புதன், 6 ஜனவரி, 2016

வெள்ளமோ வெள்ளம் ( 7)





அந்த நாலெழுத்து முதல்வர்
==============================================ருத்ரா இ.பரமசிவன்.

நொப்பும் நுரையுமாய் எங்கும் வெள்ளம்
நசுங்கிய கார் டப்பாக்கள் ஒரு புறம்.
சோஃ பா மெத்தைகள் குடல் பிதுங்கி
மிதந்து வர ..
அப்போது தான் சூடாய்
மாமியா மருமகள் உரையாடிய
உரைகள் உறைந்து போய்
தண்ணீருக்குள் குமிழியிட்டு வரும்
அகலத்திரை டிவி ஆடி அசைந்து வர..
கேஸ் சிலிண்டர்கள் மூச்சுகள்
அடக்கிய சிவப்பு பிணமாய் மிதக்க ..
மூசு மூசு என்று மூக்கு மயிர்கள் துடிக்க
எருமைகள் தத்தளித்து வர..
பரந்தாமா!
உன் பாற்கடலையும் பாம்புப்படுக்கையையும்
சுருட்டி வைத்து வைத்துவிட்டு
இங்கே வா...என்று  கூப்பிடும்
பாம்பு வகையறாக்கள் நீரில் நெளியலிட
..........................................
..................................................
மக்கள் தங்கள் முதுகெலும்பு சுருட்டிய
கேள்வி சிதிலங்களை
உருட்டித்திரட்டி முன் வந்தனர்.
அவர்கள் முழக்கங்களில்
தண்ணீருக்குள் கூட தீப்பிடிக்கும்
சொற்கள் அலை யடித்தன.
நிவாரணங்களாய்  குவிந்த
சாம்பார் சாதபொட்டலங்களில் கூட
ஒரு எரிமலை முட்டையை  நுழைத்த
பசியின் பிரியாணியாக்கி
உண்டு கொண்டிருந்த போதே
உருவம் கொண்டது அந்த
கேள்விகளின் சொக்கப்பனை!
அவர்களிடையே
புதிதாய்
அவர்கள் விரும்பி வரவேற்கும்
அந்த
"நாலெழுத்து முதல்வர்"
புதுச்சுடராய் எழுந்து நின்றார்.
"இனி நாமே "
"இனி நாமே"
"இனி நாமே "
ஓங்கி வளர்ந்த குரல்
ஓங்கி விண்ணடர்ந்தது !

===============================================











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக