வெள்ளி, 15 ஜனவரி, 2016

நுனிக்கொம்பர்கள்







நுனிக்கொம்பர்கள்
======================================ருத்ரா


கொசு உன்னைக்கடித்ததா?
ஐயோ பாவம் கொசு!
அதன் பூங்கொடுக்குகள் என்ன ஆகும்?
கரப்பான் பூச்சிகளுக்கு
ரசாயனப்புகையா?
என்ன கொடுமை? என்ன கொடுமை?
அதன் கம்பீர மீசையில்
மானிடப்பரிமாணத்தின்
அகர முதல
ஆரம்பிக்கிறதே
அதை அழிக்கலாமா?
மூட்டைப்பூச்சியை நசுக்கலாமா?
நம் ரத்த வங்கியின்
முதல் கிளை அலுவலகங்கள்
அங்கு தானே
மெமொரன்டம் ஆஃப் அசோசியேஷன்களை
அரங்கேற்றியது.
வட்டமேஜையில் உட்கார்ந்து கொண்டு
அறிவு ஜீவிகள்
பட்டியல் இட்டார்கள்.
அதன் மூக்கில் ஈ மொய்க்கலாமா?
அது கொம்புகளை ஆட்டும்போது
காற்று அதில் மோதலாமா?
இது காளைகளைப்பற்றிய
இவர்களது ஜீவகாருண்யம்.
காளைகளின் வீரத்தை உடைப்பில் போடு.
அவற்றின் காயடித்து
தோல் உரித்து
இறைச்சியை "ஃபாரின் எக்ஸேஞ்ச்" ஆக்கி
உலக வியாபாரத்தை சூடாய் நடத்து.
இந்த சந்தைப்பொருளாதாரத்தில்
தந்தை மகன்கள் அடித்துக்கொண்டு
செத்தாலும்
அதையும் ரூபாய் பைசாவாக பார்.
டி.வி சீரியல்களில்
அதை வர்ணம் குழைத்துக்காட்டு.
இதன் கடைவாய்ப்பற்களில்
சமுதாய மலர்ச்சி அரைபட்டு கூழாகி
ரத்தம் வழிந்தாலும்
அதைப்பற்றி கவலைப்பட‌
இங்கு யாருமில்லை.
இந்த கார்பொரேட்டுகளின்
நவீன கழிவுகளால் ஏற்பட்ட‌
மாசுகளால் கடல் கலங்கியதில்
நூற்றுக்கணக்காய்
திமிங்கிலங்கள்
பிணங்களாய் கரையொதுங்கின.
உலகத்தின்
மலைப்பிஞ்சுகளையும்
தெள்ளிய ஆறுகளையும்
பொன் மணல் துளிகளையும்
அள்ளித்தின்று
மற்றும் அது போல்
பரம்பரையாய் துளிர் விடும்
வேப்பங்கொளுந்துகளையும்
கோரைப்புல் அருகம்புல் நாயுருவிகளையும்
லாபத்தின் கோரைப்பல் காட்டும்
கொள்ளை வெறியில்
"பேட்டண்டுகள்"ஆக்கி
சுரண்டித்தின்று
ருசி கண்ட பொருளாதாரப்பூனைகளே
காளைகளின் திமில் மீது உட்கார்ந்து
அவற்றின் உயர் இன விந்துகளையும்
மூலதனம் ஆக்க மூளை கசக்கி
அரசியல் சாசனத்தின் அந்துப்பூச்சிகளாய்
ஷரத்துகளின்
சந்து பொந்துகளில் சுரங்கம் வெட்டுகின்றன.
இப்படி குவிய குவிய‌
பங்கு மூலதன வ‌ருவாயின்
ரம்பப்பல் வரைபடங்களை
கணினியில் கண்டு கண்டு
களியாட்டம் நடத்துகின்றன.
ஒரு தொன்மை செறிந்த‌
இனத்தின் மொழியும் பண்பாடும்
இவர்களுக்கு
எந்த லாபமும் ஈட்டாததால்
அந்த இனம்
லட்சக்கணக்கில் அழிக்கப்பட்டாலும்
இவர்கள் இதயத்தை போர்த்தியிருந்த‌
மரத்த முரட்டுத்தோல்
உலக அரங்கில் கூட‌
கள்ள மௌனம் சாதித்தது.
பெட்ரோல் துளிகளை காக்க‌
மானிட ரத்த ஆறுகள் ஓடவைப்பதே
இவர்களின்
பொருளாதார அரசியல் உட்கிடக்கைகள்.
விஞ்ஞானம் வளர்ந்தாலும்
அதைக்கொண்டு லாபம் பெருக்கி
சமுதாய மானிடத்தையே
கசாப்பு செய்வதே
இவர்களின் "தொழில் முனைவுகள்"
தமிழா!
காளைகளின் வாலைப்பிடித்து
விளையாட முடியவில்லையே
என்பதற்கு மட்டும்
நீ
மீசை முறுக்கினால் போதாது!
உன் சினிமா குத்தாட்ட பண்பாட்டை விட்டு
விடுதலையாகு!
மானிடப்பிரம்மாண்டமே
உன் கோவில் மற்றும் தெய்வம் எல்லாம்.
மற்ற மாயவர்ணங்களை
களைந்தெறி!
தமிழா
சிந்துவெளி முத்திரையில் தெரியும்
உன் கம்பீரமான காளையும்
உன் தொன்மையும் களவு போய்க்கொண்டிருக்கிறதே!
"என்ன செய்யப்போகிறாய்?"
இதுவும் ஒரு சினிமாப்பாடல் தான்.
ஆனால்
இந்த திரை வேறு
இதன் கோணமும் வேறு.
எழு!
சிந்திக்க எழு!

======================================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக