அந்தக்குருவிகள் ?
================================================ருத்ரா இ,பரமசிவன்.
ஊசி அலகுகள் பிளக்க
அந்தக் குருவி கிறீச்சிட்டது.
அந்த ஊசிக்குள்ளிருந்தா
ஏழு கடல்களையும்
ஏப்பமிடும்
அந்த ஒலிக்கடல்?
ஒன்றல்ல இரண்டல்ல
ஏழெட்டு குருவிகள்..
ஒரு காலை நேர "நடை"யலின் போது
அந்த குறுகல் சந்து வழியே சென்றேன்.
பரட்டைத்தலை போல
பிய்ந்த காய்ந்த சருகுப்பொடியாய்
உதிரும் கூரைக்குடிசைகள்
ஊடே நடந்தேன்.
இங்கெல்லாம்
இன்னும் கிழக்குத் திசைகள்
சுவடுகளே காட்டவில்லை
என்பது
அவ்வளவு அம்மணம்!
சித்தாந்தங்கள் எல்லாம்
இங்கு ரூபாய்க்கு பத்து கிலோ கிடைக்கும்.
ஆனாலும்
இன்னும்
இந்தியாவின் ஜென்ம பூமிக்கு
ஒரு கட்டணக்கழிப்பிடத்தின்
அடிக்கல் கூட
அயல் நாட்டான்
கடன் தொகையில் தான்.
குருவிகளின்
ஊசிக்குத்தல்களில்
ரத்த நாளங்களில் எல்லாம்
ஒலி அமுத வெள்ளம்.
பழுப்பும் கருப்பும்
கொஞ்சம் பச்சையும் கலந்து
பிசைந்த அந்த
பிஞ்சுப்பிரபஞ்சங்கள்
குடிசைகளின் கூரை விழுதுகளில்!
இந்த இசை விருந்துக்கு
நட்சத்திர ஓட்டல்களில்
கத்தை கத்தை கரன்சிகளே சமன்பாடு.
என் இதயம் வலித்தது.
அகண்ட இந்தியாவின்
ஆரிக்கிள் வெண்டிரிக்கிள்களில்
சாக்கடைகளே இன்னும் வர்ணங்கள்.
அந்தக்குருவிகள்
செவிக்குள் பெய்த அதிர்வெண்கள்
இந்த உலகத்தையே
சுருட்டிப்போட்டுவிடும்.
இந்த "செஞ்சுருட்டி" ராகத்துக்கு
பூஞ்சக்காளான் பிடித்த
வீணைகளால் பயனில்லை.
ஏக்கம் பூசிய விழிகளுடன்
காத்திருக்கிறேன்.\
வருமா அந்தக்குருவிகள் ?
===========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக