புதன், 13 ஜனவரி, 2016

பூங்கா பெஞ்சு






பூங்கா பெஞ்சு
==========================================================ருத்ரா

என் சட்டைப்பையில்
ஒரு நூறு ரூபாய் நோட்டு பார்க்க‌
நான் என்ன செய்யலாம்?

ஏதாவது
ஒரு விளம்பரக்கம்பெனியின்
முதுகு சொறிந்து
முச்சந்திகளிலும்
வீட்டு வாசல்களிலும்
இன்னும்
கோவில் திருவிழாக்களிலும்
நசுங்கிய குவளைகளில்
ஏற்கனவே போட்ட சில சில்லரைகளை
வைத்து சத்தம் கிளப்பி
அனுதாப ஈக்கள் மொய்க்கவிட்டுக்கொண்ட‌
அவர்களைப்போல‌
அந்த விளம்பர நோட்டீஸ்களை
நானும்
வலுக்கட்டாயமாக்கப்பட்ட‌
புன்னகையுடன்
விநியோக்கலாம்.
இல்லாவிட்டால்
ஏதாவது ஒரு கட்சிக்கு
அவர்கள் தரும் உடையோடும் கொடியோடும்
வேடந்தாங்கிய‌
வேடந்தாங்கல் பறவைகளையாய்
கொத்து கொத்தாய்
அணிவகுத்து கோஷம் போடலாம்.
இல்லாவிட்டால்
ஒரு பால் காரரிடம் வாங்கிய‌
பால் கேனோடு
சைக்கிள் மிதித்து
பால் ஊற்றி விற்றுத்தந்து
கூலி பெறலாம்.
இல்லாவிட்டால்
நியூஸ் பேப்பர் ஏஜெண்டிடம்
வேலை கேட்டு
கட்டு கட்டாய்
சுடச்சுட செய்தி தாங்கிய பேப்பர்களை
மார்கழிக்குளிரில்
கோலம் போட்ட வாசலில் வீசி
ஊர்வலம் போகலாம்.
எவ்வளவோ வழிகளில்
நுழைந்து புகுந்து தான்
அந்த நூறு ரூபாய் தாளை
விரட்டிப்போகும்
பொருளாதாரத்தை தான்
நான் நக்கிப்பார்க்க‌
அந்த நீண்ட நாக்கு தொங்கும்
நாயுடன் அலைய வேண்டியிருக்கிறது.
பி.ஏ பட்டம் பெற‌
நான் கரைத்துக்குடித்த
ஆடம்ஸ்மித் ரிகார்டோ மற்றும்
மேனார்டு கீன்ஸ் பொருளாதாரங்களும்
அந்த லிக்குடிட்டி ப்ரிஃபெரன்ஸ் மோடிவ்
கோட்பாடுகளும்
இங்கே பல்லு குத்தும் துரும்புகளுக்கும்
பிரயோசனமில்லை.

இன்னும் நான் தொலைதூரம் போகவேண்டும்
என் சட்டைப்பையில்
நூறு ரூபாய் நோட்டைப்பார்க்க.
சட்டைப்பையில் நெருடியதை
எடுத்தேன்.
துண்டு சீட்டு.
இன்று மாலை அந்த பூங்கா பெஞ்சில்
சந்திக்கலாம்.
அவள் எழுதிய சீட்டு.
கோடி ரூபாய்க்கும் மேல்
என்று பத்திரப்படுத்திக்கொண்டே
அலைகிறேன்.
அந்த "இன்று"
எத்தனையோ "இன்று"களை
கடந்து சென்று விட்டது.
பூங்கா பெஞ்சுக்கு
என்று செல்வது?

=====================================================ருத்ரா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக