திங்கள், 4 ஜனவரி, 2016

வெள்ளமோ வெள்ளமோ (6)



வெள்ளமோ வெள்ளமோ  (6)


ஜனநாயகம் வாழ்க!
===================================================ருத்ரா

வெள்ளம் வடிந்தது.
இவர்கள்
கள்ளம் தெரிந்தது.
இவர்கள் உள்ளமும் புரிந்தது.
தண்ணீர்ப்பூதம் விழுங்கிய பிறகு
சிமிண்டுக் கட்டுமான‌
எலும்பு மிச்சங்கள்.
நசுங்கிய‌
இரு சக்கர வாகன‌ங்களும்
நான்கு சக்கர வாகனங்களும்
மெக்கானிக் மருத்துவர்களுக்கு
காத்திருக்கும் பட்டியலில்
முடங்கி யுள்ளன.
மின் பதன சாதனங்களுக்கும்
தொலைக்காட்சிப்பெட்டிகளுக்கும்
ஏன் என் செல்லங்கள்
தன் உயிரையே வைத்திருக்கும்
அந்த டெட்டி பேர் புசு புசுக்குட்டிகள்
உட்பட‌
எல்லாவற்றிற்கும்
கருமாதி கூட முடிந்து விட்டது.
இதற்கு இழப்பீடாம்..
அதற்கு மதிப்பீடாம்...
இன்னும் காப்பீடாம்...
மீண்டும் வெள்ளம் கோடி கோடிகளில்.
வெள்ளத்தால் சிதலமானவர்கள் மீது
தேர்தல் சித்திரம்.
உரியவர்களின் இழப்பும் தவிப்பும்
நேர் செய்யப்பட வேண்டும்.
இலவசங்களின்
கனமழை மற்றும் வெகு கனமழை
என்று
இவர்களின்
தேர்தல் வானிலை அறிவிப்புகள்
கொடூரமாய் ரெக்கை விரிக்கிறது.
வெள்ளம் என்ற கொடூரம்
வாக்குப்பெட்டியை
நிரப்பிக்கொள்ளும்
தீனி ஆனது.
ஜனநாயக சிந்தனையோ
பட்டினியில்
ஒவ்வொரு தடவையும்
உயிரை விட்டது.
எல்லாம் கொண்ட்டாட்டம் ஆனது.
வாக்காளர் பட்டியல் பைபிள்களோ
இவர்களது
பழைய புதிய ஏற்பாடுகளில்
அல்லோகலப்படும்.
எதிர்க்கட்சி நிழல் காட்டும்
பெயர்கள் எல்லாம்
மரண பட்டியலில்.
ஆளுங்கட்சி நிறம் காட்டுபவர்கள்
இறந்து போயிருந்தாலும்
உயிர்த்தெழுவார்கள்.
தெருவெங்கும் தோ"ரணங்கள்" தான்.
வெள்ளத்தின் ரணங்கள் கூட‌
ஜிகினா பேப்பரில் எழுத்துக்களோடு
படபடக்கும்.
அந்த மக்களின் வாழ்வில்
வெள்ளம் சூன்யமாக்கியதை
இவர்கள் தங்கள் வெற்றிக்கு
மான்யமாக்கி மத்தாப்பு கொளுத்துவார்கள் !
கோடி கோடியாய் நிவாரணங்கள் கணக்கில்
குவியப்போகும் கரன்ஸிகளில் தலை
குனியப்போவது யார்?
அந்த "மகேசன்" தான்.
அந்த மக்கள் தான்.
யார் குனிந்தால் என்ன?
மக்கள் குரல் மகேசன் குரல்!

"செம்"பண"ப்பாக்கம் ஏரி
தளும்புகிறது.
"காந்தி புன்னகை" கட்டு கட்டாய்
கரையை உடைக்க காத்திருக்கிறது.
ஆணையம்
தேர்தல் தேதி மதகுகள் திறந்தால் போதும்.
வெள்ளம் வெள்ளம் வெள்ளம் தான்!
இலவச மதம் பிடித்து
"பிளிறும்"ஒலிகளில் கேட்கும் நம்
தேசிய கீதம்.
கிரேக்கத்து
ஜனநாயக சித்தாந்தம் தந்தவன்
"ஹெம்லாக்" கோப்பை ஏந்தி
மூச்சுகள் உதிர்ப்பான்.
இதையா நாம் கண்டுபிடித்தோம் என்று.
இருப்பினும்
நமது கடமை அது!
ஜனநாயகத்தை பிணமாய்
மடியில் கிடத்தியபோதும்
கழுத்து நரம்பு புடைக்க‌
முழக்கமிடுவோம்.
ஜனநாயகம் வாழ்க! ஜனநாயகம் வெல்க!

========================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக