்னிடமே தினமும் கதை அளக்கிறாயே!


இது என்ன சூழ்ச்சி?


பிரம்மாண்டமான நெருப்பாகிய என்னை


பூசனை செய்ய‌


என்னிடமிருந்தே என்னைக்கொஞ்சம் கிள்ளி எனக்கு


கொடுப்பதாய்


ஸ்லோகம் எல்லாம் சொல்கிறாயே..


ஆனால் அந்த தீபாராதனைக்குள்


என்னைப்பொசுக்கிய சாம்பல் தானே இருக்கிறது?


எத்தனை குடிசைகளில்


எத்தனை தாழ்ந்த சாதிகளில்


நான் கிடந்திருப்பேன்.


அந்த என்னை உயிரோடு கொளுத்திவிட்டு


இந்த சம்போ மகாதேவா கூச்சல் எல்லாம் என்ன?


அய்யோ!


கடவுளே...


இப்போது தான் என் உடம்பெல்லாம்


பற்றி எரிகிறதைப்போலவே இருக்கிறது.


போதும்.


இந்த "பொ(ய்)ம்மை விளையாட்டு..


எனக்கு கடவுளும் வேண்டாம்.ஒண்ணும் வேண்டாம்.


மனிதன் மனிதனாக வாழவேண்டும்...


கடவுளின் மரணத்தை


கொண்டாடுவதா கடவுள் பக்தி?


பக்தன் பூமியில் விழுகின்றான் 


ஓர்மைகள் அற்று.


________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக