வியாழன், 31 டிசம்பர், 2020

சுகப்பிரசவம் தான் .....

 சுகப்பிரசவம் தான் 

டாக்டர் சொல்லிவிட்டார்

இன்னும் இரண்டு மணி நேரத்தில்.

சரி தான்.

ஆனால் சுகம் என்ற‌

அந்த சொல்லில்

கன்னிக்குடம் உடைந்த போதும்

எத்தனை கண்ணீர் வெள்ளங்கள்

அந்த கடிகார முள்ளில்

சொட்டிக்கொண்டு இருந்தன?

அதனிடையேயும்

எத்தனை மகிழ்ச்சி ரோஜாக்களின்

மகரந்தங்கள்

தூள் பரப்பி வந்தன?

நம்பிக்கை 

நம்மை வருடிக்கொடுக்கும்

மயில் பீலிகளாய் இருந்த போதும்

மறைந்து உறுத்தும்

முட்களும் பிரகாசம் காட்டுகின்றன!

ஆம்.

ஹேப்பி நியூ இயர் !

ஹேப்பி நியூ இயர் !!

ஹேப்பி நியூ இயர் !!!


அந்த தடுப்பூசிக்குழல்கள்

நம் இனிய பூபாளங்களின்

புல்லாங்குழல்களாய்

அதோ அந்த சன்னல்வழியாய்

ஒலிக்கப்போகின்றன.

சூரியன்கள் பின்னால் அணிவகுக்கும்

தினமும்

இனி

மகிழ்ச்சியின் ஒளிப்பிழம்பாய்.

கொரானாக்கள்

பொறாமையில் வெந்து சாகட்டும்.

ஓ!மனிதன் எனும்

இந்த மகத்தானவனின் பிம்பம்

தான் கடவுள் என்பதா?

....என்று

அந்த முள்ளு மண்டையன் 

தலையைப் பிய்த்துக்கொள்ளட்டும்!

"இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!"

_________________________________ருத்ரா

(இரவு மணி 10.01 ...31.12.2020)

மரச்சுத்தியல்கள்

 மரச்சுத்தியல்கள்

=================================================ருத்ரா


ஒரு மீள்பதிவு. 

(நீதி அரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களுக்கு 

ஓர் அஞ்சலி)




ஒரு நூற்றாண்டு 

பயணம் செய்த களைப்பில்

கண் அயர்ந்த பெருந்தகையே!

அன்று ஒரு நாள் வீசிய‌

அரசியல் புயலில்

உன் நீதித்தராசுகள் ஆட்டம் கண்டபோது

ஒரு புதிய மைல் கல்

நட்டுச்சென்றாய்.

அரசியல் சட்டத்தை எல்லாம்

அந்த "இருபது அம்ச" வெள்ளம்

அடித்துக்கொண்டு போனதன்

மௌன சாட்சியாய் நீ இருந்தபோது

உனக்குள் ஒரு வேள்வி

கொளுந்து விட்டு எரிந்தது!

ஆம்!

மனித நேயமே பசையற்றுப்போய்

அச்சிடப்பட்டுவிட்டதோ

இந்த "ஷரத்துக்கள்" என்று!

இந்த நாட்டில்

நீதியரசராய் பிடித்திருக்கும் செங்கோலை

சூட்சுமமாய்

இன்னொரு கை 

திசை மாற்றும்

மாயத்திசை எங்கிருக்கிறது என‌

புருவம் உயர்த்தினாய்!

உன் தேடல் இன்னும்

அந்த தராசு முள்ளில்

வெட்டிவைத்த வேதாளம் போல்

தொங்கிக்கொண்டிருக்கிறது.

இந்த நாட்டில்

இதிகாசங்கள் மட்டும் அல்ல‌

நீதி தேவதையின் பக்கங்கள் கூட‌

லட்சக்கணக்கில் தான்.

அதற்குள்

விழுந்து கிடக்கும் ஊசியைத் தேடும்

இந்த பயணம் 

இன்னும் நீண்டுகொண்டு தான் இருக்கிறது.

கறுப்பாகி அழுக்காகிப்

போன பொருளாதாரத்தை

வாக்குச்சீட்டுகளாலேயே

வெளுக்க முடியாத போது

வெறும் அட்டை கனத்த‌

அரசியல் சாசனம் 

என்ன செய்து விடமுடியும்?

இருப்பினும்

இந்த அடர்ந்த காட்டின்

நம்பிக்கை கீற்றுகள்

நீதியின் கூரிய முள்ளில்

கோடி சூரியன்களாய்

கருப்பிடித்து வைத்திருக்கிறது.

துருப்பிடித்த வாதங்களை

தூக்கி எறியும் உத்வேகத்தை

நீ தந்திருக்கிறாய்.

ஓ!நீதியின் காவலனே!

நீதி என்றால்

அது பேனாவின் கீறல் அல்ல!

அது துளியாய் இருப்பினும்

தீப்பொறி தான்

என்று காட்டிய பேரொளி நீ.

சுதந்திரமும் ஜனநாயகமும்

காற்றைப்போல கண்ணுக்குத்தெரியாது.

அதன் அடையாளங்கள் எனும்

அரசு எந்திரங்களில்

ஏன் இந்த அசுரத்தனமான 

கட கடத்த ஒலி?

நீதி என்பது

ரத்தமும் சதையும் கேட்கும்

ஷைலக் அல்ல.

நீதிகளுக்குள்

அடியில் நசுங்கிக்கிடக்கும் 

மனித நீதியும் சமூக நீதியும்

காலத்தால் உறைந்துபோன‌

சம்ப்ரதாயங்களால் 

மிதி பட்டுக்கிடக்கின்றன.

நீதிக்கும் தேவைப்படுகிறது

வர்ணங்களைக் களைந்த ஒரு நிர்வாணம்.

மாண்புமிகு மேதையே

"மகாவீரராய்"

நீங்களும் அந்த தரிசனத்திற்கு

கொஞ்சம்

திரை விலக்கியிருக்கிறீர்கள்.

அந்த மரச்சுத்தியல்களில்

கனமாக கேட்கிறது

உங்கள் மனிதத்தின் ஓசை.


================================07/12/14




ஞாயிறு, 27 டிசம்பர், 2020

மான் உளைக் குடுமி

 மான் உளைக் குடுமி அன்ன‌

கான்செறி அடுக்க‌ம்‌ நெடுதரு வெற்ப‌

ஊண் செறி வட்டில் நெடுநாள் மறந்து

பூண்செறி உடம்பும் நெகிழ்தரக்கிடந்து

ஆம்பல் ஊதி விளையாட்டயரும்

அஞ்சிறார் குழாத்துடன் ஆடல் நனிமறந்து

பளிங்கின் நுண்சிறை நுவல்காழ்த் தும்பி

சிறைகொண்டு சிற்றில் கூட்டும் ஆயம் மறந்து

நின் நினைவின் கூர்வாள் கொடுவரி மின்னல்

தின்றல் செத்தென பாழ்வான் போன்ம்

முன்றில் முடங்கினள் மற்று என் மன்னே.

முந்துறு கதழ்பரிக் கலிமா ஓச்சி

மணித்தேர் விரைய ஒருப்பட்டு வருதி!


______________________________________________ருத்ரா\


பிரிவுற்ற தலைவியின் வாட்டம் போக்க‌

விரைந்து வ்ருவாய் என தோழி தலைவனை

நோக்கிப்பாடியதாய் நான் எழுதிய 

சங்கநடைச்செய்யுட் கவிதை இது.

__________________________________________ருத்ரா



வெள்ளி, 25 டிசம்பர், 2020

தொ.பரமசிவனார்

 தொ.பரமசிவனார்

________________________________ருத்ரா


தமிழ் ஆய்வாளர் என்று

இரண்டு சொல்லில்

இவரை அடக்கிவிடுவது

ஒரு கடைந்தெடுத்த பாமரத்தனம்.

தமிழ் ஏதோ ஒரு சிற்றெரும்பு

கால் கட்டை விரலால் நசுக்கி விடலாம்

என்று கோயில் வழியே ஒரு ஆதிக்கம்

தலை காட்டும் இந்த‌

கால கட்டத்தில்

கோயில்கள் வெறும் 

கற்களின் கூட்டம் அல்ல‌

அது நம் தமிழ் தொன்மையின்

எலும்புக்கூட்டு மிச்சங்கள்.

பக்தி ரசம் வழிதோடும் அந்த‌

காட்டாறு காட்டும் மரபுகளும் வழக்குகளும்

தமிழின் உயிர்த்துடிப்புகள் என்று

காட்டிய பெருந்தகை தொ.ப அவர்கள்.


கடவுள் மறுப்பு என்பதும் கூட‌

கடவுளுக்கு மிகவும் விருப்பமான 

ஒரு பூசனை தான்

என்ற அடிக்கருத்து தான்

இவரது ஆய்வு மரத்தின் அடிக்குருத்து.

மண்ணோடு இயைந்த தமிழர்களின்

வாழ்வு முறைகளில்

வர்ண முறைத் தூசிகளும் புழுதிகளும்

படிந்திருக்கவே இல்லை என்பதே

இவரது நுட்ப நோக்கு.

தமிழ் மொழி 

சடங்கு சம்பிரதாயங்களின்

நீரோட்டத்து அடிமடியில்

சிந்துவெளியையும் கீழடியையும் தான்

கூழாங்கற்களாய் கிடத்தியிருக்கிறது

என்று கண்டு உணர்ந்து

பல நூல்கள் படைத்து 

வெளிச்சம் காட்டியவர் தொ.ப அவர்கள்.


மார்க்சியம் பெரியாரியம் திராவிடம்

என்பதெல்லாம்

மேட்டிமை அறிவு ஜீவிகளால்

தீண்டப்படத்தகாதவையாக‌

கருதப்படும் சூழலில் 

தமிழின் அரிச்சுவடிகளும் அடிச்சுவடுகளும்

அந்த சமதர்ம ஏக்கத்தையும் கனவுகளையும்

ஏந்தியிருந்தாக கண்டுபிடித்தார்.

அவர் படைத்த நூல்களில்

தமிழியல் ஒரு சமுதாய மானிடவியலுக்கு

சாளரங்கள் திறந்து வைத்திருப்பதை

கண்டு புல்லரித்தார்.

"அறியப்படாத தமிழகம்"

"அழகர் கோயில்"

"பண்பாட்டு அசைவுகள்"

போன்று எத்தனையோ படைப்புகளில்

தமிழ் சிந்தும் ஒளியில்

தமிழ் சிந்து வெளியின்

இசிஜி வரிகளைக்காணலாம்.

தமிழின் இதயத்துடிப்புகளுடன்

தன் இதயத்துடிப்புகளையும்

இழைவித்துக்கொண்ட தமிழ் ஆய்வாளர்

நம் தொ.ப அவர்கள்.


அவர் மறைவு ஒரு பேரிழப்பு

என்று மாமூலாக இரங்கலை

தெரிவித்துக்கொள்வதில்

அர்த்தம் ஏதுமில்லை.

அகர முதல என்று ஒலிக்கும்

வள்ளுவம் உள்ளிட்டு

நம் பத்துப்பாட்டு எட்டுத்தொகைகளின்

எல்லா வரிகளும் இங்கே

உலா வரவேண்டும்.

தமிழ்ப்பகை நம்மீது 

ஆதிக்க விரல் நீட்டி

அழிக்கப்பார்க்கும் தந்திரங்கள் யாவும்

தவிடு பொடி ஆகவேண்டும்.

அந்த ஒரு எழுத்து மட்டும் 

"ஆயுத" எழுத்தல்ல!

தமிழ் என்று ஒலிக்கும்

நம் எழுத்து வெள்ளம் அத்தனையுமே

ஆயுத எழுத்துக்கள் தான்.

அவற்றில் நம்மிடம் எப்போதுமே

கூர்மையுடன் ஓர்மையுடன் 

ஒலித்துக்கொண்டிருப்பது தான்

"தொ.ப" எனும் நம்

உயிரெழுத்துக்கள்.

_____________________________________________ருத்ரா


















வியாழன், 24 டிசம்பர், 2020

"தொ.ப"

 "தொ.ப"

_________________ருத்ரா


இவர் யார்?

இந்தக்கேள்வி ஒரு பொறி.

நம் தமிழ்த் தொன்மையின் 

வெளிச்சத்திற்கு

தீக்குச்சி உரசியவர்.

நம் காலடியில் நம் அடையாளங்கள்

எலும்பு மிச்சங்களாய்

சிதறிக்கிடந்ததை

சித்திரம் ஆக்கி சிற்பம் ஆக்கி

நிமிர்த்தி வைத்தவர்.

அழகர் கோயில்..

அறியப்படாத தமிழகம்..

பண்பாட்டு அசைவுகள்..

என்று

இவர் இதயம் இன்னும்

நமக்காகத் துடித்துக்கொண்டு இருக்கிறது.

"எனக்கு கண்ணீர் வேண்டியதில்லை.

நம் தமிழுக்கு சாவு மணி அடிக்கும் முன்

தமிழ் எனும் செம்புயலாய்

சீறி எழுங்கள்"

என்று அவர் சொல்வது மட்டுமே

நம் காதில் விழுகிறது.


____________________________________




ஆயிரம் பிரகாசமாய்...

 ஆயிரம் பிரகாசமாய்...

_________________________________ருத்ரா.


அது என்ன?

காதலிக்கிறேன்

என்று 

சொல்லிவிட உனக்கு

ஆயிரம் யுகங்களா வேண்டும்?


மின்னல் பிரச‌விக்கும் முன்னமேயே

கன்னம் குழித்து சிரித்து

என்னைப்பார்த்தாயே

அதற்குப்பின்னருமா

இந்த வானங்களையெல்லாம் 

சுருட்டி கைக்குட்டையாக்கி நான்

வியர்த்து வியர்த்து வடியும் 

என் முகத்தைத்

துடைத்துக்கொண்டிருப்பது?


உன் இமையின் மெல்லிய 

தூரிகையில்

படபடத்து

கண்கள் வழியே காதலை

ஓவியமாக்கி விட்டாயே

அதன் பின்னருமா

நான்

கை வேறு கால் வேறாய்

முறுக்கி

முகம் திருகி முதுகில் நிற்க‌

ஒற்றைக்கண் கொண்டு

உருண்டையான என் விழிவெண்படலத்தை

ஆம்லெட் போட்டது போல்

ஒரு பிக்காஸோ ஓவியமாய்

அந்த அலங்காரச்சுவரில் 

ஒரு அலங்கோலமாய் நான்

தொங்கிக்கொண்டிருக்க வேண்டும்?


மீன் கொத்தி ஒன்று

தண்ணீரை படக்கென்று குத்தி

வைரச்சிதறல்களை

நீரில் தெறித்தது போல்

"க்ளுக்"என்று

ஒரு சிரிப்பால் 

என்னைக்குத்தி விட்டுப்போனாயே !

அது 

என் இதய ஆழத்துள்

இன்ப நங்கூரம் ஒன்றை

பாய்ச்சி விட்டதே

அதன் பின்னும் நான்

கோடி கோடி மைல்கள் கணக்கில்

நீளமாய் ஒரு தூண்டில் போட்டு

கடலே இல்லாத ஒரு

சூன்யவெளிக்கடலில்

மீன் பிடிப்பதாய் உன் காதலுக்கு

இந்த கரையில் 

நின்று கொண்டிருக்க வேண்டுமா?

அதுவும் 

இது விளிம்பற்ற ஒரு தொடுவானச்சிகரமாய்

என் கனவின் கூர் ஊசியில்

நின்று கொண்டிருக்கவேண்டுமா?

கண்ணே!

உன் சொல் என்று பூக்கும் என்று

இந்த மொட்டை வெளியின் 

மௌன மொழிக்குள்

நெளிந்து கொண்டிருக்கிறேன்.

இதோ இதோ ..என்று

அந்த நட்சத்திரங்கள் போல்

என் மூக்கின் மேல்

முட்டி மோதிக்கொண்டு

உன் ஒளியின் வாசனையை காட்டிக்கொண்டு

நிற்கிறாய்!

என் இருளுக்குள்ளும்

எப்போதும் உன் 

இனிப்பின் பூபாளம் தான்.

உன் விடியல் விரியும் வரை

இந்த அண்டத்தையே பூட்டிக்கொண்டு

வர்ண மண்டலங்களின் நினைப்புகளின்

ஒரு புழுக்கூட்டு ஊஞ்சலில்

ஆடிக்கொண்டிருப்பேன்.

உன் சொல்லின் சிறகு விரிக்கும்

காதலின் அந்த‌

பட்டாம்பூச்சி பட்டென்று வெளிப்படும்

தருணம் 

இந்த கொடுங்காலத்தின்

கன்னிக்குடம் உடைத்துப் பிறக்கும்

என்ற ஒரு மெல்லிய நம்பிக்கையில்

நான் இந்தக்கூட்டில்

அடைந்து கிடப்பேன் கண்ணே!

ஆம்.அடைந்துகிடப்பேன்.

வரும்போது வா!

என் ஆயிரம் பிரகாசமாய்!


_____________________________________


புதன், 23 டிசம்பர், 2020

கால் இடறு கடும்பரல் பாலை

 கால் இடறு கடும்பரல் பாலை

சுரம் கடாத்த அளிமென் தலைவன்

சிலம்பி வலைய சில்முள் மூசு

திரங்கு மரல் மலிந்த சூர்மலிக் கானிடை

நுழைந்துழி ஆங்கு தன்னெஞ்சத்து நுவலும்.

அலர்மழை தோய் அஞ்சிறை இறையவள்

என்னுள் புக்கு தன்னுள் பார்க்கும்

சுடுனெடு பானாள் கொல் உமிழ் கங்குல்

அவள் பூஞ்சேக்கை முளி பெயர்த்து

பாம்புரி செத்து பிணைதரக் காயும்.

பிரிவிடை அடையல் இறந்துபட்டொழியும்

அன்ன அவள் உறும் நிலை என்னையும் 

ஈண்டு துண்டுபடுத்து எடுக்கும் இக்கொடுவாள்

வேண்டேன் ஆயிழை தழூஉம் அவிர் நசை வாட்ட‌

விரையும் மன்னே அவள் ஊர் இன்றே.


______________________________________ருத்ரா


பொருள்வயின் பிரிந்து பாலை வழி ந‌டந்து வரும் 

தலைவன் பிரிவுத்துயரில் மீண்டும் தலைவியை

நோக்கி அவள் ஊர் திரும்பிவிடும் துடிப்பில்

விரைகிறான்.

இதுவே எனது இந்த சங்கநடைச்செய்யுட்கவிதையின்

கருப்பொருள்.

________________________________________________________

புதிய ஊற்று

 புதிய ஊற்று

________________________________ருத்ரா


ஜெருசெலேம் பெத்தலஹேமின்

ஒரு மாட்டுக்கொட்டிலில்

அன்று பனிப்பூ மழையில்

மானிட வாசத்தின்

ஒரு புதிய பதிப்பு 

அச்சிடப்பட்டது.

மனிதனின் தலைக்குமேல்

எப்போதும்

தண்டனை எனும்

மரண மேகமே

கவிந்து கொண்டிருப்பது மட்டுமே

கடவுளின் முகம் ஆக‌

இருந்தது.

அந்த அச்சத்தில்

கடவுள் உதிர்த்த வசனங்கள் எல்லாம்

மனிதன் மீது

நடுக்கங்களாய்

அடர் மழையை அமில மழையாய்

கொட்டிக்கொண்டே இருந்தது.

அன்று 

அந்த மனிதக்குஞ்சு பிறப்பிலேயே

மானிடத்தோற்றத்தின்

உட்குறிப்பு 

ஒரு வெளிச்சமான உலகத்தை

உள்ளடக்கிக் காட்டிவிட்டது.

மனிதா

ஏன் உனக்குள்

பகை வளர்த்து 

தீயாக்கி பொசுக்கிக்கொள்கிறாய்.

"பாவம்" எனும் 

அசுத்தம் கொண்டா

உன்னை சுத்தப்படுத்த முடியும்?

பாவம் என்பது

ஒரு எண்ணம் தானே.

அதற்கு நீ பலியாக்கப்பட்டு

தண்டிக்கப்படவும் 

தேவையில்லையே

நீ மனம் திருந்திவிட்டால்.

அது அகராதியில்

மன்னிப்பு என்ற சொல்லாய்

துளிர்த்து நிற்பதே

கடவுள் என்று இங்கே

மொழி பெயர்க்கப்பட்டு விட்டது.

அன்பு 

என்ற பிரவாகம்

எல்லாவற்றையும் 

உடைத்துக்கொண்டு பெருகும்

ஒரு சொல் அல்லவா!

அதனுள் 

எல்லா மதங்களும்

எல்லா கடவுளும் 

அவர்கள் ஆலயங்களும்

அந்த மணியோசைகளும்

அடைக்கப்பட்டிருக்கின்றன.

கடவுள் வெறும் தண்டனை அச்சம் அல்ல.

கடவுள் தான் மானிட ஊற்று.

மானிடம் தான் கடவுள் ஊற்று.

புரிந்து கொண்டாயா?

இப்போது

இருள் புரிந்து கொண்டது ஒளியை!

ஒளி அணைத்துக்கொண்டது இருளை!


_____________________________________________

செவ்வாய், 22 டிசம்பர், 2020

கறங்கு வெள்ளருவி

 கறங்கு வெள்ளருவி முழங்குதரு முரசின்

மயிர்க்கண் அதிர்ந்து ஒலித்தாங்கு அமைய‌

அடர் கான் உய்த்து அவிழ்தரும் அஞ்சிறைச்

சிறுகருந்தும்பி கல்லெனும் கடுவிருள்

புகுதந்து யாழ கருங்கோட்டுச் சீறியாழ்

நோதகச்செய்தல் அன்ன அவன் நகை செய்யும்.

முன்றில் வேங்கை வீமழை உகுத்த‌

சொரியல் நனைந்து அகம் வெந்த‌

அளிநிலை கூட்டும் எவ்வம் படர்ந்து

தீச்செறீஇ நினைவின் ஆழக்

கிடந்தேன் தோழி கிளர்ந்திட மொழிவாய்.

________________________________________ருத்ரா

இது என் சங்கநடைக்கவிதை.

(காதலின் துயரம் )

வியாழன், 17 டிசம்பர், 2020

இதோ வருகிறேன்.

 இதோ வருகிறேன்.

________________________________ருத்ரா



உன் கண்களைப் பார்த்தேன்.

உன் கண்கள் என்னைப்பார்த்ததையும்

பார்த்தேன்.

அப்புறம் என்ன வேண்டும்?

ஒன்றும் தேவையில்லை.

உள்ளம் பொங்கி வழிந்தது.

கண்களுக்குள் ஏழுகடல்கள்

ஓங்காரம் இட்டன.

அழகிய கடல் பரப்பில்

கடல் காக்கைகள் இங்கு அங்கும்

சிறகடித்துப்பறந்தது

என் இதயப்பரப்பில் சில கீறல்களை

ஓவியமாக்கின.

உன் பார்வைக்குள்

தெரிந்த சிரிப்பு

ஆயிரம் ஆயிரம் ரோஜாக்களை

மழை பெய்தன.

அதற்குள் என்ன அர்த்தம் இருக்கிறது?

பொறுக்கமுடியாத கனமான தருணங்கள்

வண்டுகளாய் குடைந்தன.

அந்த இமைத்துடிப்புகள் கூட‌

உன் பார்வையின் தேன்மழையில்

இனிப்பின் பிரபஞ்சத்தை

பஞ்சுமிட்டாய் பிசிறுகளாய்

என் உதட்டோரம் தூவி

சூடேற்றின.

இன்னொரு முறை

உன்னை நேருக்கு நேராய்..

என் கண்களில் அம்பு கோர்த்து

எய்யப்போகிறேன்.

கண்ணே!

இந்த 

"வர்ம் ஹோல்" வழியே

வேறு பிரபஞ்சம் சென்றுவிடலாம்.

சோற்றுக்கவலை இல்லாத‌

அந்த இடத்தில்

நம் காதலை மட்டும்

பொங்கி சமைத்து 

காதலை மட்டும் 

கண்களால் உண்டு மகிழ்ந்திடலாம்.

இதோ வருகிறேன்

உன் கணகளைத்தேடி!


__________________________________________

சனி, 12 டிசம்பர், 2020

A HOUSE

A HOUSE 

_____________________________RUTHRAA


TO HOUSE OUR DEMOCRACY

AN IVORY TOWER IN REALITY

IS BEING ERECTED!

WELL AND IT IS NICE!

BUT A QUESTION HINGES ON ITS

STRUCTURE WITH A GREAT FEEL.

WHETHER IT IS A TRAP OR

ANOTHER " EVM "

HAUNTED WITH MAGIC SHADOWS IN

BIZARRE HALUCINATIONS OF THE PEOPLE

AND "VOX POPULI" HEARD THERE

IS ALWAYS OFF THE PEOPLE ?

THE PLETHORA OF MARBLE PILLARS

MAY LOOK LIKE

DILAPIDATED SKELETONS OF THE 

PEOPLES HOPES AND SHAPES ...ALAS!

AS IN "HENRIK IBSEN'S" PLAY "DOLL'S HOUSE"

ALL THE VITRUE OF LIFE IS SHOWN

IN THIS HOUSE "A VANITY FAIR"

OF POMP AND SNOB !

 " A LITTLE SQUIRREL"..THUS CALLS 

THE HUSBAND HIS WIFE

"NORA HELMER"    THE POOR TEARFUL SYMBOL

IN THAT PLAY.

METAPHORICALLY  SHE IS OUR  DEMOCARACY.

OUR RULERS PAT THAT SQUIRREL

HAVING ON THEIR LAP BUT WITH

A CHAUVUNISTIC GRIN.

THE PAINFUL PANIC RULES THE ROOST!

SUMMUM BONUM HERE IT IS

A HOUSE OF VOID 

DESISGNED BY THE THEOCRATIC LORDS

SHUFFLING THE NORMS 

WITH ALL FANFARE OF CHARMS AND FORMS

BUT TO HOUSE OUR HOUSE OF CARDS!

____________________________________







 

ஹேப்பி பெர்த்டே டு அவர் பிலவ்டு "ரஜினி"!

 ஹேப்பி பெர்த்டே டு அவர் பிலவ்டு "ரஜினி"!

____________________________________________________ருத்ரா


அன்பான ரஜினி காந்த் அவர்களுக்கு

எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

லட்சக்கணக்கான மக்கள் 

பொழிந்த‌ வாழ்த்துகளின்

அடர் மழைக்கீற்றுகளில்

இந்த மெல்லிய வரிகளும்

எங்கள் இதயங்களுடன்

சுருதி கூட்டடும்.


நீங்கள் நீடூழி நீடூழி வாழ்க.

கன்னடமும் களிதெலுங்கும்

மலையாளமும் சேர்த்திழைத்த‌

யாழ் நரம்புக்கூட்டமே

திராவிட இசையாய் தமிழாய்

திரட்சி பெற்று 

காட்சி தரும் இங்கே!


திராவிடம்

ஒழிக்கப்படவேண்டும்

என்ற 

ஒற்றைப்புள்ளிக்குள்

ஏன் சுருங்கிப்போனது

இவர்கள் சித்தாந்தம்?



ஒரு பேராதிக்கம்

இந்தியாவின் உள் தேசியங்களை

உணவாக்கிக்கொள்ள‌

பசியெடுத்து படையெடுத்து

வருகிறது.

இந்தியாவின் 

மற்ற மொழிகளையெல்லாம்

ஒரே நாவில் சுருட்டிக்கொண்டு

அஸ்வமேத யாகம் போல்

ஒரு "பாஷாமேத யாகம்" செய்ய‌

புறப்பட்டு வருகிறது.

மானிட சமநீதியே அதன் ஆகுதி.

கடவுள் பற்றி கேள்வி எழுப்பும்

மனிதர்களே 

அந்த "யாகத்தில்"

எறியப்படுபவர்கள்.

பிரம்மகோத்ரத்தின்

ஒரே வர்ண மக்களுக்கே

அங்கு மகுடம்!

மற்ற குப்பை வர்ணங்கள்

மக்கி மறைவதே தெய்வ சங்கல்பம்

என்றொரு சாத்திரமே

இங்கு இனி சரித்திரமாகும்

என்ற பேராதிக்கக்கொடியா

இந்த மண்ணில் பறக்கவேண்டும்?

ரஜினி அவர்களே

இப்ப இல்லேன்னா எப்போதும் இல்லை

என்ற உங்கள் சீற்றம்

அந்த பேராதிக்கச் சாத்திரத்தை

தவிடு பொடியாக்க வேண்டும்.

உங்கள் பிறந்த நாளின்

பொன்னான புத்தம் புதிய சிந்தனையாக‌

இது சுடர் பூக்கட்டும்.

மக்கள் இடர் களைய உங்கள்

மனம் ஓர் எழுச்சி கொள்ளட்டும்.

ஹேப்பி..ஹேப்பி அன்ட் 

வெரி ஹேப்பி பெர்த் டே 

டு யு....

அவர் பிலவ்டு "ரஜினி"!!


______________________________________________________





தீவு

 தீவு

‍‍‍_________________________________ருத்ரா


தமிழர்களே!

நீங்கள் இருப்பது

சினிமா பிம்பங்களால்

கட்டப்பட்ட  

தனித்த ஒரு தீவு.

பொன்னுலகம் காட்டுவேன்

என்று

விரல் முத்திரை ஒன்று

உங்களுக்கு

"சூ மந்திரக்காளி" காட்டுகிறது.

இமயமலையே நான் அடிக்கடி

செல்லும் என் வீட்டுப்புழக்கடை

என்று பெருமிதம் கொள்கிறது.

பொய்மை எனும் காற்றடைத்த பலூனை

ஆத்மீக அரசியல் என்று

தோரணங்கள் கட்டி உங்களை

அழைக்கின்றது.

ஊழலை ஒழிப்பதே

என் லட்சியம் என்று

கைகள் ஆவேசமாய் அசைகின்றன.

ஆனால்

தங்கள் மண்டபத்துச் சொத்துவரியை

கட்டமறுத்த போது

நீதி மன்றம்  

அந்த பிடிவாதத்தின் முகத்தில் 

கரி பூசிய‌

அந்த நாற்றம் இன்னும் அகலவில்லை.

உற்றுக்கவனியுங்கள் 

அன்பான தமிழர்களே!

உங்கள் தீவு மெல்ல அசைவது தெரிகிறதா?

அட்டை ராஜ்யம் தள்ளாடுவது 

இன்னுமா தெரியவில்லை?

ஆம்..

விசில் ஒலிகளால் காதுகள் கிழியும்

உங்கள் தீவு..

தீவு அல்ல.

உங்களை மூழ்கடிக்கும்

ஒரு திமிங்கிலத்தின் முதுகு அது?

மதவெறிக்கடலில் திளைத்துக்கிடக்கும்

அதன் திறந்த வாய்களில்

உங்கள் 

விடிவு இல்லை

முடிவு மட்டுமே நிச்சயம்.

ஓ! தமிழர்களே

நீங்கள் 

விழுங்கப்படும் முன்

விழித்துக்கொள்ளுங்கள்!


_______________________________________











வெள்ளி, 11 டிசம்பர், 2020

நெஞ்சு பொறுக்குதில்லையே


நெஞ்சு பொறுக்குதில்லையே

‍‍‍‍‍______________________________________ருத்ரா


கவிப்புயல் பாரதியே!

உன் நினைவு எங்களுக்கு

இன்னும் தோட்டாக்கள் தான்.

துப்பாக்கிக்குள் போட விரும்பாத‌

தோட்டாக்கள் தான்.

அந்த மதவெறியர்கள் 

நம் மகாத்மாவின் மார்புப்பிரதேசத்தை

தோட்டாக்களால் துளைத்தபோதும்

எங்களுக்கு அந்த துப்பாக்கிகள்

காலியாகத்தான் இருக்கிறது.

அன்பு அறம் மானிடநேயம் சமுதாய நீதி

இவற்றால் 

அந்த துப்பாக்கிகளைத்துடைத்து

ஆயுத பூசை மட்டுமே

கொண்டாடி கொண்டிருக்கிறோம்.

ஆயினும் வெறி பிடித்த‌

சாதி மதப்பிசாசுகள்

அடித்தட்டு மக்களையே அடித்துப்போட்டு

உரமாக்கி அதில் அவற்றின்

உன்மத்தக்கொடிகளை

பறக்க விட்டுக்கொண்டிருக்கின்றன.

ஓ!பாரதி இந்த வேடிக்கையைப்பார்த்தாயா?

நீ எங்கள் தமிழ்க்கவிஞன் தான்.

எங்கள் எரிமலைக்கவிஞன் அல்லவா நீ!

ஆனால் 

உன் கவிதை நூல்களைக் கவனியாத

இவர்கள்

இன்று உன் வேறு ஏதோ 

ஒரு நூலைப்பார்த்து

உனக்கு பல்லக்குத்தூக்கி

பளபளப்பாய் விழா எடுகிறார்களே!

அந்த வேடிக்கைக்குள்

நம் நெஞ்சுகள் வெடிக்கும் வேதனைகளே

நிரம்பிக்கிடக்கின்றன.

"செந்தமிழ் நாடெனும் போதிலே..."

என்று எங்களை

கிளர்ச்சி கொள்ள வைத்தாயே

அந்த வெளிச்சமே எங்களுக்குள்

ஆயிரம் சூரியன்களை 

பிரசவிக்கச்செய்கின்றன.

அதன் மீது இந்தி எனும் 

பஞ்சுமூட்டைகள் கொண்டு 

போர்த்திக்கொண்டிருக்கிறார்கள். 

"நெஞ்சு பொறுக்குதில்லையே..

இந்த நிலைகெட்ட மனிதர்களை

நினைந்து விட்டால்...."

எங்கள் யுகங்களின் இமையுயர்த்த வந்த‌

கவி இமயமே!

உன் வரிகள் எங்கள்

விடியலின் விழிகள்.

தமிழ் வாழ்க!

பாரதியின் விடுதலை மூச்சும்

எங்களுக்குள்

சக்தி பாய்ச்சட்டும்!


____________________________________________________




 

வியாழன், 10 டிசம்பர், 2020

இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது!

 இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது!

_____________________________________________ருத்ரா

பிரம்மம் என்றால் என்ன?
இந்தக் கேள்விக்கே
கிழடு தட்டி
ஆயிரம் ஆண்டுகளுக்கும்
மேல் ஆகிவிட்டன.
பிரம்மம் என்றால் தெரியாது
என்பதே
அர்த்தம் ஆகிப்போனது.
பிரம்மத்தை அறிந்து விட்டேன்
என்றால்
அது பிரம்மம் இல்லை.
ஏனென்றால்
அறிவது பிரம்மம் இல்லை.
அறிந்து கொள்ளப்படுவதும் பிரம்மம் இல்லை
என்பதே பிரம்மம்
என்று பாஷ்யங்கள் கூப்பாடு போடுகின்றன.
அறிவு என்றால் என்ன‌
என்ற‌
ஒரு அறிவு உண்டு.
அந்த "அறிவை"க்கொண்டு
கொஞ்சம் சுரண்டிப்பார்க்கலாம்
என்று
பிரம்மத்தைத் தொட்டவர்கள்
காணாமல் போய்விட்டார்கள்.
அதாவது
அந்த அறிவு எனும் செயலியை
சுமந்து கொண்டிருக்கும்
மனம் என்பது
தொலைந்தே போய்விட்டது.
கடவுளைத் தேடு.
ஆனால் கடவுளை அறிந்துவிட்டேன்
என்று சொன்னால்
நீ
காணாமல் போய்விடுவாய்.
இங்கு தானே இருந்தது.
இங்கு தானே இருக்கிறது.
என்று
சொல்லிக்கொண்டே இருந்தால்
ஒரு எதிரொலி கேட்கும்.
"நான் இல்லை.
நான் அது இல்லை."என்று

ஒரு ஒலி கிளம்பி வந்து
நம்மிடம் கேட்கிறது
கடவுள் யார் என்று?
மனிதா! உன்னிடம் தானே
அறிவு இருக்கிறது!
அறிந்து சொல் என்று கேட்கிறது.
கடவுளா? அப்படியென்றால் என்ன?
கேள்விகள் தான் கடவுளா?
அந்தக்குரல் சிரித்துக்கொண்டே
மறைந்து விட்டது.

"கடவுளே!"
என்றேன்.
என்னைக்கூப்பிடாதே.
நான் இல்லை என்று
நீ
புரிந்து கொள்ளத்தான்.
கடவுள் என்ற சொல்
உன் மீது வீசப்பட்டு இருக்கிறது.
அய்யோ!
மீண்டும் கடவுளே!
என்றேன்.
இல்லை என்ற எதிரொலி தான்
இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது!

_____________________________________________________________________

திங்கள், 7 டிசம்பர், 2020

வசந்தம் வரட்டும்

 வசந்தம் வரட்டும்

__________________________________ருத்ரா


என் உள்ளத்தில் கோவில் கட்டினேன்.

பளிங்கு மண்டபம் அமைத்தேன்.

கருவறை ஒன்றில்

ஒரு கீற்று வெளிச்சம் மட்டும் தெரிய‌

சிலை ஒன்றும் அமைத்தேன்.

அது என்ன சிலை?

அதன் அடையாளம் என்ன?

எதற்கு இது?

கும்பிடவா?

இல்லை இந்த‌

அடையாளமற்றதிலிருந்து

பல அடையாளங்களை பெயர்த்தெடுக்கவா?

இந்த‌ நிலம் தோன்றி

கடல் தோன்றி

வானம் எனும் திரை தோன்றி

அதில் பிரபஞ்சசித்திரங்கள்

ஆயிரம் ஆயிரம் திட்டுகளாய் தோன்றி

என்ன சொல்லிக்கொண்டிருக்கின்றன?

எதற்கோ 

என்னை பயமுறுத்துகிறது.

நடுங்கி கிடுகிடுத்து

நான் நா உளறுகின்றேன்.

ஓங்கரிக்கும் ஓசைச்சிதிலங்களில்

உருவமற்ற‌

வாக்கியங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன.

அவை குவிகின்றன.

பிணக்குவியல்களாய்!

உயிர்ப்பிஞ்சு எதேனும்

உள்ளிருக்குமோ?

உள்ளிருந்து

நசுங்கியதாய் ஒரு ஒலிப்பிஞ்சு

காற்றில் கசிகிறது.

அது

என் அச்சத்தின் முதல் அகரம்.

இதையா

கடவுள் என்று

என் இதயப்பீய்ச்சல்களில்

இது காறும் 

அச்சடித்துக்கொண்டிருக்கிறேன்!

உடல்கள் உடல்கள் உடல்கள்

கடல்கள் போல்.

அவை மிதக்கின்றனவா?

ஒன்றையொன்று பிய்த்து தின்க‌

பரபரக்கின்றன.

குடல்களும் ரத்த நாளங்களும்

காலங்கள் தோறும்

கண்ணுக்கே தெரியாத ஒரு 

ஆலமரத்தின் விழுதுகளாய்

நிலம் தொட்டு நிலம் தொட்டு

மண்புழுதியில்

குங்குமம் சந்தனம் மற்றும்

சேறும் சகதியுமாய்

வேத வியாக்கியானங்கள்.

மனிதம் என்பதன்

வரியின் ஒளி

மொத்தமாய் ஒரு இருட்டின் பிழம்புக்குள்

அழுந்திக்கிடக்கிறது.

அங்கே இமைகள் அவிழும் வரை

இருட்டே இங்கு

புசிக்கப்படுகிறது.

பூசனை செய்யப்படுகிறது.

கைகுவிக்கும் 

விரல்களின் எலும்புக்குச்சிகளில்

இலைகள் நீட்டும் பொழுது

அந்த‌

வசந்தம் வரட்டும்!

____________________________________________


ஞாயிறு, 6 டிசம்பர், 2020

கண்ணாடி

 


கண்ணாடி சொன்னது.

"முகம் மட்டும் தான் காட்டுகிறாய்.

உன் மனம் மறைத்து நிற்கிறாய்."

எனக்கு கோபம் வந்தது.

ஒரு குத்து விட்டேன்.

கண்ணாடி சில்லு சில்லாய் ஆனது.

நூற்றுக்கணக்கான சில்லுகளில்

இப்போது

என் மனம் தெரிந்தது.


______________________

ருத்ரா

சனி, 5 டிசம்பர், 2020

தேடிப்பார்க்கிறேன்

 தேடிப்பார்க்கிறேன்

___________________________________ருத்ரா



எத்தனை தடவை தான்

என் கற்பனைச்சிறகுகளை

உன் சிறகுகளில் ஏற்றிக்கொள்வது?

என் எண்ணத்தின் 

வண்ணங்களையெல்லாம்

உன் மீது கொட்டிக்கவிழ்ப்பது?

என் மனதை 

படபடக்கும் உன் மெல்லுடலில்

ஊஞ்சல் கட்டி ஆடுவது?

நான் சும்மா இருக்கும் போது கூட‌

என் மூளை வனத்தில்

உன்னை பல மில்லியன்களாய்

மொய்க்க விடுவது?

இன்று 

இக்கணம் 

பார்த்த நீ

அடுத்த கணமே

இறகுக்குவியலாய்

மறைந்து சிதறலாம்.

ஆனாலும் நீ

என்னுள் 

சிறகடித்துக்கொண்டிருக்கிறாய்.

இந்த சிறகுப்புயல்களெல்லாம்

ஒரு நாள் 

ஓய்ந்தே போய்விட்டது.

அவளைக்கண்டு காதல் கொண்டு

கல்யாணம் எனும்

கூடு கட்டிக்கொண்ட பிறகு

இந்த 

வானம் எல்லாம் எங்கே போயிற்று?

உன் சிறகுக்கூட்டம்

அவிழ்க்கும் வண்ண மழையெல்லாம்

எங்கே? எங்கே?

பட்டாம்பூச்சியே! 

காலே இல்லாமல் நீ பதித்த‌

கால் தடங்கள் யாவும்

எந்த கல்லறையில் கிடக்கின்றன?

வாழ்க்கைப்பாறாங்கல்

நசுக்கி கூழாக்கும்

அந்த வைரநிழற்சுவடுகளில்

நான் தேடிப்பார்க்கிறேன்

என் கவிதைகளின் 

உயிரெழுத்துக்களையும் 

மெய்யெழுத்துக்களையும்.


___________________________________________





சிலுவையிலிருந்து ஒரு குரல்

 சிலுவையிலிருந்து ஒரு குரல்

_____________________________________ருத்ரா



இந்த தமிழகத்தை ஆண்டவனாலும் 

காப்பாற்ற முடியாது 

என்று ஆண்டவனை அழைத்த‌

ரஜினி 

இப்போது புரிந்து கொண்டிருப்பார்

அந்த ஆண்டவனையே 

அந்த ஆண்டவன் காப்பாற்ற முடியாது

என்று.

ஏனெனில் 

மானிட சமநீதியின் மனசாட்சிகளை 

கொல்லும் செயலை

ஆத்மிக அரசியல் என்று முத்திரை காட்டச்சொல்லி

அந்த ஆண்டவனின் முதுகில் குத்தும்

செயல் அல்லவா இது

என்று 

ரஜினி அவர்கள் மனம் நொந்ததன் 

வெளிப்பாடு தான்

என் உயிர் போனாலும் கவலையில்லை

என்ற அவர் பிரகடனம்.

அவர் இதயம் 

அந்த நெருக்கடியாளர்களின்

"தட்டில்" பறித்து வைக்கப்பட்டு விட்டது.

அதன் துடிப்புகளும் குரல்களும்

இனி

அவர்களின் உதட்டசைவுகளே.

தமிழர்களே என்னை மன்னியுங்கள்.

ரஜினி அவர்கள் மனத்துக்குள் 

இப்படித்தான் சொல்லியிருந்திருப்பார்.


இப்போது அந்த‌

தேவகுமாரனும்  இப்படித்தான் சொல்லுவான்.

தமிழர்களை சிலுவையில் ஏற்றத்துடிக்கும்

இந்த தமிழ் எதிரிகளின் கையில்

இந்த ரஜினி சிக்கிக்கொண்டிருக்கும்

இந்த வரலாற்றின் வக்கிரநிகழ்வுகளுக்கு

காரணமானவர்களை

பிதாவே நீங்கள்

ஒரு போதும் மன்னிக்கத்தேவையில்லை.


___________________________________________












வெள்ளி, 4 டிசம்பர், 2020

அன்பான ரஜினி அவர்களே!


அன்பான ரஜினி அவர்களே!

____________________________________ருத்ரா



வாழ்த்துக்கள்.

கடைசியாக உங்கள் பையிலிருந்து

பூனைக்குட்டியை எடுத்து

வெளியே விடும் 

"மாதத்தை"குறித்து விட்டீர்கள்.

அந்த "மியாவ் மியாவ்" குரலை

இந்த மாதக்கடைசியில் 

எழுப்புவதாக வேறு

பிரகடனம் செய்து விட்டீர்கள்.


இந்த தமிழர்கள் 

உங்கள் உயிரை கேட்கவில்லை.

இவர்களின் உயிரினும் மேலான‌

இவர்கள் உரிமைகளை

பலியாக கேட்காதீர்கள்.

திராவிடம் வேறு தமிழ் வேறு இல்லை.

கடல் கடந்து புகழ் பரப்பிய 

பண்டைத்தமிழன்.....

திரைமீள்வோன் எனும்

அந்த தமிழ் மறவன்.....

அவர்கள் ஒலிப்பில்

த்ரமீளன் ஆகி

த்ராவிடன் ஆகி தமிழனும் ஆகினான்.

அப்படியிருக்க‌

"திராவிடன்" என்றாலே

திராவகமாய் 

நீங்கள் எரிச்சல் அடைவதன்

மர்மம் என்ன? மாயம் என்ன?

ஆத்மீகம் எனும் சாந்து பூசி

தமிழ் விடுதலை உணர்வுக்கு

சவ அடக்கம் செய்யவா

எல்லாவற்றையும் மாற்றுவோம் என்று

கிளம்பியிருக்கிறீர்கள்?

திராவிடம் என்றால் தமிழ்.

தமிழ் என்றால்

மானிட இயலின்

மாண்பு என்று பொருள்.

அந்த மாண்புக்குள் அது 

சாதிகள் அற்ற சம நீதியின்

சமுதாய அறம் என்று பொருள்.

அந்த அறத்தொடு நிற்றல் என்றால்

மனிதனை 

மனிதனே பலி கேட்கும்

மனு நீதிக்கு சாவு மணி அடிப்பதே

என்று பொருள்.

உங்கள் ஆத்மீகம்

நான்கு வர்ணமெட்டில் 

அந்த ஆதிக்கக்கோட்டையின்

ஆலய மணியாக 

எதிரொலிப்பது எங்களுக்கு

இப்போதே கேட்கிறது.

தங்கள் தோள்களில் மூட்டை மூட்டையாக‌

ஊழலை வைத்துக்கொண்டு

ஒரு ஊழல் எதிர்ப்பு ஆயுதம் கொடுத்து

உங்களை இவர்கள் 

களம் இறக்கலாம்.

ரகசியமாய் உங்கள் முதுகில்

ஒரு கத்தியின் முனை ஒன்று

உரசிக்கொண்டிருக்க‌

இந்த திராவிடத்தை வேரறுக்க என்று

இவர்கள் உங்களுக்கு

ஒரு அட்டைக்கத்தி தரலாம்.

கத்தி தான் அட்டையே தவிர‌

அதில் சொட்டும் சூழ்ச்சியின் ரத்தம்

நிஜமே! நிஜமே தான்!!

தளபதியாய் நடித்த உங்களுக்கு

இரு தளபதிகளாய் 

அருகருகே நிற்பதே

எங்கள் உரிமைக்குரலை நசுக்கப்போகும்

ஒரு இயக்கத்தை 

கட்டியம் கூறிக்கொண்டிருக்கிறது.

தமிழும் தமிழகமும்

ஆரியத்தால் வீழ்ந்துபோகும்

காட்சிகளுக்கு 

ஒத்திகை பார்த்து 

ஒத்தடம் கொடுத்து

ஏமாற்றப்போகும்

ஒரு தந்திரகட்சியாக‌

உங்கள் கட்சி ஆகி விடக்கூடாது

என்பதே எங்கள்

விருப்பமும் வேண்டுகோளும்.

வாருங்கள் !

எங்களோடு நின்று

இந்த தமிழையும் தமிழகத்தையும்

மதம் எனும் தீ வெறி ஏற்றி

அழித்திட நினைக்கும் சக்திகளிலிருந்து

காப்பாற்ற கை கோர்த்து வாருங்கள்.

வருக! வருக!!

ரஜினி அவர்களே 

வருக! வருக!!



_____________________________________________