புதன், 6 ஜனவரி, 2016

கிரீடங்கள் நமக்குத்தான்.


கிரீடங்கள் நமக்குத்தான்.
===============================================ருத்ரா இ.பரமசிவன்

அறுபத்தொன்பது ஆண்டுகளாய்
அடைகாத்த முட்டை.
இடியாப்பச்சிக்கல்களே
இழை யாடி
மூவர்ணக்கரு தாங்கி
மூச்சு திணறிக்கொண்டிருக்கிற
இந்த மூச்சுக்கு
எப்போது சுதந்திரம்?

மேல் நாட்டினர்
மூக்கில் விரல் வைத்தார்களே
அந்த அரிய சிற்பங்கள்  தந்தவர்களா
இப்போது
அரை வயிற்றையாவது
இந்தக் கல்லை  ஜல்லிகளாக உடைத்து
நிரப்ப முடியுமா
என்று விரல் நைந்து கொண்டிருக்கிறார்கள்?

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்
அறிவின்
மூளைச்சிலந்திகளாக
வலை பின்னி
எங்கே இந்தியா எங்கே இந்தியா
என்று தேடியவர்கள் கையில்
இந்த பட்டினிப்புழுக்களா கிடைத்தன?
வெறுமையின் பாதாளங்களில்
இந்த சுவடிகளும்
கல்வெட்டுகளும்
ஒளி அவிந்து கிடக்கும்
காரணங்கள் பற்றி சிந்தனைப்பொறிகள்
சிதறிடாமல்
பசி தீர்க்கும் அரிசிப்பொரிகள்
சுற்றியே
கோடி கோடி எறும்புகள்.
அதற்கும் கூட நாம்
மின்னணுப்பொறிகள்
கண்டு பிடித்ததில்
கிரீடங்கள் நமக்குத்தான்.
ஆம்
அந்த முட்கிரீடங்கள்
நமக்கே நமக்கு த்தான்!

===================================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக