வெள்ளி, 29 ஜனவரி, 2016

தேர்தல் கால மேகங்கள்




தேர்தல் கால மேகங்கள்
=============================================ருத்ரா இ.பரமசிவன்

அணிகள் 
இன்னும் அமையவில்லை.
வெள்ளத்தின் வடுக்களே
தேர்தல் வாக்குறுதிகளை
அச்சிடக்காத்திருக்கிறது.
வெள்ளத்தின் பள்ளங்களை
கரன்சிகள் கொண்டு மூடி
வெற்றி குவிக்க‌
எந்திரம் தயார்.
வாக்கு வங்கிகள் 
செழித்துக்கொழுக்க‌
இங்கே
பால் குடங்களும்
அலகு குத்தல்களும் போதும்.
தொழில் முனைவு என்றாலே
இங்கு 
மணல் அள்ளுதல்களும்
பாறைப்படிவங்களை 
பாலிஷ் ஏற்றுவதும் தான்.
இருட்டுச்சத்தத்தில் 
பணங்களை குவிப்பதும் தான்.
கல்வித்தந்தை என்று 
தானே மகுடம் சூட்டிக்கொண்டு
ஒரு கக்கூஸ் அறைக்குள்ளேயே
பல்கலைக்கழகத்தை 
நடத்திக்காட்டுவதும் தான்.
குவிக்கின்ற பணத்திற்கு ரசீது இல்லையாம்.
குமைந்த ஏழை உயிர்களை
பாழடைந்த கிணறுகள் 
விழுங்கித் தீர்த்தது தான் மிச்சம்.
இதற்கும் கூட
கேள்வி கேட்கிற 
நாட்டமைகள் ஆயிரம் இருந்தும்
லஞ்சம் என்ற நாலெழுத்தில்
நாடே அழுகிப்போனது.
பொருளும் இல்லாத ஆதாரமும் இல்லாத‌
பொருளாதாரமே இங்கு ஆட்சி செய்கிறது.
மைசூர் பாகை
கோடு போட்டு கோடு போட்டு
லபக் லபக் என்று
விழுங்குவது போல்
நிலத்தை கோடு போட்டு வேலி போட்டு
பட்டா போட்டு விழுங்கும்
மோசடிக்காரர்களால்
நமது நாட்டின் 
ஆறுகளும் மலைகளும் 
காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன.
வீடு வாங்கும் நம் ஆசையில்
நம் வளத்தை கசாப்பு செய்யும் கத்திகளே
சொருகப்பட்டிருக்கின்றன!
இதில் 
பணம் குவிப்பவர்கள் பதுங்கி யிருக்க‌
படம் காட்டுப்பவர்களே
அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
பொம்மைகள் ஆடுகின்றன‌
அந்த சூத்திரக்கயிறுகள்
ந‌ம் கழுத்தை நெறிக்கின்றன.
ஓ! இளைய யுகமே!
தன்னார்வ அலைக்கூட்டங்களே!
வெள்ளம் வந்தால் தான்
வலியோடு "சிலுவை" சுமக்க
முன் வருவீர்கள் என்றால்
இதோ வருகிறது
இரண்டாவது வெள்ளம்.
வாக்குகள் தடம்புரண்டு சீற்றமோடு
வரும் தேர்தல் வெள்ளம்.
ஊழலுக்கு அணை கட்டுவதாய்
முழங்குவோர்கள் ஒரு பக்கம்.
ஈழத்தின் கண்ணீரை 
துடைக்கப்போவதாய் ஒரு முழக்கம்.
சாதி மத தீ அரக்கர்களை
அழித்து விடுவதாய் ஒரு சீற்றம்.
இலவச மழை பொழிந்து
"இல்லாமையை" இல்லாமை
ஆக்குவதாயும்
மேசை தட்டி மேசை தட்டி
சட்டசபையில்
"ஜனநாயக தூசி தட்ட"மட்டுமே
காத்திருக்கும் ஒரு கூட்டம்.
ட்விட்டரும் வாட்ஸ் அப்பும்
முகநூல் மூக்கணங்கயிறுகளும்
நம்மிடம் உண்டு
இனி எல்லாம் நடக்கும் என்று
துடிக்கும் இருபதுகளின்
ஒரு அறிவு முழக்கம்.
"தல"யும் "தளபதியும்" இருக்கிறார்கள்.
சூபர் ஸ்டார்களும் இருக்கிறார்கள்
ஒரு தடவை "விரல் அசைத்தாலே போதும்"
இனி தர்மத்தின் வாழ்வு தனை
சூது கவ்வாது என்று
மத்தியான சினிமாக்காட்சிகளுக்கு
மொய்க்கும் மந்தைகளின்
குத்தாட்ட விசில் அடிப்புகள் ஒரு பக்கம்.
நுனிப்புல் மேய்ந்து
பரபரப்புகளை காசாக்கும்
பத்திரிகை ஊடகங்கள் எனும்
மதில் மேல் பூனைகள் ஒரு பக்கம்.
இதையெல்லாம் மீறி
அந்த விடியல் வானம் 
ஒளியை கீறிக் காட்டட்டும்.
நல்லதே நடக்கும் என‌
நம்புவோமாக!

===========================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக