வெள்ளி, 22 ஜனவரி, 2016

வெள்ளமோ வெள்ளம் (8)






வெள்ளமோ வெள்ளம்  (8)


தேர்தல் கீதை
=====================================================ருத்ரா

மக்கள் வெள்ளத்திலிருந்து
மீண்டு எழுந்து விட்டார்கள்.
மீண்டும்
நிவாரணங்களின் வெள்ளங்களில்
விழுந்து கொண்டிருக்கிறார்கள்.
வெள்ளத்தின் காயங்களுக்கா
கோடி கோடிகளாய்
அந்த கரன்சிக்களிம்பு?
ஊர் அறியும்.
உலகம் அறியும்.
உட்குறிப்பை யாரும் அறிவார்.
இதை ஓரளவு தடுக்கலாம்
என்று எதிர்க்கட்சிகள்
"எங்களையெல்லாம்
கலந்து ஆலோசித்து தான்
பந்திக்கு இலை போட வேண்டும்"
என்றார்கள்.
ஒன்று என்ன
இரண்டு இலைகளாகவே
போட்டு விடுவோம் என்று
வங்கியில் பந்தி போட்டார்கள்
அவை யாவும்
வாக்கு வங்கியில் போய்விழும்
என்ற கணக்கும் போட்டார்கள்.
குமாரசாமி கணக்கெல்லாம் இல்லை.
துல்லியமாய்
கூட்டிக்கழித்துப் போட்ட‌
கூட்டல் கணக்கு.

முதல் தளம் மூழ்கினால் என்ன?
நூற்றுக்கணக்காய்
பிணங்கள் மிதந்தால் என்ன?
அதில் சில‌
இலங்கைக்கரையோரம் கூட‌
ஒதுங்கி மிதந்தால் என்ன?
கணக்குப்புத்தகத்தில் வராத பிணங்கள்
கண்டிப்பாக ஓட்டு போட வருவார்களே
அப்போது மாலை போட்டுக்கொள்ளலாம்.

அது என்ன செம்பரம்பாக்கமா?
இல்லை
"பழைய ஏற்பாட்டில்" வரும்
செங்கடலா?
அப்படி வசதியாய்
அவர்கள்
விளம்பரத்தோடு நடந்து வரும்படி
பிளந்து பெருக?

யானை படுத்தாலும் குதிரை மட்டம்.
ஜனநாயகம் படுத்தாலும்
"பட்டன்கள்" மட்டம் தான்!
பொறிகள் தட்டி
பொறிக்குள் மாட்ட‌
எலிகள் ரெடி.
மசால் வடைகளும் ரெடி.
நிவாரணப்பணி நன்றாகவே நடந்தது
என்ற‌
பலமான முத்திரை விழுந்த பின்னே
எதிர் ஒலிபெருக்கிகளில் எல்லாம்
இனி "ஈனஸ்வரம்" தானே.

மதுவிலக்கு முடியாது என்று
சொல்லிவிட்டார்கள்.
வேண்டுமானால் வசதியாக‌
"ஓட்டிங்க் பூத்தே"
அங்கு ஓடி வரும்.

தேர்தல் வெள்ளம் வரும்போதும்
கரன்சியின் காந்திப்புன்னகையில்
எல்லா அவலங்களும்
அழுகைகளும்
கரைந்தே போகும்.
"சம்பவாமி யுகே யுகே"
கீதையே சொல்லிவிட்டது
அப்புறம் என்ன?
சுப்பிரமணிய சாமிகளும்
சோக்களும்
சுருதி சேர்த்து விட்டார்கள்
அப்படியும் இப்படியும் இருக்கிறதே
என்று
நீங்கள் குழம்ப வேண்டாம்.
எப்படி எப்படிச்சொன்னாலும்
அப்படித்தான் அர்த்தம்.

தேர்தல் கீதை
ஒலிக்க ஆரம்பித்து விட்டது.
"நடந்தவை நன்றாகவே நடந்து விட்டது"
"நடக்கின்றவை நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறது"
"நடப்பவை நன்றாகவே நடக்கும்"

==============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக