சனி, 30 ஜனவரி, 2016

அந்தக்குருவிகள் ?







 அந்தக்குருவிகள் ?
================================================ருத்ரா இ,பரமசிவன்.

ஊசி அலகுகள் பிளக்க
அந்தக் குருவி கிறீச்சிட்டது.
அந்த ஊசிக்குள்ளிருந்தா
ஏழு கடல்களையும்
ஏப்பமிடும்
அந்த ஒலிக்கடல்?
ஒன்றல்ல இரண்டல்ல
ஏழெட்டு குருவிகள்..
ஒரு காலை நேர "நடை"யலின் போது
அந்த குறுகல் சந்து வழியே சென்றேன்.
பரட்டைத்தலை போல
பிய்ந்த காய்ந்த சருகுப்பொடியாய்
உதிரும் கூரைக்குடிசைகள்
ஊடே நடந்தேன்.
இங்கெல்லாம்
இன்னும் கிழக்குத் திசைகள்
சுவடுகளே காட்டவில்லை
என்பது
அவ்வளவு அம்மணம்!
சித்தாந்தங்கள் எல்லாம்
இங்கு ரூபாய்க்கு பத்து கிலோ கிடைக்கும்.
ஆனாலும்
இன்னும்
இந்தியாவின் ஜென்ம பூமிக்கு
ஒரு கட்டணக்கழிப்பிடத்தின்
அடிக்கல் கூட
அயல் நாட்டான்
கடன் தொகையில் தான்.
குருவிகளின்
ஊசிக்குத்தல்களில்
ரத்த நாளங்களில் எல்லாம்
ஒலி அமுத வெள்ளம்.
பழுப்பும் கருப்பும்
கொஞ்சம் பச்சையும் கலந்து
பிசைந்த அந்த
பிஞ்சுப்பிரபஞ்சங்கள்
குடிசைகளின் கூரை விழுதுகளில்!
இந்த இசை விருந்துக்கு
நட்சத்திர ஓட்டல்களில்
கத்தை கத்தை கரன்சிகளே சமன்பாடு.
என் இதயம் வலித்தது.
அகண்ட இந்தியாவின்
ஆரிக்கிள் வெண்டிரிக்கிள்களில்
சாக்கடைகளே இன்னும் வர்ணங்கள்.
அந்தக்குருவிகள்
செவிக்குள்  பெய்த அதிர்வெண்கள்
இந்த உலகத்தையே
சுருட்டிப்போட்டுவிடும்.
இந்த "செஞ்சுருட்டி" ராகத்துக்கு
பூஞ்சக்காளான் பிடித்த
வீணைகளால் பயனில்லை.
ஏக்கம் பூசிய விழிகளுடன்
காத்திருக்கிறேன்.\
வருமா அந்தக்குருவிகள் ?

===========================================================






வெள்ளி, 29 ஜனவரி, 2016

முகம் (2)





முகம் (2)
===================================ருத்ரா இ.பரமசிவன்

அன்று அந்த முகம்
கண்ணில் பட்டு விட்டது!
துள்ளி குதித்தேன்
நான் அடைந்த ஆனந்தத்துக்கு
அளவே இல்லை!
தைரியம் அடைந்து
ஹலோ என்றேன்.
ஹலோ
ஹலோ
ஹலோ
இதற்குமேல்
முகம் எனும்
அந்த கல் எதையும்
கசிய விடவில்லையே
பூ இதழ் திறக்கும்
என்றல்லவா எண்ணினேன்.
அவள் தானா
என்று
உறுதி கொள்ள
அதே மின்னல் ஜடை
அதே நிலவின் அதே சுவடு
இவள் தான்
என்று உறுதி கொள்ள வைத்தது.
இருப்பினும்
குழப்பம் எனும் நெருப்பின்
லாவா என் மீது
பீய்ச்சி அடித்தது.
அன்று பின் தொடரும்போது
நான் ஒரு இடைவெளியில்
என் முகவேர்வையை
துடைத்துக்கொள்ளும் போது
அவள் பின்னால் திரும்பி
என் மீது "ஒரு க்ளுக்" சிரிப்பை
வீசியிருக்க வேண்டும்
அந்த பன்னீர் தெளிப்பை வைத்தே
இப்போது
முகத்தோடு முகம் நோக்கினேன்.
ஆகா!
எவ்வளவு அழகு !
அதை விவரிக்க
எனக்கு வெறும் உளுத்துப்போன
அந்த சொல் தான் கிடைத்ததா?
நிலவு என்றும்
பூ வென்றும்.
........
.......
ஹலோ மிஸ்டர்?
எதற்காக இந்த லுக்?
........
காத்திருக்கவில்லை
அவள் மேலே சென்றுவிட்டாள்.
எனக்குத்தெரியும்
அந்த சிரிப்பின் கல் எறிதல்
எவ்வளவு வட்டங்களை என்னுள்
விரித்தது?
அவளே தான் அவள்!
.....
நன்றாய் தவிக்கட்டும்
இன்னொரு முறை
முகத்தோடு முகம் நோக்க
வராமலா போவார்?
அவள் நடந்து கொண்டே இருந்தாள்.
கல கல வென்று சத்தமாக
சிரித்துக்கொண்டே நடந்தாள்.
எல்லாரும் ஒரு மாதிரியாய்
பார்த்தார்கள்.
அவனும் தான்!
இந்த தடவை குலுங்கி விழுந்த
அந்த சோழிகளில்
அவனும் இறைந்து கிடந்தான்.

================================================

தேர்தல் கால மேகங்கள்




தேர்தல் கால மேகங்கள்
=============================================ருத்ரா இ.பரமசிவன்

அணிகள் 
இன்னும் அமையவில்லை.
வெள்ளத்தின் வடுக்களே
தேர்தல் வாக்குறுதிகளை
அச்சிடக்காத்திருக்கிறது.
வெள்ளத்தின் பள்ளங்களை
கரன்சிகள் கொண்டு மூடி
வெற்றி குவிக்க‌
எந்திரம் தயார்.
வாக்கு வங்கிகள் 
செழித்துக்கொழுக்க‌
இங்கே
பால் குடங்களும்
அலகு குத்தல்களும் போதும்.
தொழில் முனைவு என்றாலே
இங்கு 
மணல் அள்ளுதல்களும்
பாறைப்படிவங்களை 
பாலிஷ் ஏற்றுவதும் தான்.
இருட்டுச்சத்தத்தில் 
பணங்களை குவிப்பதும் தான்.
கல்வித்தந்தை என்று 
தானே மகுடம் சூட்டிக்கொண்டு
ஒரு கக்கூஸ் அறைக்குள்ளேயே
பல்கலைக்கழகத்தை 
நடத்திக்காட்டுவதும் தான்.
குவிக்கின்ற பணத்திற்கு ரசீது இல்லையாம்.
குமைந்த ஏழை உயிர்களை
பாழடைந்த கிணறுகள் 
விழுங்கித் தீர்த்தது தான் மிச்சம்.
இதற்கும் கூட
கேள்வி கேட்கிற 
நாட்டமைகள் ஆயிரம் இருந்தும்
லஞ்சம் என்ற நாலெழுத்தில்
நாடே அழுகிப்போனது.
பொருளும் இல்லாத ஆதாரமும் இல்லாத‌
பொருளாதாரமே இங்கு ஆட்சி செய்கிறது.
மைசூர் பாகை
கோடு போட்டு கோடு போட்டு
லபக் லபக் என்று
விழுங்குவது போல்
நிலத்தை கோடு போட்டு வேலி போட்டு
பட்டா போட்டு விழுங்கும்
மோசடிக்காரர்களால்
நமது நாட்டின் 
ஆறுகளும் மலைகளும் 
காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன.
வீடு வாங்கும் நம் ஆசையில்
நம் வளத்தை கசாப்பு செய்யும் கத்திகளே
சொருகப்பட்டிருக்கின்றன!
இதில் 
பணம் குவிப்பவர்கள் பதுங்கி யிருக்க‌
படம் காட்டுப்பவர்களே
அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
பொம்மைகள் ஆடுகின்றன‌
அந்த சூத்திரக்கயிறுகள்
ந‌ம் கழுத்தை நெறிக்கின்றன.
ஓ! இளைய யுகமே!
தன்னார்வ அலைக்கூட்டங்களே!
வெள்ளம் வந்தால் தான்
வலியோடு "சிலுவை" சுமக்க
முன் வருவீர்கள் என்றால்
இதோ வருகிறது
இரண்டாவது வெள்ளம்.
வாக்குகள் தடம்புரண்டு சீற்றமோடு
வரும் தேர்தல் வெள்ளம்.
ஊழலுக்கு அணை கட்டுவதாய்
முழங்குவோர்கள் ஒரு பக்கம்.
ஈழத்தின் கண்ணீரை 
துடைக்கப்போவதாய் ஒரு முழக்கம்.
சாதி மத தீ அரக்கர்களை
அழித்து விடுவதாய் ஒரு சீற்றம்.
இலவச மழை பொழிந்து
"இல்லாமையை" இல்லாமை
ஆக்குவதாயும்
மேசை தட்டி மேசை தட்டி
சட்டசபையில்
"ஜனநாயக தூசி தட்ட"மட்டுமே
காத்திருக்கும் ஒரு கூட்டம்.
ட்விட்டரும் வாட்ஸ் அப்பும்
முகநூல் மூக்கணங்கயிறுகளும்
நம்மிடம் உண்டு
இனி எல்லாம் நடக்கும் என்று
துடிக்கும் இருபதுகளின்
ஒரு அறிவு முழக்கம்.
"தல"யும் "தளபதியும்" இருக்கிறார்கள்.
சூபர் ஸ்டார்களும் இருக்கிறார்கள்
ஒரு தடவை "விரல் அசைத்தாலே போதும்"
இனி தர்மத்தின் வாழ்வு தனை
சூது கவ்வாது என்று
மத்தியான சினிமாக்காட்சிகளுக்கு
மொய்க்கும் மந்தைகளின்
குத்தாட்ட விசில் அடிப்புகள் ஒரு பக்கம்.
நுனிப்புல் மேய்ந்து
பரபரப்புகளை காசாக்கும்
பத்திரிகை ஊடகங்கள் எனும்
மதில் மேல் பூனைகள் ஒரு பக்கம்.
இதையெல்லாம் மீறி
அந்த விடியல் வானம் 
ஒளியை கீறிக் காட்டட்டும்.
நல்லதே நடக்கும் என‌
நம்புவோமாக!

===========================================

திங்கள், 25 ஜனவரி, 2016

முகம்







முகம்
===========================================ருத்ரா

அப்படித்தான்
அன்றொரு நாள்
கண்ணாடி பார்த்து.
தலை வாரினேன்.
அது  ஆளுயரத்துக்கு
நின்று கொண்டிருக்கும்
நிலைக்கண்ணாடி !

முகத்தை
எட்டு கோணலாக்கி
அழகு பார்த்தேன்.
சீப்பை
சிகைக்குள் விட்டு
அவள் நினைப்பில்
சிலிர்த்து நின்றேன்.
அட!
இதென்ன
காண்ணாடி உருகி வழிய
தடாகம் ஆனது.
கருங்கூந்தல் படர
அவள் முகம் மட்டும்
குளிக்கும் நிலவாய்
அலை அலையை
முக உருவம் போக்கு காட்டி
நெளியல்களாய்
என் நெஞ்சப்பிழியல்களாய்
பிம்பம் எல்லாமே
பொழியல்களாய்
அந்த அறை முழுவதும்
ஊற்றிக்கொண்டது
நான் நனைந்தேனா?
இல்லை நானும்
தரை முழுதும்
மெழுகுவர்த்தியின்
வெள்ளை ரத்தமாய்
உருகி அவளுடன் சங்கமம்
ஆகி விட்டேனா?
இப்போதும்
அவள் முகம்
பஞ்சு மிட்டாய் பிசிறாக
அங்கே எல்லா இடத்திலும்
தித்தித்தது.
"அடேய் எங்கேடா போய்ட்டே"
ஆஃபிஸ் போகலையா?"
அம்மா கத்தினாள்.
அவள் நெய்த்தோசை கரண்டி
என் மூக்கில் இடிக்காத குறையாய்
அருகில் தான் நின்றேன்.
அம்மா குரல் கொடுத்துக்கொண்டே இருந்தாள்.
நான் ஆஃபிஸ் கிளம்பிவிட்டேன் அம்மா!
அப்புறம் பார்க்கிறேன் என்று
வாசலில் இருந்து
சொல்வது போல் சொல்லிவிட்டு.
அங்கே தான் நின்றேன்.
"என்ன !பிள்ளையோடா "
அம்மா உள்ளே போய்விட்டாள்.
நான் இன்னும் அங்கு தான்
நின்றுகொண்டிருக்கிறேன்.
எனக்கு மட்டுமே கேட்கும்
அவள் சிரிப்பு
என்னை காற்றில் கரைத்து விட்டதோ?
நான் மாயம் ஆகி விட்டேன்.
கண்ணாடி அருகில் தான் நிற்கிறேன்.
அந்த பிம்பத்தில் பாதரசம் இல்லை.
நான் அவளை.
அவள் என்னை
ஊடுருவிக்கொண்டோம்..
அந்த வெறுங்கண்ணாடியில்
இதயங்கள்
கட்டிகொண்டு பிசைந்து
ஜெல்லியாய்
இந்த காலப்பரிமாணங்களோடு
நிரவி நின்றது.
அப்புறம்
கண்ணாடி சுக்கல் சுக்கலானது.
இன்னும்
அவள் முகத்தை
நான் பார்க்கவில்லையே!
.........
.........
"என்ன இது.
கண்ணாடியை யார் இப்படி நொறுக்கியது?"
அம்மா பதறிக்கொண்டே
ஓடிவந்தாள்.
.......
மாலை வீடு திரும்பியதும்
அம்மாவிடம் கேட்டேன்.
"என்னம்மா
கண்ணாடி தூள் தூள் ஆகி விட்டாதா?
உன் காலில் காயம்
ஏதும் ஆகவில்லையே."
"என்னடா சொல்கிறாய்
காண்ணாடி..
அதோ பார்
முண்டமாய் தான்
நின்று கொண்டிருக்கிறது.
நீ
என்ன கண்ணாடி வழியாய்
அப்படியே ஆஃபீசுக்கு போய்விட்டாயா?"
இன்னும் நான்
அந்த முகம் தேடி வானத்தை
வெறித்துப்பார்க்கிறேன்.
ஆம்.. அவள் கண்கள் வழியாய்த்தானே
ஆஃபீசுக்குப போனேன்..
என் மௌனம் பேசியது
அங்கு யாருக்கும் கேட்கவில்லை.

================================================


சனி, 23 ஜனவரி, 2016

தியானம் என்பது....






தியானம் என்பது....
==================================================ருத்ரா


தியானம் என்பது
மூச்சுகளில் தக்கிளி நூற்றல்.
காற்றை
சோறு சமைத்து
குழம்பு தாளித்து
சாப்பிடுதல்.
ஆக் சிஜன் வேலன்சி-பாண்ட்
மோல்யூக்யூலர் ஸ்ட்ரக்ச்சர் என்று
வேண்டுமானால்
நுறையீரலுக்குள் புகுந்து
பாடம் எடுக்கலாம்.
பாடம் படிக்கலாம்.
உங்களை
மயிரிழையாக்கி
உங்கள் மூக்கின் வழியே
சுருட்டி நுழைத்துப்பாருங்கள்.
உங்கள் நெருடல்கள்
அங்கே
ஆயிரம் மலைகளின்
பனிக்குடம் உடைக்கும்.
சுகமாய் மரணம்.
சுகமாய் ஜனனம்.
மீண்டும் மீண்டும்
வேதங்கள்
எச்சில் பட்டு
புழுதின்று
உங்களுக்குள்
தகனம் ஆகி
சாம்பல் மேடு தட்டும்.
காதுப்பறைகளுக்குள்
காண்டா மணி ஒலிகள்
நார் நாராய் உரிந்து போகும்.
சங்கரர் போல்
எந்த ராஜாவாவது செத்துப்போனால்
அவர் கூட்டுக்குள் நுழைந்து
ராணிக்குள்ளும் அங்குலம் அங்குலமாக‌
சவ்வூடு பரவல் ஆகி
சௌந்தர லஹிரியாய் கசியும்.
இதற்கு முற்றுப்புள்ளி இல்லை.
மான் தோல் விரித்து
அந்த புள்ளிகளில்
புலியின் வரிகளை
உயிர்ப்பித்துக் கொல்லுதல்
ஒரு இனிய பயிற்சி.
அனிமல் ப்ளேனட்டின்
கோரைப்பல் கிழிப்பும்
ரத்த சதை விளாறுகளும்
காமிராலென்ஸ் வழியே
டாலர் காய்ச்சி மரங்களாய்
கிளை விடுவதைப்போல‌
இந்த‌
நுரையீரல் முறுக்கல்களும்
நரம்பு சொடுக்கல்களும்
"ஃபௌண்டேஷன்" ஆகி
பண மழை கொட்டும்.
பதஞ்சலிக்குள்
பங்கஜ கஸ்தூரியா?
பங்கு மூலதனக்காடுகளா?
தியானிக்கும் போது
நீண்டு வளரும் தாடியில்
சொறியும் கூரிய நகங்கள்
பேன்களின் கொலைக்களம்
லட்சம் ஸ்லோகங்களை
பிய்த்து பிய்த்து தின்பது.
தியானம் முடியவில்லை.
வரட்டிகள் மூடிக்கொண்டபோதும்
அரைவேக்காட்டின் ஆத்மச்சதை ருசி தேடி
ஆந்தைகளும் வல்லூறுகளும்
வந்து சேருகின்றன.
தியானம் இன்னும் முடியவில்லை.
நாபிக்கமலமும் தொப்பூள் கொடியும்
சடைக்குள்ளிருந்து பீய்ச்சப்படும்
கங்கைப் பிரவாகங்களும்
தியானத்தின்
மூட்டு தெறித்த நரம்புகளில்
மின்னல் உமிழ்கின்றன.
கீழ்ப்பாக்கத்தின் ஸ்பெஷல் வார்டுகளில்
பிரம்மசூத்திரம்
கழுவி ஊற்றப்படுவது
தியான வெள்ளம்.
தியானமே இங்கு மெர்ஸல் ஆவதே
இங்கு தியானம்.
இன்னும் தியானம் என்பது.....
நியூரான் முடிச்சுகளில்
சினாப்டிக் ஜங்கஷன்களின்
பர்கிஞ்ஜே செல்கள்
பரங்கிக்காய்களாய் உடைக்கப்பட்டு
கூழாகின்றன...
தியானம் என்பது யாதெனில்...
யார்
என் உதடுகளை  ஊசி கொண்டு
தைப்பது?....

================================================














வெள்ளி, 22 ஜனவரி, 2016

வெள்ளமோ வெள்ளம் (8)






வெள்ளமோ வெள்ளம்  (8)


தேர்தல் கீதை
=====================================================ருத்ரா

மக்கள் வெள்ளத்திலிருந்து
மீண்டு எழுந்து விட்டார்கள்.
மீண்டும்
நிவாரணங்களின் வெள்ளங்களில்
விழுந்து கொண்டிருக்கிறார்கள்.
வெள்ளத்தின் காயங்களுக்கா
கோடி கோடிகளாய்
அந்த கரன்சிக்களிம்பு?
ஊர் அறியும்.
உலகம் அறியும்.
உட்குறிப்பை யாரும் அறிவார்.
இதை ஓரளவு தடுக்கலாம்
என்று எதிர்க்கட்சிகள்
"எங்களையெல்லாம்
கலந்து ஆலோசித்து தான்
பந்திக்கு இலை போட வேண்டும்"
என்றார்கள்.
ஒன்று என்ன
இரண்டு இலைகளாகவே
போட்டு விடுவோம் என்று
வங்கியில் பந்தி போட்டார்கள்
அவை யாவும்
வாக்கு வங்கியில் போய்விழும்
என்ற கணக்கும் போட்டார்கள்.
குமாரசாமி கணக்கெல்லாம் இல்லை.
துல்லியமாய்
கூட்டிக்கழித்துப் போட்ட‌
கூட்டல் கணக்கு.

முதல் தளம் மூழ்கினால் என்ன?
நூற்றுக்கணக்காய்
பிணங்கள் மிதந்தால் என்ன?
அதில் சில‌
இலங்கைக்கரையோரம் கூட‌
ஒதுங்கி மிதந்தால் என்ன?
கணக்குப்புத்தகத்தில் வராத பிணங்கள்
கண்டிப்பாக ஓட்டு போட வருவார்களே
அப்போது மாலை போட்டுக்கொள்ளலாம்.

அது என்ன செம்பரம்பாக்கமா?
இல்லை
"பழைய ஏற்பாட்டில்" வரும்
செங்கடலா?
அப்படி வசதியாய்
அவர்கள்
விளம்பரத்தோடு நடந்து வரும்படி
பிளந்து பெருக?

யானை படுத்தாலும் குதிரை மட்டம்.
ஜனநாயகம் படுத்தாலும்
"பட்டன்கள்" மட்டம் தான்!
பொறிகள் தட்டி
பொறிக்குள் மாட்ட‌
எலிகள் ரெடி.
மசால் வடைகளும் ரெடி.
நிவாரணப்பணி நன்றாகவே நடந்தது
என்ற‌
பலமான முத்திரை விழுந்த பின்னே
எதிர் ஒலிபெருக்கிகளில் எல்லாம்
இனி "ஈனஸ்வரம்" தானே.

மதுவிலக்கு முடியாது என்று
சொல்லிவிட்டார்கள்.
வேண்டுமானால் வசதியாக‌
"ஓட்டிங்க் பூத்தே"
அங்கு ஓடி வரும்.

தேர்தல் வெள்ளம் வரும்போதும்
கரன்சியின் காந்திப்புன்னகையில்
எல்லா அவலங்களும்
அழுகைகளும்
கரைந்தே போகும்.
"சம்பவாமி யுகே யுகே"
கீதையே சொல்லிவிட்டது
அப்புறம் என்ன?
சுப்பிரமணிய சாமிகளும்
சோக்களும்
சுருதி சேர்த்து விட்டார்கள்
அப்படியும் இப்படியும் இருக்கிறதே
என்று
நீங்கள் குழம்ப வேண்டாம்.
எப்படி எப்படிச்சொன்னாலும்
அப்படித்தான் அர்த்தம்.

தேர்தல் கீதை
ஒலிக்க ஆரம்பித்து விட்டது.
"நடந்தவை நன்றாகவே நடந்து விட்டது"
"நடக்கின்றவை நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறது"
"நடப்பவை நன்றாகவே நடக்கும்"

==============================================

புதன், 20 ஜனவரி, 2016

என்ன செய்வது இந்த சன்னல் கம்பிகளை?









என்ன செய்வது இந்த சன்னல் கம்பிகளை?
======================================================ருத்ரா

எத்தனை தடவை தான்
இந்தக் கம்பிகளை.
என் கண்களால் வருடுவது?
ஒரே ஒரு தடவை
அந்த கம்பிகளில்
நிலவின் பிம்பம் பிதுங்கி சிரித்தது
அப்புறம் காணவே இல்லை.
அந்த "கம்பி மத்தாப்புகளில்"
தினமும் ஒரு வெளிச்சத்தைப்பார்த்தேன்
அவள் முகம், காட்டாத
அந்த வெறுமையிலும்
தினமும் புதிது புதிதாய்
பூக்கள் தான்.
கதவுகள் சாத்தப்படும் சத்தம்
கேட்டு ஓடுவேன்.
அவள் அம்மா கதவுகளுக்கு
கொக்கி மாட்டுவது மட்டுமே
தெரிந்தது.
அந்த கொக்கியில்
அவள் எறிந்த
பொன் தூண்டில்கள்
என் மனம் தைத்ததில்
துடித்து துடித்து
வதை படுகின்றேன்.
இந்த கம்பிகளை மராமரம் ஆக்கி
அம்புவிடும்
அவள் கண்கள்
என் இருதய ஆழத்தில்
குத்திட்டு நிற்கிறது.
அந்த இரும்புக்கம்பிகளின்
வானத்தில்
ஒரு தடவையாவது
நட்சத்திரங்களின்
சாரல் தெறிக்காதா?
இன்னும்
கம்பிகள் எண்ணிக்கொண்டு தான்
இருக்கிறேன்.
அவள் எப்போது எடுப்பாள் என்னை
"ஜாமீன்"?

=========================================

செவ்வாய், 19 ஜனவரி, 2016

சாவி






சாவி==================================================ருத்ரா
ஒரு கணித சமன்பாடுஅதோ அந்த பிரபஞ்ச மயான எல்லையில்இருக்கிறது.ஏன் அதுவே தான் இன்னொரு பிரபஞ்சத்தின்மாணிக்கத்தொட்டிலாகவும் இருக்கிறது.ப்ளாங்க் மாறிலி எனும் மெய்ப்பொருள்எப்போது வேண்டுமானாலும்அங்கே உடைந்துசவ்வுப்படலம் ஆகிவிடாலாம்"ப்ரேன் காஸ்மாலஜி"எனும் மாய அடுக்குகள்அங்கே "குண்டலினியின்"ஆயிரம் இதழ் தாமரையாக விரியலாம் அல்லது குவியலாம்.நம் மணிப்பூரகமும் ரேசகமும்கும்பகம் கொள்வது கேவலம் கடவுள் எனும்(அதுவே "கைவல்யம்" எனும்"நௌன் ஃபார்ம்" ஆனதுரகசிய இலக்கணம்)மாயத்தின் மாயங்களுக்குள்மையம் கொள்ளவாஇத்தனை பாடுகள்?மோட்சம் எனும்விடுதலைஇந்த "யூகிளிட்டின் ஃப்ளாட்" பிரபஞ்சத்திலிருந்துவிடுபடுவதே.வளைவு குழைவு நெளிவுஎனும் மில்லியன் துடிப்புகளின்ஆற்றல் சவ்வுகளின் அதிர்விழைகளின் (ஸ்ட்ரிங்)அலைகள் விரிய‌அந்த பாம்புப்படுக்கையில்புரண்டு நெளியவே விரும்புகிறேன்.பெருமாளைஎங்காவது "மோகினி அவதாரம்" எடுத்துகூத்து நடத்த அனுப்பிவிடலாம்.கணித சமன்பாடு இது தான்.ஹோலொகிராஃபிக் பிரபஞ்சம்.பலப்பல பரிமாணங்களைநமக்குத்தெரிகிற நான்கு பரிமாணப்படுதாவாய்சுருட்டி மடக்கி(கர்ல்டு அப் டைமன்ஷன்ஸ்)போக்கு காட்டுவதே அந்த சமன்பாடு."எட்வர்ட் விட்டன்""ரேண்டல்..சுந்தரம்"இவர்கள் அந்த‌"கிராவிட்டான் ப்ராபபளிடி ஃபங்க் ஷன்"ல்அந்த பொன்னான திறவுகோலைஈக்குவேஷன் ஆக்கி விட்டார்கள்ஓங்காரத்தையெல்லாம்எட்டி உதைத்து விட்டுஅந்த "துரிய பிரபஞ்சத்தில்" தொங்கும்நாக்கில் மாட்டிய பூச்சியைபிடிக்கவே இந்த தவளை முனிவரும்(மாண்டூக்யம்)வரட்டு வரட்டு என்று"அலாத சாந்தி பிரகரணத்தில்"அல்லாடுகிறார் என்றுகவுடபாதர் கழறுகிறார்."ப்ரக்ஞான கணம்"எனும் உள்ளுணர்வையே(திருநெல்வேலிக்காரர்கள்ஓர்மை என்பார்கள்)பரிமாணம் ஆக்கிமான் தோல் ஆக்கிஆசனத்தீயில் புடம்போடுவதுமனிதனின் மன விஞ்ஞானம்.எப்படியோ"சமன்பாடு" அந்த சாவியைசம்பிரதாயங்களின்வைக்கோல் படப்பில் தான்எறிந்திருக்கிறது.அதில் தீ வைத்தால் தான்அந்த "தீ" தெரியும்.
===========================================================ருத்ரா






































திங்கள், 18 ஜனவரி, 2016

கல்லிலே ஒரு காளை







கல்லிலே ஒரு காளை
=======================================================ருத்ரா

விழுவது தெரிந்தே
நுனிக்கொம்பிலிருந்து கொண்டு
அடிக்கொம்பு வெட்டினார்கள்.
விழுந்தது அவர்கள் அல்ல‌
நாமும் நம் பண்பாடும் தான்.
"அறிவிக்கை" என்பது கண்துடைப்பு ஆனது.
எதிர்பார்த்தது போல்
தடை வந்தது.
கேடயங்களாய் கருதப்படும்
சட்டங்களே கோடரி ஆனது...மக்களின்
சத்தங்களும் வெட்டப்பட்டு
வீழ்ந்து போயின.
விலங்குகளுக்கு
"கிளிசரின்" கண்ணீர் விட்டவர்கள்
தமிழன் உணர்ச்சியில் எண்ணெய் விட்டார்கள்.
எரிகின்றது!
தமிழனின் தன் மானம்.
கல்லில் கூட
காளை திமிர்த்து தான் நிற்கிறது.
இந்த தமிழன் அல்லவா
மரத்துப்போனான்,
அந்த "காளைக்கு"
வடையும் ஜிலேபியுமாய் முறுக்குமாய்
மாலையிட்டு
குடம் குடமாய்
பால் ஊற்றிக்களிக்கின்றான்.
கோவில்களில்
நந்தியின் காதில் கிசு கிசுத்து
கும்பிடுவான் தமிழன்.
யாராவது ஒரு தமிழன்
"இந்த ஜல்லிக்கட்டுக்காவது
உயிர்த்து வா"
என்று என் காதைக்கடிப்பான்
என்று எதிர் பார்த்தேன்.
வழக்கமான பிதற்றல்கள் தான்.

"என் கூரையைப் பிய்த்து
பொன் மழை பெய்யட்டும்"

"என் மகளுக்கு
என் சாதியிலேயே
என் மதத்திலேயே
கை நிறைய சம்பாதிக்கும் வரன்
அமையட்டும்."

"அடுத்தவன் தலையை
நசுக்கினாலும் பரவாயில்லை
குத்தகை ஒப்பந்தங்கள்
கோடி கோடியாய்
குவியட்டும்"

"அடச்சீ! போங்கடா!
உங்கள் வேண்டுதல்களும்
நேர்த்திக்கடன்களும்"

காளை காதுகளை
மடக்கிக்கொண்டது
யாருடைய கண்ணுக்கும்
தெரியவில்லை.

இந்த மந்தைகள்
"மக்களாய்" பரிணாமம் ஆகும் வரை
அந்தக்காளையும்
அந்தக் கல்லிலேயே இருக்கட்டும்.

==============================================================

சனி, 16 ஜனவரி, 2016

ஊமை மருதமரங்கள்






ஊமை மருதமரங்கள்
=======================================================ருத்ரா

அந்த ஊமை மருதமரங்கள்
நெடிய நின்று
அகன்று கிளை விரித்து
நீல வானத்தை தினமும்
நக்கிப்பார்த்துக்கொண்டிருக்கும்.
அதன் மௌனப்பசியில்
என்றாவது இந்த அண்டம் முழுதும்
விழுங்கப்பட்டு விடுமோ
என்ற அச்சம் எனக்கு உண்டு.
அதன் இலைமகுடங்களில்
வெள்ளைக்கொக்குகள்
வைரங்கள் பதித்தது போல்
வெண் சூரியன் முலாம் பூசும்.
யானைக்கால்களைப்போல்
மருத மரங்களின் வேர்கள்
அந்த தாமிரபரணியில்
கால் நனைத்துக்கிடப்பதை
கண்டு அந்த மணற்பாய் விரிப்பில்
நினைந்து நினைந்து களிப்பேன்.
அந்த மரங்களின் ஊடேயும்
கரு முண்டங்களாய்
நிழல் திட்டுகள்.
இந்த உலகம் முழுவதும்
அந்த சல்லடைக்கண்கள் வழியே
உருகி வழிகின்றன.
நேற்று இரவு உறக்கம் வராமல்
ஒரு மெழுகுவர்த்தியை சுடராக்கி
அவள் ஆடும் விழிகளை
அதில் பார்த்துக்கொண்டே இருந்தேன்.
அந்த சுடர் ஆடி ஆடி
உருகிய மௌன சலங்கைக‌ளாய்
மேஜையெல்லாம் வழிந்தது.
வருகிறேன் வருகிறேன் என்று
ஒளி மொழிகள் உதிர்க்கிறாள்.
வரட்டும் என்று
அந்த ஒற்றைக்கணத்தை
ஊசியாக்கி
ஊழையும் இனிய கூழாக்கி
குடிக்கும் வெறியோடு
அதன் முனையில்  என் தவம்.
இரவெல்லாம்
மனசு பூராவும் ரத்த வெள்ளம்.
இந்த மருத மரத்தின்
வெளிர்சிவப்பு இலைக்கொளுந்துகள் எல்லாம்
உருண்டு திரண்டு
என் விழி நோக்கி வரும்
அக்கினி மழுவாய்....
நான் இமைகளுக்குள் அழுந்திக்கிடந்தேன்.

"மாமா...சக்கரப்பொங்கல் சாப்டிறீங்களா?
இலையும் பூவும் கொடியும்
இழையும் வண்ணத்தில்
குறும்பாவாடையில்
அகன்ற குமிழிக்கண்கள்
குறுகுறுக்க கேட்டாள்
அந்த சிறுமி.
கொஞ்சம் தூரத்தில்
சின்ன மரகதக் குன்றுளாய்
குத்துப்பாறைகள்.
தாமிரபரணி அவற்றைச்சூழ்ந்து
கல கல என்று
நுரையும் நொங்குமாய்
சிரித்து ஓடுகிறாள்.
அதில் ஒரு குடும்பம்
இனிய பொங்கல் விழுதுகளை
இலைகளில் இட்டு
ஆற்று நீரில் அளைந்து கொண்டே
சாப்பிட்டுக்கொண்டிருந்தது.
இந்த பிஞ்சு
அங்கிருந்து தான் வந்திருக்க வேண்டும்.
தழைய தழைய அந்த‌
இலைப்பொங்கலை கையில் வாங்கி
"தேங்க்ஸ்"
என்று சொல்லும் முன்
அந்த மின்னல் குட்டி
மறைந்தே போய்விட்டது

அவள்...
பாவாடை முந்தானையில்
அந்த நட்சத்திரங்களையெல்லாம்
அள்ளி முடிந்து கொண்டு
"கழற்சிக்காய்"களாக்கி
அம்மானை ஆடுவாளே.
இப்போது
சேலைப்பருவம் வந்திருப்பாள்.
வானவில்லில்
அவள் கொசுவம் சுண்டும்போதே
இந்த வானம்
இன்னொரு செவ்வானத்தில்
அமிழ்ந்து போகுமே!
வருகிறேன் வருகிறேன்...
சொல்லியிருக்கிறாள்.
மீண்டும் என் விழிகள்
அந்த மருத மரத்தில்.
அதன் அடியில்
"இசக்கி மாடன்"
கண்கள் பிதுக்கி நாக்கு துறுத்தி
கையில் வெட்டரிவாளுடன்....
பட்டுக்கனவுகளில் படுத்திருந்தாலும்
காதலும் ஒரு
வெட்டரிவாள் தானோ?

===========================================================






விடியல் பரிதி





விடியல் பரிதி
===========================================ருத்ரா

விசும்பின் துளிபெய்து வியன் நிலம் கீறி
மெய் வருத்தம் உரம் சேர்த்து
கனலும் கதிரொடு தன் புனல் இழைத்து
காய்நெல் அறுத்து கழனி வளம் ஆக்கி
ஊஞ்சல் ஞாலம் தன் உயிரீந்து ஆட்டி.
ஓங்கலிடையே தமிழின் ஒளியாய்
உலகு புரக்கும் உழவத்தமிழா..உனை
உறிஞ்சும் தும்பிகள் உலா வந்திடும்
கள்ளம் அறிதி! உள்ளம் தெளிதி!
யானை புக்க புலம் போல நம்
கவளமும் சிதறி வளங்களும் அழிந்து
நிகழ்தரு வல்லிய கொடுமைகள் அகல‌
எழுவாய்!எழுவாய்! எழுதரும் கனலியே
இருள் கிழிக்கும் விடியல் பரிதி
நீயே! நீயே! நீயே தான்!

============================================

வெள்ளி, 15 ஜனவரி, 2016

நுனிக்கொம்பர்கள்







நுனிக்கொம்பர்கள்
======================================ருத்ரா


கொசு உன்னைக்கடித்ததா?
ஐயோ பாவம் கொசு!
அதன் பூங்கொடுக்குகள் என்ன ஆகும்?
கரப்பான் பூச்சிகளுக்கு
ரசாயனப்புகையா?
என்ன கொடுமை? என்ன கொடுமை?
அதன் கம்பீர மீசையில்
மானிடப்பரிமாணத்தின்
அகர முதல
ஆரம்பிக்கிறதே
அதை அழிக்கலாமா?
மூட்டைப்பூச்சியை நசுக்கலாமா?
நம் ரத்த வங்கியின்
முதல் கிளை அலுவலகங்கள்
அங்கு தானே
மெமொரன்டம் ஆஃப் அசோசியேஷன்களை
அரங்கேற்றியது.
வட்டமேஜையில் உட்கார்ந்து கொண்டு
அறிவு ஜீவிகள்
பட்டியல் இட்டார்கள்.
அதன் மூக்கில் ஈ மொய்க்கலாமா?
அது கொம்புகளை ஆட்டும்போது
காற்று அதில் மோதலாமா?
இது காளைகளைப்பற்றிய
இவர்களது ஜீவகாருண்யம்.
காளைகளின் வீரத்தை உடைப்பில் போடு.
அவற்றின் காயடித்து
தோல் உரித்து
இறைச்சியை "ஃபாரின் எக்ஸேஞ்ச்" ஆக்கி
உலக வியாபாரத்தை சூடாய் நடத்து.
இந்த சந்தைப்பொருளாதாரத்தில்
தந்தை மகன்கள் அடித்துக்கொண்டு
செத்தாலும்
அதையும் ரூபாய் பைசாவாக பார்.
டி.வி சீரியல்களில்
அதை வர்ணம் குழைத்துக்காட்டு.
இதன் கடைவாய்ப்பற்களில்
சமுதாய மலர்ச்சி அரைபட்டு கூழாகி
ரத்தம் வழிந்தாலும்
அதைப்பற்றி கவலைப்பட‌
இங்கு யாருமில்லை.
இந்த கார்பொரேட்டுகளின்
நவீன கழிவுகளால் ஏற்பட்ட‌
மாசுகளால் கடல் கலங்கியதில்
நூற்றுக்கணக்காய்
திமிங்கிலங்கள்
பிணங்களாய் கரையொதுங்கின.
உலகத்தின்
மலைப்பிஞ்சுகளையும்
தெள்ளிய ஆறுகளையும்
பொன் மணல் துளிகளையும்
அள்ளித்தின்று
மற்றும் அது போல்
பரம்பரையாய் துளிர் விடும்
வேப்பங்கொளுந்துகளையும்
கோரைப்புல் அருகம்புல் நாயுருவிகளையும்
லாபத்தின் கோரைப்பல் காட்டும்
கொள்ளை வெறியில்
"பேட்டண்டுகள்"ஆக்கி
சுரண்டித்தின்று
ருசி கண்ட பொருளாதாரப்பூனைகளே
காளைகளின் திமில் மீது உட்கார்ந்து
அவற்றின் உயர் இன விந்துகளையும்
மூலதனம் ஆக்க மூளை கசக்கி
அரசியல் சாசனத்தின் அந்துப்பூச்சிகளாய்
ஷரத்துகளின்
சந்து பொந்துகளில் சுரங்கம் வெட்டுகின்றன.
இப்படி குவிய குவிய‌
பங்கு மூலதன வ‌ருவாயின்
ரம்பப்பல் வரைபடங்களை
கணினியில் கண்டு கண்டு
களியாட்டம் நடத்துகின்றன.
ஒரு தொன்மை செறிந்த‌
இனத்தின் மொழியும் பண்பாடும்
இவர்களுக்கு
எந்த லாபமும் ஈட்டாததால்
அந்த இனம்
லட்சக்கணக்கில் அழிக்கப்பட்டாலும்
இவர்கள் இதயத்தை போர்த்தியிருந்த‌
மரத்த முரட்டுத்தோல்
உலக அரங்கில் கூட‌
கள்ள மௌனம் சாதித்தது.
பெட்ரோல் துளிகளை காக்க‌
மானிட ரத்த ஆறுகள் ஓடவைப்பதே
இவர்களின்
பொருளாதார அரசியல் உட்கிடக்கைகள்.
விஞ்ஞானம் வளர்ந்தாலும்
அதைக்கொண்டு லாபம் பெருக்கி
சமுதாய மானிடத்தையே
கசாப்பு செய்வதே
இவர்களின் "தொழில் முனைவுகள்"
தமிழா!
காளைகளின் வாலைப்பிடித்து
விளையாட முடியவில்லையே
என்பதற்கு மட்டும்
நீ
மீசை முறுக்கினால் போதாது!
உன் சினிமா குத்தாட்ட பண்பாட்டை விட்டு
விடுதலையாகு!
மானிடப்பிரம்மாண்டமே
உன் கோவில் மற்றும் தெய்வம் எல்லாம்.
மற்ற மாயவர்ணங்களை
களைந்தெறி!
தமிழா
சிந்துவெளி முத்திரையில் தெரியும்
உன் கம்பீரமான காளையும்
உன் தொன்மையும் களவு போய்க்கொண்டிருக்கிறதே!
"என்ன செய்யப்போகிறாய்?"
இதுவும் ஒரு சினிமாப்பாடல் தான்.
ஆனால்
இந்த திரை வேறு
இதன் கோணமும் வேறு.
எழு!
சிந்திக்க எழு!

======================================================






வியாழன், 14 ஜனவரி, 2016

இதோ ஒரு "ஸெல் ஃ பி "




இதோ ஒரு  "ஸெல்  ஃ பி "
==============================================ருத்ரா

யார் இந்த மானிடப்புழு?
நெளிந்து கொண்டிருந்தாலும்
நெளிந்த தடம் எல்லாம்
மின்னல் உமிழ்வுகள்.
ஆயிரம் கைகள்.
ஆயிரம் கண்கள்..தலைகள்.
ஆயிரம் ஓசை எழுப்பும்
ஆயிரம் நயாகராக்களை
கடைவாயில் ஒழுக விடும்
கடையனுக்கும் கடையவன்.
ஒளியாக‌
ஒலியாக‌
நரம்புகளைத் துளை போடும்
அதிர்வுகளை
இரைச்சல்களை வெளிச்சங்களை
சர்க்கரைப்பொங்கலாய்
தின்று கொண்டிருப்பவன்.
எங்கிருந்தோ
எதையோ
எப்படியோ
இழுத்துவந்து வெளியே போட்டு
அதன்
கருப்பொருள் தெரியாமல்
ஆரவாரம் செய்து கொண்டிருப்பவன்.
காரணமே கரு தரிக்காமல்
காரியமாய்
பெரிய
அசிங்கமான அழகான‌
ரெட்டை மயிர் மீசையை
ஒற்றி ஒற்றி
இந்த பில்லியன் ஆண்டுகளை
துப்பறிய வந்த கரப்பான் பூச்சியாய்
துரு துருப்பவன்..
கொடிய மரண வடிவத்தை
வைரஸ்ல் புதைத்து
தன் பிம்பம் காட்டுபவன்.
"செர்ன்"உலையில்
குவார்க் குளுவான் குழம்பை
தாளித்துக்கொண்டிருப்பவன்.
ஹிக்ஸ் போஸானயும்
நியூட்ரினோவையும்
கடுகு வெடிக்க வைத்து
கலகச்சமையல் செய்து கொண்டிருப்பவன்.
சீசனுக்கு சீசன்
எந்த நாட்டிலாவது
ரத்தம் கொப்புளித்துக்கொண்டிருப்பான்.
உண்மை சதை பிய்ந்து
கிடக்கும் போது
உண்மையை மொய்த்துக்காட்டும்
ஈக்களாய் அங்கே
அலையடிப்பான்.
வெள்ளமாய் வந்து
தேர்தல் பிரகடன‌ங்களை
கொட்டு முழக்குவான்.
ஈசல்களின் சிறகுகளில்
ஈஸாவாஸ்யம் ஸ்டிக்கர் ஒட்டி
தெறிக்க வைப்பான்.
காளையாய் வந்து
கொம்பை ஆட்டி ஆட்டி
ஒரு தேவரகசியத்தை
தெருவெல்லாம்
மூக்கணாங்கயிறு வழியே
மூசு மூசு என்று
மண் குத்தி
மண் கிளறி
தன் "பார் கோடு" தனை
தரையில் கிழித்துக்காட்டுபவன்.
வதை செய்பவர்கள்
வாலை முறுக்குபவர்கள் அல்ல.
பிரபஞ்ச மூச்சையே சுவாசிக்கத் தெரியாமல்
ஒரு வட்டமேஜைக்குள்
வார்த்தைகளை
சவைத்துக்கொண்டிருப்பவர்கள்
கையில் தான் வெட்டரிவாள்
என்று
கொதித்துக்குதிப்பவன்.
படீரென்று
கீழே விழுந்து
சுக்கல் சுக்கலாக‌
நொறுங்கியது அது.
அது நிழலா?
நிழலின் இமேஜா?
உடுக்கையிலிருந்தும்
வெர்ச்சுவல் ரியாலிட்டியின்
தூரிகை மயிர்கள் துடித்தன.
கோணா மாணா சித்திரத்துள்ளே
கோணல் கோட்டின் இன்ஃபினிடியில்
காட்சியில் பிடி படாத நேர்கோடு
வளைந்து வளைந்து
வக்கிரம் காட்டியது.
யார் அவன்?
எது அது?
அது வேறு ஒன்றுமில்லை.
தன் "செல்ஃபியை"
கீழே எறிந்த‌
இறைவனே அது!

===============================================



புதன், 13 ஜனவரி, 2016

பூங்கா பெஞ்சு






பூங்கா பெஞ்சு
==========================================================ருத்ரா

என் சட்டைப்பையில்
ஒரு நூறு ரூபாய் நோட்டு பார்க்க‌
நான் என்ன செய்யலாம்?

ஏதாவது
ஒரு விளம்பரக்கம்பெனியின்
முதுகு சொறிந்து
முச்சந்திகளிலும்
வீட்டு வாசல்களிலும்
இன்னும்
கோவில் திருவிழாக்களிலும்
நசுங்கிய குவளைகளில்
ஏற்கனவே போட்ட சில சில்லரைகளை
வைத்து சத்தம் கிளப்பி
அனுதாப ஈக்கள் மொய்க்கவிட்டுக்கொண்ட‌
அவர்களைப்போல‌
அந்த விளம்பர நோட்டீஸ்களை
நானும்
வலுக்கட்டாயமாக்கப்பட்ட‌
புன்னகையுடன்
விநியோக்கலாம்.
இல்லாவிட்டால்
ஏதாவது ஒரு கட்சிக்கு
அவர்கள் தரும் உடையோடும் கொடியோடும்
வேடந்தாங்கிய‌
வேடந்தாங்கல் பறவைகளையாய்
கொத்து கொத்தாய்
அணிவகுத்து கோஷம் போடலாம்.
இல்லாவிட்டால்
ஒரு பால் காரரிடம் வாங்கிய‌
பால் கேனோடு
சைக்கிள் மிதித்து
பால் ஊற்றி விற்றுத்தந்து
கூலி பெறலாம்.
இல்லாவிட்டால்
நியூஸ் பேப்பர் ஏஜெண்டிடம்
வேலை கேட்டு
கட்டு கட்டாய்
சுடச்சுட செய்தி தாங்கிய பேப்பர்களை
மார்கழிக்குளிரில்
கோலம் போட்ட வாசலில் வீசி
ஊர்வலம் போகலாம்.
எவ்வளவோ வழிகளில்
நுழைந்து புகுந்து தான்
அந்த நூறு ரூபாய் தாளை
விரட்டிப்போகும்
பொருளாதாரத்தை தான்
நான் நக்கிப்பார்க்க‌
அந்த நீண்ட நாக்கு தொங்கும்
நாயுடன் அலைய வேண்டியிருக்கிறது.
பி.ஏ பட்டம் பெற‌
நான் கரைத்துக்குடித்த
ஆடம்ஸ்மித் ரிகார்டோ மற்றும்
மேனார்டு கீன்ஸ் பொருளாதாரங்களும்
அந்த லிக்குடிட்டி ப்ரிஃபெரன்ஸ் மோடிவ்
கோட்பாடுகளும்
இங்கே பல்லு குத்தும் துரும்புகளுக்கும்
பிரயோசனமில்லை.

இன்னும் நான் தொலைதூரம் போகவேண்டும்
என் சட்டைப்பையில்
நூறு ரூபாய் நோட்டைப்பார்க்க.
சட்டைப்பையில் நெருடியதை
எடுத்தேன்.
துண்டு சீட்டு.
இன்று மாலை அந்த பூங்கா பெஞ்சில்
சந்திக்கலாம்.
அவள் எழுதிய சீட்டு.
கோடி ரூபாய்க்கும் மேல்
என்று பத்திரப்படுத்திக்கொண்டே
அலைகிறேன்.
அந்த "இன்று"
எத்தனையோ "இன்று"களை
கடந்து சென்று விட்டது.
பூங்கா பெஞ்சுக்கு
என்று செல்வது?

=====================================================ருத்ரா


இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!




https://www.google.co.in/search?q=thiruvalluvar&espv=2&biw=1128&bih=707&tbm=isch&imgil=02qMlW_5W4NqhM%253A%253BG

(LINK with THANKS)


இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!
======================================================ருத்ரா

உழவன் என்றொரு
உயர்ந்ததோர் தமிழன்
கிழக்கில் உதித்த கதிரையும் 
ஒளி பாய்ச்சி நாற்று நட்டு 
வழி காட்டி நன்று வைத்தான்.
விசும்பின் துளி கண்டு
பசும்பயிர் வளங்கள் கண்டான்.
இஞ்சியும் மஞ்சளும் கரும்பும்
சங்கத்தமிழ்ச் சுவைகள் ஆகி
தமிழ்ப் புத்தாண்டு  மலரும் இன்று.
பொங்கல் பொலிக!
பொங்கலோ பொங்கல்!
வள்ளுவனை உலகினுக்கே தந்து
வான் புகழ் கொண்ட
தமிழ் நாட்டின் 
இனிய தமிழ் புத்தாண்டு இன்று.
எல்லோருக்கும் என்
இதயம் கனிந்த‌
இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!


=======================================================ருத்ரா


ஞாயிறு, 10 ஜனவரி, 2016

வாசல்


வாசல்
=============================================ருத்ரா இ.பரமசிவன்.

உன் நந்தவனம்
பட்டாம்பூச்சிகளைக்கொண்டு
மிடைந்து வைக்கப்பட்டிருக்கிறது.
வானவில்
அந்த ஆகாயப்பறவையின்
வர்ணப்பீலிகளாய்
உனக்கு
தோரணம் கட்டுகிறது.
உன் முறுவல் கொண்டு
உலகத்து அழுக்கையெல்லாம்
துடைத்து எறிந்து விடலாம்.
உன் விழி வாசல்
உள்ளே  உள்ளே
எத்தனை வாசல்களை
திறந்து கொண்டே போகிறது.
காலின் அடியில்
உடைந்த கண்ணாடிச்சிதறல்கள்
அத்தனையிலும்
பிம்பங்கள்.. பிம்பங்கள்..
யார்  யாரோவாய்...
ஆண்டு கணக்கில்
வந்து விழுந்து கிடந்த
இன்னும்
பிரிக்கப்படாத கடிதங்களாய்
தரையில்!
காதலின் பெருமூச்சு
ஒன்று கூட
அங்கே இன்னும்
எழுத்துக்கூட்டி
வாசிக்கப்படாமல்..
தூசிகளின் யுகங்களாய்
கிடக்கின்றேன்.
நானும்  அங்கு!

=============================================




சனி, 9 ஜனவரி, 2016

கொம்புகளின் அரசியல்








கொம்புகளின் அரசியல்
===================================================ருத்ரா

சிந்து வெளி கால‌ முத்திரையிலிருந்தே
காளை வடிவத்தில்
தமிழனின் புறநானூறும் கலித்தொகையும்
சுவடு பதித்து விட்டது.
ப்ளூ க்ராஸ் என்று
புசு புசு
பொமரேனியன்களுக்கும்
வெல்வெட் சப்பைமூக்கு
ஒட்டு நாய் குட்டிகளுக்கும்
கட்டில் மெத்தை போட்டு
பராமரிக்கிற அறிவு ஜீவிகளே
மலைப்பாம்பு குட்டிகளையும்
ஒட்டியாணமாயும்
சங்கிலியாயும் மாட்டி
அழகு பார்த்துக்கொள்பவர்களே
தொன்மை இனம்
பழங்குடிகளின் மொழி
அதன் மண்வாசனை
இவற்றின்
கருவூலங்களை காப்பாற்ற எண்ணியதுண்டா?
பண்டை இனமான தமிழ் இனங்களின்
இதயத்துடிப்புகளை
உங்கள் நெஞ்சில்
வரலாற்றியல் எனும் ஸ்டெதஸ்கோப் வைத்து
அந்த நைந்த ஒலிப்பிஞ்சுகளை
மொழிப்பெயர்த்த துண்டா?
ஒட்டு மொத்த ஐ.நா வும்
அந்த லட்சம் பிணங்களையும்
அலட்சியம் செய்த‌
ஒரு மோசமான மனசாட்சிப் படுகொலையின்
அடையாளம் தானே
ஈழ தேசத்தின் ஈனக்குரல்கள்.
தமிழ் இனப்பண்பாட்டுக்கூறுகள்
மாறி மாறி வந்த‌
இந்திய ஆட்சியாளர்களுக்கு
இன்னும்
உறுத்திக்கொண்டு தான் இருக்கின்றன.
அதன் வெளிப்பாடே
விளையாட்டுக்காளைகளை
விஷமத்தன பட்டியலில் சேர்த்தது.
தமிழ் முதுகில் குத்துவதற்கு
சில மேட்டுக்குடித்தமிழர்களும்
துணை போயிருக்கலாமோ
என்று நினைக்கையில்
தமிழர்களின் ஒளியை விழுங்கிவிட
மீண்டும் ஒரு "இருண்டகாலத்தின்"
சூரிய கிரகணம் வந்திடுமோ
என அச்சம் வருகிறது.
தமிழர்கள் கொம்புகள் இல்லாத‌
மோளை மாடுகளாய்
பரிணாமம் அடையப்போகும்
கடைசித்தருணம் இது.
தமிழா! விழித்துக்கொள்!
மாற்றான் தோட்டத்து மல்லிகையை
பார்த்துக்கொண்டே
உன் விழித்தாமரைகளை
குருடாக்கிக்கொள்ளாதே.
இது வெறும் கொம்புகளின் அரசியல் அல்ல.
நம் குமரிக்கண்டத்து தமிழுக்குள்
குமுறும் தமிழும் குமிழியிடுகிறது
என்பதை புரிந்து கொள்.

======================================================




வெள்ளி, 8 ஜனவரி, 2016

பஞ்சு மிட்டாய்




பஞ்சு மிட்டாய்
===================================================ருத்ரா இ.பரமசிவன்

காயமே இது பொய்யடா
என்பதும் பொய்யடா.
பஞ்சு இனிப்பு  அடை த்த
கனவுகள் கண்களில் மிளிர
வாழ்க்கையை
சில்லறை சில்லறையாக
விற்று வாங்கி
நகர்ந்து செல்லும் உற்சாக விழா.
மதுரை கோ.புதூரில்
அருள் மிகு கள்ளழகருக்கு
எதிர் சேவை திருவிழா.
பல்லக்கு
கண்ணாடி பிம்பத்தில்
அழகர் திரு முகம்!
பக்தர்கள் பரவசம்.
இந்த ஆண்டு
அழகர்
 பச்சைப்பட்டு உடுத்திவந்தால்
பருவ மழை பூரிக்கும்.
பச்சைநிறமே அங்கு
சோழி குலுக்கிய "ப்ராபபிலிடி."
அந்த அழகரின் கண்கள் வீசும் ஒளியில்
தெரிகிறதா
"ருதம்பரா தத்ர பிரக்ஞா ?"
பதஞ்சலி யோக  சூத்திரத்தின்
48 ஆம் சூத்திரம்.
(சமாதி பாதம்)
"உண்மையையே உள்ளுணர்வு
உடுத்தியிருக்கும்"
என்பதே அர்த்தம்.
அந்த பக்தர்களின் உள்ளுக்குள் எல்லாம்
பச்சைப்பட்டு
நெசவு செய்யப்படும்
தறி ஒலியே கே ட்டுக்கொண்டிருக்கிறது.
பல்லக்கு தூக்கிகளாயினும் சரி
மயில் விசிறி ஏ ந்தியவர்களாயினும் சரி \
ஆட்டுத்தோல் பையிலிருந்து
தண்ணீர் பீய்ச்சுபவர்களாயிருந்தாலும் சரி
உலககச்சாயம் கழன்ற
"நிர்பீஜ சமாதி"யில் ஆழ்ந்து போனார்கள்.
அதாவது
எந்த கர்மவினைகளின் மூல விதைகளும்
 மூச்சிழந்து அமைதி  எனும்
சமாதி அங்கே ஜன வெள்ளமாய்
பரந்தாமனுக்கு
பாம்புப்படுக்கை போட்டது.
பெருமாள் இடம் மாற்றிக்கொண்டார்.
பல்லக்கில் பக்தர்கள்.
பல்லக்குத தூக்கியாய்
அந்த கள்ளழகன்
அநாயசமாய் அற்புதமாய்
ஊர்ந்து வருகின்றான்.

=========================================================







வியாழன், 7 ஜனவரி, 2016

ஓடியே போய்விட்டார்.




ஓடியே போய்விட்டார்.
================================================ருத்ரா.இ .பரமசிவன்.

கடவுளே
உன் முகச்சித்திரம் வேண்டுமே
எனக் கேட்டேன்.
அந்த கிருஷ்ணன் காட்டியிருப்பானே
விஸ்வரூபம்
என்றார்.
சமஸ்கிருதம் புரியவில்லை
என்றேன்.
"கோளில் பொறியில் குணமிலவே ....."
புரிகிறது...புரிகிறது.
இன் தமிழ் புரிகிறது...
"எண்குணத்தான்.." தான் புரியவில்லை.
சரி போகட்டும் .
அந்த தேவகுமாரன்
மலைச்சொற்பொழிவில்
விளக்கியிருப்பானே
என்றார்.
அவர் பிய்த்துக்கொடுத்த ஜீவ அப்பம்
இந்த கடைக்கோ டியில் உள்ள
எத்தியோப்பிய எலும்புக்குழந்தைக்கு
ஊட்டுவதற்குள்
எந்திரத்துப்பாக்கிகள் வந்து
இந்த உயிர்கள் எனும்
கார்ட்டுன் சித்திரங்களைக்கூட
கூழாக்கிப் போயினவே.
உன்னிடம் விளக்கம் கேட்பதற்குள்
நீ
நெஞ்சில் ஆணி அறையப்பட்டு
தலையில் முட்கிரீடம் நசுக்க
முடிந்து போய்
மீண்டும் முளைத்து
முளைத்த சுவடு தெரியாமால்
போதுமடா சாமி என்று
ஓடி விட்டாயே.
அதோ
அந்த  தீர்த்தங்கரிடம் போய்க் கேள்.
அதற்கு அவர்
"இந்த உடம்பு உயிர் என்ற ஆடைகளே தான் சுமை.
நிர்வாணம் கொள்" என்றார்.
அந்த மூளி நீலவானத்தை
கண் மூடி வைத்துக்கொண்டு
என்ன செய்வது?
"புத்தனைப்போய் பா ர்த்தாயா?"
இலங்கையின் அரசமர நிழலில்
அவன் கண்ணெதிரேயே
லட்சம் தமிழ்ப்பிணங்களை தின்னும்
வெறியைபார்த்த பின்
அவரே அமரர் ஆனார்.
அந்த அரசமரம் இப்போது
வெறும் துப்பாக்கிகளின் எலும்புக்கூடு.
மானிட அன்பின் அந்த
நெடிய வானத்தின்
முகடுகளிலிருந்து
ஒலிகளாகவும் எதிரொலிகளாகவும்
தூவப்படும் அந்த
இறைநேசத்தை
புரிந்து கொள்ளேன்.
அதற்கு மண்டியிட்டு நிமிர்வதற்குள்
இந்த தோட்டாக்கள் தின்றது போக
எத்தனை பேர் மிஞ்சுவோம்
என்று தெரியவில்லையே?
நான்
என்ன செய்ய
அந்த "பிக்காசோ"வைக்கேள்
ஏதாவது கிறுக்கித்தருவார்.
நிறுத்துங்கள்.
நீங்கள் செய்ததைத்தானே
அவரும் செய்கிறார்.
நாங்களாகவே குழம்பிக்கொண்டு
நாங்களாகவே தான்
புரிந்து கொள்ள வேண்டுமாமே !
ரகசியத்தைக்கண்டு பிடித்து விட்டாயல்லவா
ஆளை விடு.
கடவுள்
ஓடியே போய்விட்டார்.
இந்த வர்ணங்களையும் தூரிகையையும்
வீசி எறிந்து விட்டு.







புதன், 6 ஜனவரி, 2016

விடிந்து விட்டது




விடிந்து விட்டது
============================================ருத்ரா இ.பரமசிவன்

விடிந்து விட்டது
அது என்ன
அறுபத்தியொன்பது நாழிகை
ஆனபின்னும்
அதே இடத்தில் நாம் ?
மூவர்ண ரோஜாவை
காட்டினார்கள் சூரியன் என்று.
நான்கு வர்ண முட்காடுகள் மட்டும்
மண்டிப்போனது.
நம் தேசப்படத்தின்
அந்த அழகிய முக்கோணத்திரு உருவம்
ஒரு பெரிய்ய்ய்ய்ய திருவோடு போல் ஆனதே
பிச்சை போடுபவர்கள்
வாரியிறைக்கும் புகழ்மொழிகள்
நம் நாட்டின்
ஆன்மாவின் இதயத்தையும்
குதறித்தின்பது
நமக்கு ஏன் இன்னும் தெரியவில்லை.
கணிசமாக வளர்ந்து விட்டோம் என்று
கணினிகளின் பாறாங்கல்லைக்  கொண்டு அல்லவா
நம்மை நசுக்குகிறார்கள்.
வயிற்றில் ஈரத்துணியோடும்
இடையில் கோவணதோடும்
வல்லரசுக் கனவுத் தூண்டில்
தூண்டிகொண்டே இருப்பதில்
"மங்களயான் " பறக்க விடுகிறோம்.
அதில் உள்ள "செவ்வாய்த்  தோஷத்திற்கு"
பரிகாரம் தேடி
கங்கைகளை "கும்பமேளாக்களால்"
சாக்கடையாக்கிக் கொண்டிருக்கிறோம்.
நெஞ்சு பொறுக்குதில்லையே ...
ஆம்
நெஞ்சு கொதிக்கத்தான் செய்கிறது.

==============================================