கல்லிலே ஒரு காளை
=======================================================ருத்ரா
விழுவது தெரிந்தே
நுனிக்கொம்பிலிருந்து கொண்டு
அடிக்கொம்பு வெட்டினார்கள்.
விழுந்தது அவர்கள் அல்ல
நாமும் நம் பண்பாடும் தான்.
"அறிவிக்கை" என்பது கண்துடைப்பு ஆனது.
எதிர்பார்த்தது போல்
தடை வந்தது.
கேடயங்களாய் கருதப்படும்
சட்டங்களே கோடரி ஆனது...மக்களின்
சத்தங்களும் வெட்டப்பட்டு
வீழ்ந்து போயின.
விலங்குகளுக்கு
"கிளிசரின்" கண்ணீர் விட்டவர்கள்
தமிழன் உணர்ச்சியில் எண்ணெய் விட்டார்கள்.
எரிகின்றது!
தமிழனின் தன் மானம்.
கல்லில் கூட
காளை திமிர்த்து தான் நிற்கிறது.
இந்த தமிழன் அல்லவா
மரத்துப்போனான்,
அந்த "காளைக்கு"
வடையும் ஜிலேபியுமாய் முறுக்குமாய்
மாலையிட்டு
குடம் குடமாய்
பால் ஊற்றிக்களிக்கின்றான்.
கோவில்களில்
நந்தியின் காதில் கிசு கிசுத்து
கும்பிடுவான் தமிழன்.
யாராவது ஒரு தமிழன்
"இந்த ஜல்லிக்கட்டுக்காவது
உயிர்த்து வா"
என்று என் காதைக்கடிப்பான்
என்று எதிர் பார்த்தேன்.
வழக்கமான பிதற்றல்கள் தான்.
"என் கூரையைப் பிய்த்து
பொன் மழை பெய்யட்டும்"
"என் மகளுக்கு
என் சாதியிலேயே
என் மதத்திலேயே
கை நிறைய சம்பாதிக்கும் வரன்
அமையட்டும்."
"அடுத்தவன் தலையை
நசுக்கினாலும் பரவாயில்லை
குத்தகை ஒப்பந்தங்கள்
கோடி கோடியாய்
குவியட்டும்"
"அடச்சீ! போங்கடா!
உங்கள் வேண்டுதல்களும்
நேர்த்திக்கடன்களும்"
காளை காதுகளை
மடக்கிக்கொண்டது
யாருடைய கண்ணுக்கும்
தெரியவில்லை.
இந்த மந்தைகள்
"மக்களாய்" பரிணாமம் ஆகும் வரை
அந்தக்காளையும்
அந்தக் கல்லிலேயே இருக்கட்டும்.
==============================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக