கொம்புகளின் அரசியல்
===================================================ருத்ரா
சிந்து வெளி கால முத்திரையிலிருந்தே
காளை வடிவத்தில்
தமிழனின் புறநானூறும் கலித்தொகையும்
சுவடு பதித்து விட்டது.
ப்ளூ க்ராஸ் என்று
புசு புசு
பொமரேனியன்களுக்கும்
வெல்வெட் சப்பைமூக்கு
ஒட்டு நாய் குட்டிகளுக்கும்
கட்டில் மெத்தை போட்டு
பராமரிக்கிற அறிவு ஜீவிகளே
மலைப்பாம்பு குட்டிகளையும்
ஒட்டியாணமாயும்
சங்கிலியாயும் மாட்டி
அழகு பார்த்துக்கொள்பவர்களே
தொன்மை இனம்
பழங்குடிகளின் மொழி
அதன் மண்வாசனை
இவற்றின்
கருவூலங்களை காப்பாற்ற எண்ணியதுண்டா?
பண்டை இனமான தமிழ் இனங்களின்
இதயத்துடிப்புகளை
உங்கள் நெஞ்சில்
வரலாற்றியல் எனும் ஸ்டெதஸ்கோப் வைத்து
அந்த நைந்த ஒலிப்பிஞ்சுகளை
மொழிப்பெயர்த்த துண்டா?
ஒட்டு மொத்த ஐ.நா வும்
அந்த லட்சம் பிணங்களையும்
அலட்சியம் செய்த
ஒரு மோசமான மனசாட்சிப் படுகொலையின்
அடையாளம் தானே
ஈழ தேசத்தின் ஈனக்குரல்கள்.
தமிழ் இனப்பண்பாட்டுக்கூறுகள்
மாறி மாறி வந்த
இந்திய ஆட்சியாளர்களுக்கு
இன்னும்
உறுத்திக்கொண்டு தான் இருக்கின்றன.
அதன் வெளிப்பாடே
விளையாட்டுக்காளைகளை
விஷமத்தன பட்டியலில் சேர்த்தது.
தமிழ் முதுகில் குத்துவதற்கு
சில மேட்டுக்குடித்தமிழர்களும்
துணை போயிருக்கலாமோ
என்று நினைக்கையில்
தமிழர்களின் ஒளியை விழுங்கிவிட
மீண்டும் ஒரு "இருண்டகாலத்தின்"
சூரிய கிரகணம் வந்திடுமோ
என அச்சம் வருகிறது.
தமிழர்கள் கொம்புகள் இல்லாத
மோளை மாடுகளாய்
பரிணாமம் அடையப்போகும்
கடைசித்தருணம் இது.
தமிழா! விழித்துக்கொள்!
மாற்றான் தோட்டத்து மல்லிகையை
பார்த்துக்கொண்டே
உன் விழித்தாமரைகளை
குருடாக்கிக்கொள்ளாதே.
இது வெறும் கொம்புகளின் அரசியல் அல்ல.
நம் குமரிக்கண்டத்து தமிழுக்குள்
குமுறும் தமிழும் குமிழியிடுகிறது
என்பதை புரிந்து கொள்.
======================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக